எழுதியவர்: நா. பத்மாவதி
தேர்வு செய்த படம்: படம் 2
விஷ்ணு, ஒவ்வொரு இரவும் வீட்டின் மாடியில் உட்கார்ந்து நிலவை பார்த்து “நிலாவே வா செல்லாதே வா” எனப் பாடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனுக்கு நிலா ஒரு சாட்சி. அவன் காதலின் நினைவுகளை புதைத்து வைத்துள்ள ஒளி. அவன் இரவுகளுக்கெல்லாம் ஒரு மெளன சாட்சியாய் அவள்.
ஆம், அவள் – நிலா.
பால்யத்தில் இருந்து இருவரும் பள்ளியில் சேர்ந்தே படித்ததில் பழக்கம். தினமும் ஒரே பஸ்ஸில் பயணம். ஆரம்பத்தில் சின்ன சின்ன பேசல்கள், பின்பு சிநேகம், மெதுவாக ஒரு பந்தம். அந்த பந்தம் ஒரு நாள் காதலாக மலர்ந்தது.
இப்பொழுது இருவரும் நல்ல உத்யோகத்தில் உள்ளார்கள். ஆனால் பந்தம் தொடர, தினமும் கடற்கரையில் சந்தித்தனர். அவர்களின் காதலுக்கு மெளன சாட்சியாக வான்நிலவு.
“நீ அருகிலுள்ள போது வான்நிலவு மடி சேர்ந்தது போல் ஓர் உணர்வு. நீயில்லாத இரவுகள் எனக்கு வெறுமை, விஷ்ணு…” அவள் சொல்லிய வார்த்தைகள் இன்னும் அவனுக்குள் ஒலிக்கின்றன.
நிலா அவனுடைய ஒளி, ஆனாலும் அந்த ஒளி அவனிடம் இருந்து மங்கியது.
ஏன்?
சமூகத்தின் கட்டுப்பாடுகளால் அவள் குடும்பம் திருமண முடிவை எடுக்க அனுமதிக்கவில்லை. நிலா வீட்டில் பேசப்பட்ட திருமண நிச்சயிப்பை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அப்பொழுதும் அவர்களின் காதலுக்கு மெளன சாட்சியானது வான்நிலவு.
அன்று கடைசியாக சந்திக்க, இருவரும் கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.
“நீயும் என் நிலவே, இருந்தாலும் எப்போதும் என்னுடன் இருக்க முடியாத நிலா போல…” என்ற விஷ்ணு
நிலாவின் கைகளைப் பிடித்தான்.
“நிலா எப்போதும் பிரியாது, விஷ்ணு. நீ பார்த்தால், நான் அங்கேயே இருப்பேன்.” என்று அவள் சொல்லிய அந்த வார்த்தைகள் அவனுக்கு பல வருடங்கள் கழிந்தும் ஒலிக்கிறதே.
அன்று இரவு, அவன் நிலவை பார்த்துக் கொண்டிருந்த போது,
“நீயும் என்னை நினைக்கிறாயா நிலவே” என வான்நிலவைப் பார்த்துக் கேட்க, “நீ பார்க்கும் நிலா, இன்றும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது.” என்று சொல்வதைப் போல நிலவு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.