எழுதியவர்: நா. பத்மாவதி
தேர்வு செய்த படம்: படம் 1
கோவையில் உள்ள ஒரு அழகான பூங்காவில் தினமும் காலை நேரத்தில் புறாக்கள், கிளிகள், மயில்கள் எனப பலப் பறவைகள் சங்கமித்திருக்கும். அந்த பறவைகளுக்குள் இரண்டு சிறிய புறாக்கள் ஒவ்வொரு நாளும் ஒரே கிளையில் உடன் அமர்ந்து பேசிக் கொள்வதைப் பார்க்க அழகாக இருக்கும்.
அதைப் போலவே, ஆதித்யாவும் மேகலாவும் கல்லூரியில் சந்தித்த முதல் நாள் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்து நட்பாக ஆரம்பித்து பிறகு காதலாக மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் பறவைகளைப் போல எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள்.
ஆனால், வாழ்க்கை எப்போதும் இப்படியே சீராக ஓடாது. மேகலாவின் வீட்டில் அவளுக்கு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்தார்கள். குடும்பத்தை எதிர்க்க முடியாமல், காதலையும் மறக்க முடியாமல், அவள் ஆதித்யாவிடம் அந்த செய்தியை கூறினாள். ஆதித்யா அதைக் கேட்டு பதற்றமாகினான். ஆனால், அவன் சொன்ன ஒரு வார்த்தை தான் அவளுக்கு ஆறுதல்.
“பறவைகள் ஒன்றாக பறக்க தெரியாவிட்டால், அவை நம்மை போல் கூடு கட்டி வாழ்ந்து கொள்ளும். நம்முடைய காதலும் அப்படித்தான். ஒன்றாக இருக்க முடியாது என்றால், தூரத்திலிருந்து நம் உள்ளங்கள் இணைந்தே இருக்கும். நீ கவலைப் படாதே” என சமாதானப் படுத்தினான்.
மேகலா அழுதபடியே அவனிடம் நெருங்கி, “நம் காதல் எப்போதும் இருக்கும் அல்லவா? நீ என்னை மறக்க மாட்டாயே. நாம் உடலால் தொலைவில் இருந்தாலும் உள்ளத்தால் என்றும் இணைந்திருப்போம் ” என்றாள்.
“காதல் பறவைகள் ஒருவருக்கொருவர் இருந்தால் போதும், தூரம் எதுவும் பிரிக்க முடியாது!” என்று சொல்லிவிட்டு, அவன் மேகலாவின் கையைப் பிடித்தான்.
விருப்பமில்லாமல் பிரிந்து சென்ற மேகலா, ஆண்டுகள் கடந்தும் அந்த பூங்காவை மறக்கவில்லை. ஒரு நாள், அந்த இடத்திற்கு திரும்பி வந்தாள். பழைய ஞாபகங்களை நினைத்து கண்கள் ஈரமாக இருந்தன. ஆனால், அங்கே அந்த இரண்டு புறாக்கள் இன்னும் அதே கிளையில் உடன் அமர்ந்திருந்தன.
அதைப் பார்த்தவுடனே அவள் “உண்மையான காதல் பிரிவுக் காலத்திலும் என்றும் மறக்காது!” என்ற ஆதித்யாவின் வார்த்தை உண்மையானது என உணர்ந்தாள்
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.