எழுதியவர்: திவ்யா கந்தசாமி
தேர்வு செய்த படம்: படம் 3
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டதும் எல்லோரும் ஒரு கணம் திகைத்து மீண்டனர். காரணம் அது ஒரு முதியோர் இல்லம். என்னதான் வசதிகள் இருந்தாலும் மனம் விட்டுப் பேசிச் சிரிக்க மக்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் எதொவொரு வருத்தம் இருக்கவே செய்தது. வயோதிகம் என்பது மற்றுமொரு மழலைப் பருவம் இல்லையா? ஆனால் அப்போது அரவணைக்கத்தான் ஆளில்லை. அப்படி அரவணைக்க ஆளின்றி அவ்வில்லம் தேடி ஆட்டோவில் வந்தவர் தான் ராஜம் பாட்டி. கணவனை இழந்து பிள்ளைகளை ஒற்றையாக நின்று கரை சேர்த்தவர். அறுபது வயதைத் தாண்டியவர் என்பது தெரியும்படியான உடற்தோற்றம் இருந்தது. ஆனால் ஏற்கனவே இல்லத்தில் இருப்பவர்களிடம் இருந்து இவர் சற்றே வித்தியாசமானவர். காரணம் எல்லோரும் வாடிய முகத்தோடு இல்லத்துள் நுழைந்தனர். இவரோ கம்பீர நடையோடு உள்நுழைந்தார்.
வாங்க பாட்டி, வாங்க! காலையிலேயே தகவல் வந்தது நீங்க வர்றதா, என முகம் மலர ராஜம் பாட்டியை வரவேற்றார் இல்ல நிர்வாகி ரத்னா. வர்றேன்டிமா வர்றேன். இனி இங்க தான் எல்லாம்னு ஆயிடுச்சு சத்த மெல்ல வந்தாலும் தப்பில்லைடி என செட்டுப்பல் மின்னச் சிரித்தார் ராஜம் பாட்டி. வந்த சில நாட்களிலேயே இல்லத்திலுள்ள அனைவரிடமும் ஒட்டிக் கொண்டார் பாட்டி. ஆனால் எழுபது வயதைக் கடந்த சுந்தரம் தாத்தா மட்டும் முகம் கொடுத்து ஒருவரிடமும் பேசாமலே இருந்தார். அதைக் கவனித்த ராஜம் நிர்வாகியிடம் விசாரிக்க, அவர் சுந்தரம் தாத்தா ரொம்ப பாசக்காரர், ஆனா அவர் தங்களோட இருக்கறதை தொந்தரவாக எண்ணி அவர் குடும்பத்தார் இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போய் மாசம் எட்டாச்சு. இன்னும் ஒருத்தர் கூட எட்டிப் பார்க்கலை. அதான் மனசு இறுகிப்போய் அவர் ஒருத்தரிடமும் பேசறதே இல்லை என சொல்லிச் சென்றார்.
ஏதோ தோன்றியவராய் சுந்தரத்திடம் சென்ற ராஜம், வணக்கம் நான் ராஜம், என் கடைசிக் காலத்தைக் கழிக்க இந்த இல்லத்துக்கு வந்திருக்கேன். என் வீட்டில் இருந்தவரை மாடா உழைச்சு ஓடாத் தேஞ்சேன், இப்போ கவனிக்க ஆளில்லை கை விரிச்சுட்டா, அதுக்காக அப்படியே கெடந்து அழ மனசில்ல, அதான் நானே கிளம்பி இங்கே வந்துட்டேன் என ஆரம்பித்து அரைமணிநேரம் பேசிய பிறகு புன்னகைத்து விடைபெற்றார் ராஜம். ஒரு வாரம் வரை அமைதியாகவே இருந்த சுந்தரம் இப்போது பேசத் தொடங்கி இருந்தார். என் ஆத்துக்காரி தவறின பிறகு நடை பிணமாத்தான் இருந்தேன். பேரன் பேத்தினு வந்த பிறகு வாழ்க்கைல ஒரு பிடிப்பு வந்துச்சு. அவுக வளர்ந்த பிறகு மீண்டும் தனிமை. என்ன வாழ்க்கைனு வெறுப்பு வந்துச்சு. வாழவே தகுதி இல்லாதவன்னு என் மேல எனக்கே கோபம் வந்துச்சு. அதனால தனிமையை நாடினேன் என நிறுத்தானார் சுந்தரம்.
நாம நினைக்குறது மாதிரி தான் வாழ்க்கை இருக்கனும்னா அதுல சுவாரஸ்யமே இருக்காது அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை இது, இன்னைக்கு நம்ம கூட இருக்குறவங்க நாளைக்கே இல்லாம போகலாம் அப்போ வருத்தப்பட்டு பிரயோஜனமில்லே, அதனால இருக்கறவரை சந்தோஷமா வாழணும் அதான் என் எண்ணம் என ராஜம் கூறி நிறுத்தியதும் அவரது வார்த்தைகளைப் பிடித்து நம்பிக்கையாய் நின்றார் சுந்தரம். இல்லத்தில் உள்ள அனைவரிடமும் சகஜமாகப் பேசத் தொடங்கினார். ராஜமும் சுந்தரமும் தங்களுக்குள் ஏதோவொரு பூர்வ ஜென்ம பந்தம் இருப்பதாக உணர்ந்தனர். அந்த கண்ணுக்குத் தெரியாத அன்பு அவர்கள் இருவரையும் ஒண்றிணைத்தது. இந்த அன்பு காதலையும் காலத்தையும் கடந்து வாழும். இரண்டு பேர் சேர்ந்து வாழத்தான் காதல் வேண்டும். சேர்ந்து பயணிக்க தூய்மையான அன்பு போதும்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.