எழுத்தாளர்: அனந்த் ரவி
தாய் மனச் சங்கமம்.
இரவும் நிலவும் வளர்ந்து கொண்டிருந்தன. அந்த பங்களாவில் கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருந்தன. எங்கும் வண்ண விளக்குகள். புல்வெளி முழுவதும் நாற்காலிகளும், மேசைகளும் நிறைந்திருந்தன. துள்ளல் இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
அலங்கரிக்கப் பட்டிருந்த தன் மகனின் பெரிய அளவு படத்தையே கண்களில் கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா. “ஹரி உன் தியாகம் மகத்தானது. இராணுவ சேவையே உயிரெனக் கொண்டிருந்த உன்னைக் கொன்ற அந்தத் தீவிரவாதியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இரண்டு நாளில் அவன் உடல் ஊசலாடப் போகிறது. இந்த நாளுக்காகத்தான் நான் பிரார்த்தனைகளோடு காத்திருந்தேன். இதோ அவன் சாவை நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.” உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் இருந்தனர். திடீரென வாசல் கேட் அருகே ஒரே கூச்சல் குழப்பம். “அவளை விடாதே, அடி, கொல்லு.” என்று பலரும் கத்திக் கொண்டிருந்தனர். வித்யா என்னவென்று பார்க்க ஓடினாள். அந்தத் தீவிரவாதியின் தாய் மஹிமா அங்கே நின்றிருந்தாள் “வித்யா உன்னிடம் மன்னிப்பு கேட்க என்றே இத்தனை காலமும் காத்திருந்தேன். இன்று என் மகனுக்கு தூக்கு உறுதியாகி விட்டது. இன்றுதான் உன் மனம் சமாதானமாகி இருக்கும். எனவே வெட்கத்தை விட்டு உன் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கவே வந்திருக்கிறேன். நீ மன்னித்தால்தான் என் அவமானம் துடைத்தெறியப் படும். உன் மகனும் என் மகன்தான். ஒரு தாயின் மனம் எனக்குப் புரியாதா? தயவு செய்து என்னை உள்ளே அனுமதி”
அந்தத் தாயின் வேண்டுகோளைக் கேட்டு ஆச்சரியப் பட்டாள் வித்யா. மஹிமாவை உள்ளே அழைத்தாள். “வித்யா என் மகன் கடைசி தடவையாக என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்டானாம். நான் மறுத்து விட்டேன். அவனைப் போய் பார்ப்பதை விட உன் மன்னிப்புதான் எனக்கு முக்கியம்” என்ற மஹிமா சடாரென்று வித்யாவின் கால்களில் விழுந்தாள். பதறிப்போய் அவளைத் தூக்கினாள் வித்யா. அவள் மனம் வெட்கியது. “சகோதரி, என்னை மன்னியுங்கள் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் உங்களுக்கு மகன். உங்கள் வயிற்றில் பிறந்தவன். என் மகனின் சாவுக்காக மன்னிப்புக் கேட்கிறீர்கள் நீங்கள். உங்கள் மகனின் சாவை மனிதத்தன்மையே இல்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் நான். உங்கள் மனம்தான் தாய்மையின் உண்மையான வெளிப்பாடு. வாருங்கள் நாமிருவரும் சேர்ந்தே போய் உங்கள் மகனைப் பார்ப்போம். அவன் அமைதியாக மரணிக்கட்டும்” என்று மஹிமாவை அணைத்துக் கொண்டாள் வித்யா.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: