எழுத்தாளர்: ஸ்ரீநிவாஸ் பிரபு
“இந்த மரம் என்னிக்கு துளிர்க்க ஆரம்பிச்சுச்சோ அன்னிக்கு புடுச்சுது அனத்தம்.முதல்ல அதை வெட்டி எரிங்க“ என்றாள் தேவி கணவனிடம்
“ மரம் உன்னை என்ன பண்ணுச்சு? உனக்கு ஒண்ணு பிடிக்கலைன்னா உடனே அதை அப்புறப்படுத்த நினைச்சிடுவே“
“அப்படிப் பேச நான் என்ன முட்டாளா?“
“ பின்ன துளிர் விட்டு வளர்ற ஒரு சின்ன மரம் உன்னை என்ன பண்ணுச்சு? அதும் பலன் தர்ற மாமரம்“
“ஏங்க அது என்ன மரமா வேணா இருந்துட்டு போகட்டும், வீட்டு நிலை வாசலுக்கு நேரா குறுக்க மறிச்சுகிட்டு இருந்தா எப்படி ஐஸ்வர்யம் வீட்டுக்கள்ள வரும்? கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு காலடி எடுத்து வெச்சதுல இருந்து வயிறே நிறையவே இல்லை, காலி பானையா கிடக்கு“என்றாள் தேவி, மருமகள் ராணியை ஓரக்கண்ணால் பார்த்து,
திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் முடிந்தும் குழந்தை உண்டாக வில்லை என்பதை தினமும் ஒருமுறையாவது சுட்டிக் காட்டும் மாமியாரின் அன்றைய தினத்திற்கான குத்தல் பேச்சைக் கேட்டதும், எழுந்த அழுகையை அடக்கிக் கொண்டு தலை குனிந்து சமையலறை நோக்கி நகர்ந்தாள் ராணி.
அவள் போவதையே பரிதாபமாகப் பார்த்தான் அவள் கணவன் சேகர்
அப்பா வாசலில் நின்றிருப்பதைப் பார்த்து அவரிடம் வந்து,“அம்மா சொல்ற மாதிரி மரத்தை அப்புறப் படுத்திடலாங்கப்பா“ என்றான் சேகர் ஆவேசத்துடன்
“அட என்னப்பா நீயும் புரியாம பேசிகிட்டு. பூ விட்டு பிஞ்சு விடற பருவத்துல இருக்கு அதைப் போயி எப்படி வெட்ட?“
“இல்லைங்க,மனசுக்கு ஒப்பாத விஷயங்கள் நடக்குறப்போ,அதுக்கு காரணமானதை விலக்கி வைக்கிறதுதான் நல்லது. மரம் வேண்டாம்னு அம்மா நினைக்கறாங்க, அதனால….“
“அவ எப்பவும் அப்படித்தான். பிடிக்கலைன்னா கூப்பாடு போடுவா“
“அதுதான், மரத்தை வெட்டிவிட்டுட்டா, கூப்பாடு போடறதை நிப்பாட்டுவாங்கில்ல? வீட்ல நிம்மதி இருக்குமில்ல. மனசுல நிம்மதியும். சந்தோஷமும் இருந்தாத்தான் வீட்ல எது நடந்தாலும் அது நல்லதா நடக்கும்“ என்றான்
அப்பா யோசித்தார்.
“சரிப்பா உன் இஷ்டம். போய் அந்த அருவாளை எடுத்துட்டு வா“ என்றார்
சேகர் ராணியைப் பார்த்தான். ராணி சமையலறையினின்றும் அருவாளை எடுத்து வந்து சேகரிடம் நீட்டினாள். மாமரத்தைப் பார்த்தாள். மரம் நீண்டு வளர்ந்திருந்தது. காற்றுக்கு அசைந்தது.
அப்பா அருவளை எடுத்து அடிமரத்தை வெட்ட ஓங்க,திடீரென்று “வேண்டாங்க மாமா மரத்தை வெட்டாதீங்க“ என்று தடுத்தாள் ராணி
“ஏன்மா?“ என்றபடி புரியாமல் பார்த்தார்
“மரத்துல ஒரு பறவை புதுசா கூடு கட்டியிருக்கு பாருங்க. தாய் பறவை அடகாக்குது. இது வரை என்ன பாவம் செஞ்சோம்னு தெரியலை,ஒரு வாரிசு உருவாகலை.இப்ப மரத்தை வெட்டி, கூட்டைக் கலைச்சு இன்னொரு பாவத்தை பண்ண வேண்டாம். இந்தக் கூடு உருவான நேரம், நம்ம வீட்லையும் ஒரு தாய்ப் பறவை வரட்டுங்கப்பா“ என்றாள் ராணி.
தேவி, கண்களில் நீர் மல்க ராணியை அணைத்துக் கொண்டு ஜன்னல் வழியே மரத்தை அன்னார்ந்து பார்த்தாள்.
வானத்தில் புதிய விடியல்கள் தோன்றத் துவங்கியிருந்தது.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: