எழுதியவர்: நா.பத்மாவதி
சென்னை மழையில், சின்னஞ்சிறு துளிகள் நகரம் முழுவதும் ஒரு காதல் கவிதை எழுதியது போலத் தெரிந்தது. காலை நேர வேலைக்குச் செல்லும் ரயில்கள், பேருந்துகள், நிறுத்தங்களில் கூடி நிற்கும் மக்கள் என பரபரப்பான இந்தக் கூட்டத்தில் அவள் தனியாகவும் மகிழ்ச்சியுடனும் கிரிஷ்க்குத் தெரிந்தாள்.
மழைநேரப் பேருந்து பயணத்தின் போது, தன்னடக்கமான பார்வை, நிதானமான சிரிப்போடு மழையில் நனைந்திருந்தாலும், அவன் முகத்தில் ஒரு அழகான அமைதியோடு அவள் எதிரில் நின்றான் கிரிஷ். அவள் கண்டு கொள்ளவில்லை இருந்தாலும் தொடர்ந்தான் கிரிஷ்.
ஒரு நாள், வழக்கமாக கையில் உள்ள புத்தகத்தை கவனித்த கிரிஷ் துணிச்சலாக அவளிடம் “நீங்க எப்போதும் இந்த புத்தகம் தான் வாசிப்பீங்களா?”
அவள் ஒரு கணம் திகைத்து பின் “உங்களுக்கு எப்படித் தெரியும், பார்த்துக்கிட்டே இருந்தீர்களா?” என்றாள்.
இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் பேசிப் பரிச்சியமாகி அவள் பெயர் அனு என்ற அறிமுகத்தோடு அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். அவர்களின் மழைக்காலப் பயணம் மறக்க முடியாப் பயணமாகியது. இருவருடைய பழக்கமும் வாரம் கடந்து மாதங்களாக, பேருந்தில் ஒரு சின்ன ஆசையுடன் எதிர்பார்ப்பும் கூடியது.
ஒரு நாள், கடுமையான மழை. பேருந்தில் கூட்டம் அதிகம். கிரிஷ் தன் குடையை அவளுக்கு நீட்டினான்.
“இந்த மழையில் நனைந்து தனியாகப் பயணிக்க வேண்டாம், அனு.” என்ற அவனின் அக்கறை அவள் மனதை என்னவோ செய்தது. காதல் ஒரு மழைத்துளி போல் மெதுவாக அவள் உள்ளத்தில் சொட்டத் தொடங்கியது.
அன்று முதல், மழை ஆனந்தமானதாய் மாறி பேருந்துப் பயணம் காதலாக மாறியது. ஒரு நாள், கிரிஷ் அவளைப் பார்த்து சொன்னான், ” நீ கூட இல்லாத பேருந்துப் பயணத்தைக் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை அனு.?” அவள் சிரித்து தலை குனிந்தாள்.
அந்த மழைநேர காதல் அவர்களது வாழ்வின் இனிய தொடக்கமாக மாறியது…
காதல் எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் அது வந்தால், மழை போலவே நம் உள்ளத்தில் ஓர் குளுமை, சிலிர்ப்பு
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.