எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
“மீனாட்சி அக்கா…! சீக்கிரம் வாங்க. உங்க புள்ளையை போலீஸ் ஜீப்பில் ஏத்தறாங்க.”
“அடியே… என்னடி சொல்லுற?”
என்று வேகமாக வந்தாள் அறுபது வயது மீனாட்சி.
“ஐயா…! எம் புள்ளை என்ன செஞ்சான்? அவன் ஒரு கிறுக்கன்”
“அந்த கிறுக்கன் பண்ணையார் பையன் தலையில கல்லை போட்டு கொல்ல பார்த்திருக்கிறான்.”என்று கூறி விட்டு மாடனை ஜீப்பில் ஏற்றிக் காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர்.
மீனாட்சி பஸ்ஸைப் பிடித்து காவல் நிலையம் சென்றாள். மாடனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
ஒருவாரம் மாடனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மாடனிடம் இருந்து எந்த கேள்விக்கும் பதில் இல்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
மாடன் எந்த கேள்விக்கும் பதில் தராவிட்டாலும், நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில் மாடனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
மீனாட்சி ஊருக்கு திரும்ப வில்லை. சிறைச் சாலையின் வெளியில் காத்திருந்தாள். ஜெயிலர் அழைத்து விசாரித்ததில் மாடனின் அம்மா என்று தெரிந்து கொண்டார். “ஐயா…! அவன் இல்லாமல் எனக்கு ஊர்ல என்ன வேலை? அவன் விடுதலை ஆகும் வரை இங்கயே இருக்கேன்.”
ஜெயிலர் இறக்கப் பட்டு அவர் வீட்டில் வேலை செய்யவும், கார் ஷெட்டில் தங்கவும் அனுமதித்தார்.
தன் மகனை வாரம் ஒரு முறை சென்று பார்த்து, அவனுக்கு வேண்டியதை வாங்கித் தந்தாள். எதையும் கேட்டு வாங்கி சாப்பிடக் கூட தெரியாத தன் மகனா இப்படி செய்தான் என்ற கேள்வி மனதை அறுத்தது.
ஐந்து வருடங்கள் கடந்தன. அவன் வெளியே வரும் நாளில் பண்ணையார் மகன் மணியை கைது செய்து அழைத்து வந்தனர்.
ஊனமுற்றவர்களை கட்டாயப் படுத்தி போதைப் பொருட்களை விற்க வைத்துள்ளான். கையும் களவுமாக பிடிபட்டான்.
இப்பொழுது மீனாட்சிக்கு புரிந்தது.
பண்ணையார் மகன், மாடனை போதை மருந்து விற்க வற்புறுத்தி உள்ளான். அவனிடம் இருந்து தப்பிக்க மாடன் கல்லை அவன் மீது போட்டுள்ளான் என்பது ஏழை தாய்க்கு தெளிவானது. ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ அதனால் மாடன் மௌனமாக இருந்துள்ளான்.
தாய் உள்ளம் மகனை எண்ணி பெருமைக் கொண்டது. காரணம் தெரிந்ததும் மனதின் அலைகள் ஓய்ந்தது.
முற்றும்.