எழுத்தாளர்: க.ரவீந்திரன்
சுரேஷ் அம்மா பிள்ளை. சின்ன வயதிலிருந்தே அம்மா முந்தானையைப் பிடித்துக் கொண்டு அம்மா அம்மா என்று அவளையே சுற்றி சுற்றி வந்து வளர்ந்தவன்.
மூக்கிலே சளி ஒழுங்கி கொண்டிருக்கும். அம்மா சலிக்காமல் துடைப்பாள். படுக்கையிலே சிறுநீர் மலம் கழித்து விடுவான். அந்த காலத்தில் பேம்பர்ஸ், டிஷ்யூ பேப்பர் எல்லாம் இல்லை அம்மா முகம் சுளிக்காமல் அருவருப்படையாமல் சுத்தம் செய்வாள். படுக்கை விரிப்புகளை துவைத்து போடுவாள்.
சிறுவயதில் அம்மாவை மிகவும் தொந்தரவு செய்வான். பள்ளிக்கூடம் போக ,சாப்பிட, குளிக்க எல்லாவற்றிற்குமே அடம் அழுகை.
இவனது தொந்தரவு தாங்காமல் இவனது தாயாருக்கு அழுகையே வந்துவிடும். பக்கத்து வீட்டுக்காரர்கள் சமாதானம் செய்தால் “முதலில் எங்க அம்மா அழுவதை நிறுத்தச் சொல்லுங்க”
என்று கத்துவான். இவனால் அவளுக்கு இஷ்ட்டிரியாவே பிடித்து விட்டது.
சில நேரங்களில் அம்மா கோபத்தில் அடித்து விடுவார். இதனால் சுரேஷ்ற்கு காய்ச்சல் வந்துவிடும். இதை அறிந்த அவன் பாட்டி இவனை தன் ஊருக்கு அழைத்து சென்று விட்டாள்.
மகனைப் பிரிந்து ஒரு வாரம் கூட தாயால் இருக்க முடியவில்லை. ஓடோடி சென்று “இவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று மகனை அழைத்து வந்துவிட்டாள்.
சுரேஷை அம்மா போத்தி போத்தி அங்கே போகாதே இங்கே போகாதே என்று பயமுறுத்தி அவனை நீச்சல் பழகாமல், சைக்கிள் பழகாமல் வளர்த்தான்.
சுரேஷின் அப்பா பணியில் உள்ள போது இறந்துவிட வாரிசுக்கு வேலை அடிப்படையில் இவனுக்கு வேலை கிடைத்தது. அம்மாவுக்கு பென்ஷன் கிடைத்தது.
சுரேஷ்க்கு திருமணம் நடந்தது. சுரேஷ் மனைவி சுமதி தனிக் குடித்தனம் நடத்த விரும்பினாள்.
அவர்களை நகரத்திலிருந்த சொந்த வீட்டில் தங்க வைத்துவிட்டு கிராமத்துக்கு சென்று விட்டாள்.
அங்கே சில காலம் வாழ்ந்த பிறகு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டாள். சுரேஷ் அவ்வப்போது சென்று பார்ப்பான்.
சுரேஷ்க்கு மகன் பிறந்து திருமணம் நடந்தது. பேரன் பேத்தியும் பிறந்தார்கள்.
சுரேஷ் அவன் மனைவி சுமதி ஓய்வு பெற்று விட்டார்கள்.
சுரேஷ் ஒரு முறையற்ற நிதி நிறுவனத்தில் தன் ஓய்வூதிய பலன்களை முதலீடு செய்து இழந்து விட்டான்.
அவனது ஓய்வூதியத்திலேயே வீட்டின் பேரில் கடன் வாங்கும் அளவிற்கு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டான்.
இது பிடிக்காத ஓய்வூதியம் பெறும் அவன் மனைவி, தகவல் மென்பொருள் துறையில் பணிபுரியும் மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்திகள் அவனைப் பிரிந்து சென்னைக்கு சென்று விட்டார்கள். இவர்கள் பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று விட்டது. அவர்களால் சமரசம் ஏற்படுத்த முடியவில்லை.
அறுபதைக் கடந்த சுரேஷ் மிகுந்த சிரமத்தோடு தனியே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். முதுமையில் தனிமையும் பொருளாதார சிக்கல்களும் அவனை வாட்டி வதைத்தன.
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தன் தாயிடம் சுரேஷ் அவனுடைய நிலையை சொன்னான். எண்பதைக் கடந்த அந்த தாய் உள்ளம் பதறிவிட்டது.
உடனே அவள் முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்து சுரேஷைப் பார்த்துக் கொண்டாள்.
இருபது வயதிலே பத்து மாதம் வயிற்றில் சுமந்து வளர்த்த பிள்ளையை எண்பது வயதிலும் தன் உள்ளத்தில் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அந்த தாய்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: