ஒரு பக்க போட்டிக்கதை: அம்மு அம்மாவாகிறாள்

by admin
88 views

எழுத்தாளர்: எஸ்.ராமன்

அந்த வீட்டில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்த அம்முவிடம்  மாற்றம் தெரிந்ததை வீட்டில் அனைவரும் கவனித்தனர். 
 
வெளிநாட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவரால், அந்த குடும்பத்துக்குள், நான்கு வார குட்டியாக,  கட்டாயமாக திணிக்கப்பட்டவள்தான் அம்மு.  தன் சுட்டித்தனத்தால், நாளடைவில் குடும்பத்தில் ஒருவளாக ஐக்கியமானாள்.
 
அந்த தருணத்தில், அவளுடைய வருகை, குழந்தை இல்லாத அந்த தம்பதிக்கு, ஒரு வடிகாலாக அமைந்தது எனலாம்.  அந்த வீட்டில், அவள் அடி எடுத்து வைத்த சில மாதங்களில் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் வீட்டு எஜமானிக்கு குழந்தை பிறந்து, வீட்டிற்குள் குதூகலம் பரவ ஆரம்பித்தது என்பதுதான் முன்கதை சுருக்கம்.
 
இரண்டு நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரிக்கு போன போது, அம்முவை  மேஜை மீது பக்கவாட்டாக படுக்க வைத்து, வயிற்று பகுதியை  ஸ்கேன் எடுத்த  டாக்டர்,
‘உங்க அம்மு அம்மாவாகப் போறா’… என்று அறிவித்தார்.  ஏதோ புரிந்துவிட்டது போல், அம்முவும் வாலை மேல் பக்கமாக அசைத்து,  தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

அடுத்த சில வாரங்களில்  நான்கு அழகான  குட்டிகளை அம்மு பிரசவித்தாள்.  பிரசவமான அரை மணி நேரத்திலேயே,  தன் குழந்தைகளை கால்களால் அணைத்து, பாலூட்ட ஆரம்பித்து, தான் ஒரு பாசமுள்ள தாய் என்பதை நிரூபித்தாள் அம்மு.
 
எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், வாரத்திற்கு இரு முறை குளிக்கும் பழக்கமுடைய அம்மு குளியலறைக்கு வர மறுத்தாள். குட்டிகளை விட்டு பிரிய மனமில்லாததுதான் அதற்கு காரணம் என்பது வீட்டிலுள்ளவர்களுக்கு புரிய சில நாள்கள் ஆனது.
 
கண்கள் திறந்தவுடன், குட்டிகள் தவழ்ந்து மெதுவாக நகர ஆரம்பித்ததும், அவைகளின் மீது பற்கள் படாமல், வாயால் லாவகமாக கவ்விப் பிடித்து,  தன் அரவணைப்புக்குள் கொண்டு வர முயற்சித்த காட்சி, தன் குழந்தைகள் மீது அவளுக்கு இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்தியது.  குட்டிகள், வாசல் படியை தாண்ட முயற்சித்த போதெல்லாம், அவைகளை ஒவ்வொன்றாக வாயால் கவ்வி, பொறுப்புடன் வீட்டுக்குள் கொண்டு வந்தாள். எக்காரணம் கொண்டும் தன் குழந்தைகள் தன்னை விட்டு விலகி போய்விடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தது தெரிந்தது.

அத்துடன், வீட்டு குழந்தையையும் அவ்வப்போது முகர்ந்து பார்த்து, ஓடி ஆடி விளையாட்டு காட்டுவாள்.
   
ஒரு நாள், நான்கு குட்டிகளையும் தூக்கி வைத்துக் கொண்டு, வெளியே கைகளை காட்டி, வீட்டு எஜமானி பேசிக்கொண்டதை புரிந்து கொண்டவள் போல், இரண்டு கால்களை உயர்த்தி நின்று, குட்டிகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு அம்மு வேண்டினாள்.
 
“இந்த குட்டிகளை ஒருவர் நல்ல விலைக்கு கேட்கிறார்.  வாய்ப்பு வரும்போது, பயன்படுத்திக்கணும்.  அம்முவை நான் வெளியே அழைத்துப் போகும்போது,  நீங்க காரியத்தை முடிச்சுடுங்க…” அம்மு பக்கத்தில் இல்லாதபோது, அம்மா, கணவரிடம் கிசுகிசுத்தாள்.   
 
பிறந்த நான்காவது வாரத்தில், தாயின் பால் மனம் மாறாத நான்கு குட்டிகளும், திட்டமிட்டபடி நல்ல விலைக்கு விற்கப்பட்டன. வெளியிலிருந்து வீட்டிற்கு வந்த அம்மு, முதல் வேலையாக தன் குட்டிகள் வழக்கமாக விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஆவலோடு ஓடினாள். அங்கு குட்டிகளை காணாததால், வீட்டின் மூலை முடுக்குகளில் தேட ஆரம்பித்தாள்.

குட்டிகளை எங்கும் காணாமல், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து குலைத்து, சோகமாகி , சாப்பிடாமல் அடம் பிடித்தாள்.  கண்களில் கண்ணீர் கசிந்தது.
 
“சனியனே…நீ பெத்துப் போட்ட குட்டிகளை காணும்னு ஏன் இப்படி அமர்க்களம் பண்றே? இன்னும் நாலு பெத்துண்டா போச்சு.  ஏன் அழுது, அடம் பிடிச்சு தொலைக்கிறே..?” அனைவரும் அம்முவை  திட்டித் தீர்த்தார்கள்.  சில வாரங்களில், அம்மு நடந்ததை மறந்து போல்,  வீட்டினருடன் சகஜமாக பழக ஆரம்பித்தாள்.
 
அப்பொழுதுதான், வீட்டின் முன்புறம் தனியாக விளையாடிக் கொண்டிருந்த வீட்டு குழந்தை திடீரென்று காணாமல் போனது. குடும்பத்தினர் அனைவரும் பதறி போய், அனைத்து திசைகளிலும் தேட ஆரம்பித்தனர்.
 
குழந்தையை பிரிந்ததால் ஏற்பட்ட தாயின் சோகத்தை உணர்ந்த அம்மு, அவர்களையே சுற்றி, சுற்றி வந்து அந்த சோகத்தில் பங்கேற்றாள். வீட்டுக்கு வெளியே பல மூலை முடுக்குகளில் ஓடி, மோப்பம் பிடித்து, குழந்தையை தேடினாள். கேட்டுக்கு வெளியே போய், மெயின் ரோடு பக்கம் ஓடினாள்.
 
“குழந்தை காணாமல் போனதற்கு ஏன் இப்படி அமர்க்களம் பண்றீங்க… இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாமே…”என்று மட்டும் அம்மு அவர்களிடம் கேட்கவில்லை.
 
அவள் காட்டிய திசையில் ஓடிய குடும்பத்தினர், அங்கு நின்று  அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கி, கட்டி அணைத்து உச்சி முகர்ந்தனர். 
 
அனைத்தும் புரிந்தது போல், அம்முவும், குழந்தையை முகர்ந்து, அங்கும் இங்கும் தாவி ஓடி, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

அப்பொழுதுதான், அம்மு  தான் பெற்ற குழந்தைகளை இழந்து தவித்த வலி, குடும்பத்தினருக்கு புரிந்தது. அதற்கு பரிகாரமாக,  உள்ளூரிலேயே விலை போன அவளுடைய ஒரு குட்டியை இரட்டிப்பு விலைக்கு வாங்கி, அம்முவுக்கு பரிசாக அளித்தனர்.

பாசக்கார அம்மாவாகிய அம்மு, தன் குழந்தை மீண்டும் தொலைந்து விடாமல் இருக்க,  இரு கால்களுக்கு இடையே அதை அணைத்து, பாசத்துடன், நாவினால் நக்கி கொடுத்து, பாதுகாக்க துவங்கினாள்! 

எந்த ஜீவராசியானாலும், அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை உண்டோ? 

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!