எழுத்தாளர்: இந்துமதி நடராஜன்
காலை நேர பரபரப்பு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து வழிய தினமும் போராட்டமாக தான் இருக்கிறது ஆஃபீஸ் வந்து சேர்வதற்குள் என்று மனத்தில் நினைத்தபடி தன் காபின் உள்ளே நுழைந்து அமர்ந்த பாஸ்கர் கொஞ்சம் தண்ணி குடுக்குறியா ராமு என்று கேட்டான் .
அங்கு இருந்த அவனது ஆபீஸ் பையன் ராமு தண்ணீரை எடுத்து வரும்போது கையில் ஒரு கவரோடு வந்தான் . உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தது சார் நான் தான் கையெழுத்து போட்டு வாங்கினேன்.
இந்தக் காலத்துல போய் யாரு கடிதம் எழுதுவது? என் பெயருக்கா வந்திருக்கு ?
அந்த கவரின் மேலே பார்த்தால் அவனுடைய பெயர் தான் இருந்தது. .பர்சனல் என்று வேறு போட்டிருந்தது எழுத்து மிகவும் அழகாக இருந்ததும் இது கண்டிப்பாக யாரோ ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்ற அனுப்பியவர் பெயர் பார்க்க கவிதா என்று இருந்தது.
கவிதா ஓ நேற்று முன்தினம் நாம போய் பார்த்து திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பொண்ணாச்சே, இவ எதுக்கு கடிதம் எழுதுறா ? என்னைக் கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலையோ ? இல்ல ஏதேனும் காதல் கீதலா ? நேரா பேச பயந்து கடிதமோ ? ஏதேதோ எண்ணம், பயம் வர பிரித்துப் படிக்கத் தொடங்கினான்.
அன்புடையீர்
வணக்கம் .
இந்தக் கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தையும் அதே சமயம் அளவில்லாத பல சந்தேகங்களையும் தரும் என்று எனக்கு தெரியும் . நான் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அம்மாவிடம் பொய் சொல்லி விட்டு உங்களை நேரில் சந்திக்க முடியாது.
நீங்கள் என்னை பார்க்க வந்த சமயத்தில் என் அம்மா என் மனதில் இருப்பதை உங்களிடம் நேரடியாக பேசுவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை . நீங்கள் தனியா பேச வேண்டும் என்று கேட்பீர்கள் என ஆவலோடு இருந்தேன். நீங்கள் கேட்கவே இல்லை . அதற்கும் என் அம்மா பாரு பையன் அம்மா, அப்பா சொல்படி நடக்கிறான். நீயும் என் பேச்சைக் கேட்டு இந்த பையனை பேசாமல் கல்யாணம் பண்ணிக்கோ, இல்லாத வழக்கமா எதையாவது பேசிக்கிட்டு இருக்காதே.
உங்களுக்கு எங்க குடும்பத்தை பற்றி ஏற்கனவே தெரிந்து இருக்கும். எங்க அப்பா போஸ்டாபீஸில் வேலை செய்தார். இரண்டு வருடம் முன்பு கேன்சர் வந்து இறந்து போனார். நாங்கள் இரண்டு பெண்கள். அப்பா இருக்கும் போது என் அக்காவிற்கு திருமணமாகி விட்டது
என் அம்மாவிற்கு அப்பாவின் பென்ஷன் தான் வருமானம். வாடகை கொடுத்து தன் ஒருத்திக்கு வாழ அது போதும் என்றும் என் திருமணத்திற்கு பிறகு தனியாக இருக்க வேண்டும் என்பதற்கும் மனதளவில் தயாராகி விட்டார்கள்.
ஆனால் என்னால் தான் அதை ஏற்க முடியவில்லை . என் அம்மாவை என்னோடு உடன் வைத்துக் கொள்ள சம்மதிக்கும் பையனைத் தான் நான் திருமணம் செய்வேன் என்று சொன்னால் அம்மா அதற்கு உடன்படவில்லை.
நான் அப்படி கேட்டால் உங்க வீட்டில் தப்பாக எடுத்துக் கொள்வார்கள். இது நல்ல இடம் . படிப்பு, குடும்பம் எல்லாம் விசாரித்து மாமா தேடி தந்திருக்காங்க. அதை ஏதாவது பேசிக் கெடுத்து விடாதே. அப்படி மீறி பேசினால் அப்பா இல்லாமல் அம்மா பெண்ணைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று எனக்கு தான் கெட்ட பெயர் வரும் என்றெல்லாம் சொல்லி அடக்கி வைத்தார்கள்.
தவறாக எண்ண வேண்டாம். இந்தக் கடிதம் அம்மாவுக்குத் தெரியாமல் தான் எழுதி இருக்கிறேன். அவங்க என்னை பெற்றுப் படிக்க வைத்து திருமணம் வரை தன் கடமையைச் செவ்வனே செய்வது போல் எனக்கும் என் அம்மாவை என்னோடு உடன் வைத்து நல்ல முறையில் கவனிப்பது கடமை . அதில் இருந்து எந்த காரணத்தாலும் நழுவ விருப்பம் இல்லை.
உங்களைப் பிடித்து இருக்கிறதா, இல்லையா என்பது என் அம்மா என் உடன் இருக்க நீங்கள் சம்மதித்தால் மட்டுமே. எனக்கும் இந்த திருமணத்தில் சம்மதம். வீட்டில் கலந்து பேசி உங்க முடிவைச் சொல்லுங்க.
கடிதத்தைப் படித்த பாஸ்கர் மனதார கவிதாவை அவளுடைய நேர்மையை, பாசத்தைப் பாராட்டி அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டான்.
மாலை வரை காத்திருக்க பொறுமை இன்றி ஆபீஸில் லீவு சொல்லிட்டு வீடு வந்தான். என்னவென்று கேட்ட அப்பா, அம்மா கிட்ட பேசினான். நல்ல பெண் . தைரியமாக மனதிற்கு பட்டதை நேரா சொல்லும் இந்தக் குணம் எனக்கு பிடிச்சிருக்கு.
நம் எதிர் ஃப்ளாட் காலியாக தானே இருக்கு. அவங்க அம்மாவை இதில் குடி வைச்சு தினம் அம்மாவைப் பார்க்கலாம் என்று கவிதாவிடம் சொல். அவளும் சந்தோஷமா இருப்பாள் என்றாள் அம்மா.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: