எழுதியவர்: குட்டிபாலா
தேர்வு செய்த படம்: படம் 6
சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் வில்லாக்களடங்கிய ஒரு பெரிய குடியிருப்பு வளாகம். புதிதாக வில்லா வாங்கி குடியேறிய சுகுணாவும் சேகரும் மகள் மஞ்சுளாவுக்கு ஒருவாறு முட்டி மோதி அருகில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பில் அட்மிஷன் வாங்கி விட்டார்கள். ஒரு பெரும் பிரச்னை முடிவுக்கு வந்ததே என்று மகிழ்ந்த அதே நேரம் புதிதாக ஒரு கவலை சுகுணாவுக்கு. சேகரிடம் “ஒரு வழியாக மஞ்சுளாவை பள்ளியில் சேர்த்து விட்டோம். ஆனால் மாலை 3:30 மணிக்கு அவள் வீட்டுக்கு வந்து விடுவாள். நாம் இருவருமே வேலைக்கு போவதால் என்ன செய்வது?” என்று கேட்டாள்.
சேகர் “கவலைப்படாதே மும்பையில் வேலை பார்க்கும் என் நண்பனின் தாய் பாகீரதி அம்மாள் பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கிறார். அவரிடம் முன்பே பேசி விட்டேன். மஞ்சு மாலையில் பள்ளியிலிருந்து வந்ததும் அவரோடு அவர்கள் வீட்டில் இருப்பாள். நாம் வந்ததும் கூட்டிப் போவதற்கு ஏற்பாடு செய்துவிட்டேன்” என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் சுகுணா.
இருவருமாக குழந்தை மஞ்சுவையும் அழைத்துக்கொண்டு பாகீரதி அம்மாள் வீட்டுக்கு சென்றனர். அவர்களை வரவேற்றவர் “என் மகன் கிரியின் நண்பன் என்பதால் நீயும் எனக்கு ஒரு மகன்தான். நானோ இங்கே தனியாக இருக்கிறேன். குழந்தை மஞ்சுளா சிறிது நேரம் என்னுடன் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே” என்றார்.
மாதங்கள் ஓடின. மஞ்சு பாகீரதி அம்மாளிடம் நன்கு ஒட்டிக்கொண்டு விட்டாள். அன்று மஞ்சுளாவின் பிறந்த நாள். மாலையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர் சுகுணாவும் சேகரும். அந்த விழாவிற்கு வந்திருந்த சுகுணாவின் அலுவலக தோழி நிர்மலா மறுநாள்
அலுவலகத்தில் “உன் மகள் மஞ்சுளா ஒரு ஆன்டியுடன் நெருக்கமாக இருந்தாளே. யார் அவங்க? உன் உறவினரா?” என்றதும் “இல்லை, இல்லை. பக்கத்து வீடு. மஞ்சு மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து சீக்கிரம் வந்து விடுவதால் நான் வீட்டுக்குப் போகும் வரை அவர்கள் வீட்டில்தான் இருப்பாள். ரொம்ப நல்லவங்க. தனியாக வசிப்பதால் மஞ்சுவுடன் சற்று நேரம் இருப்பது மகிழ்ச்சி என்பார். கொஞ்ச நாளிலேயே அவங்க இரண்டு பேருக்கும் பிடித்துப்போய்விட்டது” என்றாள் சுகுணா. அவங்க ஒரே
பையன் மும்பையில் வேலை பார்க்கிறானாம். விரைவில் இங்கு வந்து விடுவானாம்” என்றாள் சுகுணா
“ஓஹோ அவங்க பேத்தி தன்னுடன் இல்லையே என்ற ஏக்கத்தை உன் பெண் மஞ்சுளா மூலம் தீர்த்துக் கொள்கிறாள் போலும்” என்றாள் நிர்மலா.
“நீ வேற அவங்க மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை” என்றதும் “ஏதேனும் ஜாதக கோளாறா?” என்ற நிர்மலாவிடம் “அது ஒரு வித்தியாசமான கதை” என்றாள் சுகுணா.
“இருக்கட்டுமே அதைத்தான் சொல்லேன்” என்றாள் நிர்மலா.
“ஆமாம். புனை பெயரில் பத்திரிகைகட்கு கதை எழுதும் உனக்கு புதிய கரு கிடைக்கலாமே” என்று சிரித்து விட்டு தொடர்ந்தாள்.
“ஒரு நாள் பாகீரதி அம்மாளிடம் உங்கள் மகனுக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை? என்று கேட்டேன். அதற்கு அவர் எப்போது கேட்டாலும் “அவசரப்படாதே அம்மா. நேரம் வரும்போது கூடிவரும் பொறு” என்று அடக்கி விடுவான். பள்ளியில் படிக்கும் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்திலிருந்து அவன் பெண்களையே வெறுக்கிறான் என்பது எனக்கு தெரியும். காலப்போக்கில் மறந்துவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் நான் கல்யாணம் பற்றி பேசும்போதும் அவன் எரிந்து விழுவான். அதிலிருந்து இன்னும் அவன் அதை மறக்கவில்லை என்று புரிந்தது. அறியாத வயதில் நிகழ்ந்த அதை மறந்து விடு என்று எத்தனையோ முறை நான் சொல்லிவிட்டேன். அவனோ பதில் கூறாமல் சிரித்து மழுப்பி விடுவான். என்ன செய்வது என்று வருத்தப்பட்டார்.”
“பெண்களையே வெறுக்கும் அளவுக்கு அப்படி என்னம்மா நிகழ்ந்தது- அதுவும் பள்ளிப் பருவத்திலேயே?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னதை என்னால் இன்றும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை”.
“அவர் மகன் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாராம். காதலர் தினத்தன்று உடன் படித்த ஒரு பெண்ணுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்ணும் வாங்கிக்கொண்டு ‘தேங்க்ஸ்’ சொன்னாளாம். அதைப் பார்த்த சில மாணவ மாணவிகள் கேலி செய்யவும் அது உள்ளூர் காவல் அதிகாரியான அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததாம். அவர் அவனை காவல் நிலையத்திற்கு
அழைத்துச் சென்று விட்டாராம். தலைமை ஆசிரியரும் மற்ற சில ஆசிரியர்களும் அந்த காவல் அதிகாரியிடம் மன்றாடியதில் மகனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டாராம். அன்று பள்ளியிலிருந்து நின்றவர் தேர்வு மட்டும் எழுதினாராம். தேர்வு முடிந்ததும் அவர்கள் ஊரை விட்டு திருப்பூரில் அந்த அம்மாவின் தம்பி வீட்டுக்கு சென்று விட்டார்களாம்”
என்று நிறுத்தினாள். என்னிடம் “எங்கள் நல்ல காலம் படிப்பில் கெட்டிக்காரன் என்பதால் படிப்படியாக
வாழ்வில் உயர்ந்து இன்று கௌரவமான நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் அது மட்டும் வாழ்க்கை இல்லையே. திருமணம் என்பது வேண்டுமே என்று தலைபாடாக அடித்துக் கொள்கிறேன். என்ன செய்வது?” என்று அடிக்கடி புலம்புவார். நானும் “உங்க நல்ல குணத்திற்கு விரைவில் காலம் மாறும்” என்று சொல்லி தேற்றுவேன். இக்காலத்தில் மனிதர்களை புரிந்து கொள்வதே கடினம். தன் தாயாரின்
விருப்பத்திற்காகவாவது அவர் திருமணம் செய்து கொள்ளலாமே. ஒரு கதாசிரியையாக நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள் சுகுணா.
“அவர் மகனின் நிலையிலிருந்தும் யோசிக்க வேண்டுமல்லவா?” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் நிர்மலா. ஒரு மாதத்திற்கு பின் ஒரு நாள் திடீரென்று நிர்மலாவும் அவள் பெற்றோரும் சுகுணாவையும் சேகரையும் உடன் அழைத்துக்கொண்டு பாகீரதி அம்மாளின் வீட்டுக்கு சென்றனர்.
நிர்மலாவின் தந்தை அவரிடம் “அன்று தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு உங்கள் மகன் கிரியை ஆத்திரத்தில் அடித்து அசிங்கப்படுத்தி விட்டேன். பிறகுதான் தெரிந்தது என் மகள் நிர்மலாதான் முதலில் பொங்கல் வாழ்த்து கூறி அவரிடம் கடிதம் தந்நிருக்கிறாள் என்பதும் அதற்கு பதிலாகவே உங்கள் மகன் பூங்கொத்து கொடுத்துள்ளார் என்று. என் கோபத்திற்கு அஞ்சி அன்று என் மகள் மௌனமாக இருந்து விட்டாள். நிர்மலாவுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தபோதுதான் அவள் இந்த உண்மையை சொன்னாள். அது மட்டுமின்றி ‘இனி கல்யாணம் என்ற பேச்சை எடுக்காதீர்கள்’ என்று உறுதியாக சொல்லிவிட்டாள். இப்போது சுகுணா மூலம் உங்கள் மகனும் இன்னும் அவளையே நினைத்து மணம் செய்து கொள்ளாமல்
இருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம். என் தவறுக்கு பிராயச்சித்தமாக இவர்களின் திருமணத்தை முடித்து வைப்போம். 20 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே அரும்பிய காதலை நாம் மலர செய்வோம். நீங்கள் சம்மதிப்பதோடு உங்கள் மகனிடமும் சொல்லி எப்படியாவது சம்மதிக்க வைக்க
வேண்டும்” என்று கெஞ்சினார்.
“கிரியிடம் பேசாமல் என்னால் எதுவும் கூற முடியாது” என்ற பாகீரதி அம்மாளின் கால்களைத் தொட்டு வணங்கிய நிர்மலா “உங்கள் சம்மதம் போதும் அத்தை. நான் பேசிக் கொள்கிறேன் கிரியிடம்” என்றாள்.
இதைக் கேட்ட சுகுணா “இருபது வருடத்தில் இல்லாத தைரியம் இப்போது மட்டும் வந்தது எப்படி? காத்திருந்த காதல் ஒருவழியாக கல்யாண காலம் வரை வந்துவிட்டது என்பதாலா? இப்போதுதானே புரிகிறது கிரிபிரியா என்ற உன் புனைப்பெயரின் மர்மம்” என்றதும் அனைவரும் சிரித்தனர் பாகீரதி அம்மாள் உட்பட.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.