எழுத்தாளர்: ரோஜாராஜ்
அடர் மேகங்கள் திரண்டு வர, நீரைத்தன்னுள் தேக்கிக் கனத்திருக்கும் மேகம் போல,கனத்த இதயத்தோடு நீர் நிறைந்த கருவிழியோடு கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.
பக்கத்தில் தான் பத்து மாசம் சுமந்து படாதபாடு பட்டுப் பெற்றெடுத்த தன் மகன் வருண், ஏதும் புரியாமல் விழித்த வண்ணம் அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான்.
இதயம் சுக்கு நூறாய் உடைக்கப்பட்ட போதும், உள்ளிருக்கும் அதீதமான அன்பினால் வைத்த நம்பிக்கை கிறுக்குத்தனமாய் யோசிக்க வைத்தது.
அவன் வருவான், வந்து தன்னையும் வருணையும் கூட்டிச் செல்வான் என்ற குருட்டு நம்பிக்கையில் மெதுவாய் நடந்து வந்தாள்.
பாதை தூரமாய் ஆக ஆக வந்த வழியை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடி வந்தாள்.
என்ன நினைத்துத் திரும்பினாளோ அது நடக்கவேயில்லை.
ஆம்! அவளவன் அவளை அழைக்க வரவேயில்லை, நேரம் கடந்தது தான் மிச்சம்.கொஞ்சமாய் இருந்த வலி இப்போது ஆழமாய்த் தாக்கியது இதயத்தை..
வேதனை நெஞ்சை அழுத்த அழுத்த வானம் போல் அவள் கண்களும் இருண்டது. கண்ணெதிரே இருந்த பெரிய ஏரியை ஏறெடுத்துப் பார்த்தாள் .ஏரியில் இருந்த நீர் அவள் விழிநீர்க்கடலை விட சிறியது தான் போலும்.
ஒரு நிமிடம் நின்றாள், மகனையும் ஏரியையும் திரும்பத் திரும்ப பார்த்தாள்..பிஞ்சு மனம் படும் வேதனையை நினைத்துப் பார்க்கையில் நெஞ்சு பதைபதைத்தது.
மனதைக் கல்லாக்கினாள். கண்மூடி நின்றாள், வெறுத்து ஒதுக்கிய விரும்பியவனை நினைத்தாள்.
…………..
தவறு நான் செய்ததாகவே இருக்கட்டும் ,செய்யாத தவறுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், ப்ளீஸ், மன்னிச்சிடுங்க…இறைஞ்சினாள் தன் புருஷனிடம்.
உன்ன ஒருக்காலமும் மன்னிக்க மாட்டேன் “ ,வெடுக்கென சொன்னான் ரவி.
இப்படி வீம்பு பிடிக்கிறது முறையல்ல, சூழல் உங்களுக்கு சாதகமா இருக்குங்கிறதனால என்ன வேணா பேசாதீங்க, எனக்கு நீங்க வேணும் ,நம்ம குடும்பம் ஒன்னா சந்தோஷமா இருக்கணும் .அது தான் எனக்கு முக்கியம் ‘ என்றாள்.
இப்போது அவனுக்கு இன்னும் அதிகமாய்க் கோபம் வந்தது. தன்னை நம்பாதவன் தனக்கு வேணாம்,என்று வெறுத்தான். அவன்” பிடித்த முயலுக்கு மூணுகால்”, என்று உடும்பாய் நிற்பவன்.ஒற்றைக்காலில் நின்றான், நான் செய்தது தவறு ‘ என்றல்ல,!!?? நீ என்னை நம்பாதது தான் மிகப்பெரிய தவறு “ என்று .
ஏய் ! இத பாருடி…!? நான் சொன்னா சொன்னது தான்,நீ எனக்கு வேணாம்! உங்கூட என்னால வாழ முடியாது ,உன் வேலையைப் பாத்துட்டு போ ….! கத்தினான்.
முகத்தில் அடித்தார் போல, முகம் வாடிப்போனது ராசாத்திக்கு. சட்டென மாமியார் பக்கம் திரும்பி , ஆதரவு கேட்க…,உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது ,என்ன இருந்தாலும் அவன் உன் புருஷன் , ஆம்பிளை ஆயிரம் தப்பு பண்ணாலும் பொட்டச்சி பொறுத்துப் போகணும்.,என்று கூறு சொல்வது போல தன் பிள்ளைக்கு ஆதரவாய் வரிந்துகட்டி நின்றாள் மாமியார். ம்ம் ஆத்தா பிள்ளைக்கு ஆதரவா பேசலைன்னா தான் அதிசயம்.
அத்தை ….நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே.!? மறுபடியும் ஏன் அதைப்பற்றி பேசணும்; கேட்டவளைப் பார்த்து ரவி உறுமினான்.
ஏய் ,உங்கிட்ட சொல்ல வேண்டியத அப்பவே சொல்லியாச்சுல்ல, நீ இன்னும் போகலை எனத் தேளாய்க் கொட்டினான்.
ஓஹோ, அந்தளவுக்கு வெறுப்பாய் ஆச்சோ!!???
அப்ப நம்ம பிள்ளைக்கு பதில் சொல்லுங்க, என்றவளிடம்
அவன் என் பிள்ளை,எனக்கு தெரியும் அவனை எப்படிப் பாக்கணும்னு தெரியும் மின்னலாய் வந்து விழுந்தது வார்த்தைகள் .இனி ,பேசி பிரயோசனம் இல்லை ,என்று உணர்ந்தவள் ,அவனை விட்டுக் கொடுக்க முடியாமலும் விட்டு விலக முடியாமலும் மீண்டும் வாசல்படியை மிதித்தாள்.
படக்கென வாசலருகே வந்தவன்.,உனக்கு இங்க இடமில்ல போ உங்கப்பன் வீட்டுக்கு.?!!!
ஒரே வார்த்தையில் அவளை நோகடித்தான்.
ஏன் என்ன பாடா படுத்துறீங்க.,நான் போயிடுவன்னு விம்மி அழ ,போ* ன்னு தான் நானும் சொன்னேன்,என்றான்.
சொன்னவன் முகத்தை ஏறெடுத்துப் பாக்காமலே மனம் தளர்ந்தவளாய் பிள்ளையோடு நடக்க ஆரம்பித்தாள் ..
…………………………………………
நீண்ட பெருமூச்சுக்குப் பின் கண்ணை திறந்தாள். கண்ணீர் பொலபொலன்னு கொட்டியது மடை திறந்த வெள்ளம் போல.
அம்மா….! என்றான் வருண்.
வாம்மா ,தாத்தா வீட்டுக்கு போகலாம்னு சொன்னவனிடம்.,வருண் அப்பா எப்படி பேசறார் பாத்தியா,!? எப்படி மாறிட்டார்ன்னு பாத்தியா ,இவ்ளோ நேரம் ஆச்சே, இன்னும் நம்ம தேடி வரல,கஷ்டமா இருக்குல “ என்று ஏங்கி அழுதாள்.
தன் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் ஏரி அருகே நடந்தாள் .அவன் மீது கொண்ட காதல் ஈரேழு ஜென்மத்துக்கும் மாறாது மறையாது ,அணு அணுவாய் அவனை ரசித்து அவனோடு வாழ ஆசைப்பட்டாள். ஆனால் ,அவள் ஆசையில் மண் விழுந்து விட்டது.
பெற்றவள் முகத்தை காண துணிவில்லாமல் அபலையாய் என்ன செய்வது என்று கூட தெரியாமல் நடைபிணமானாள். இப்படி இருப்பதற்குச் சாகலாம் ‘ என்றே முடிவெடுத்தாள்.
தூரமாய் மலை உச்சியில் இருந்த முருகனை நினைத்து மனசுக்குள் நொந்தாள்.உன்ன நம்பினேனடா! முருகா ,என்ன கை விட்டுட்டியேடா! கண்ணீர் மாலை மாலையாய் விழ ,அவள் கால்கள் ஏரியை நோக்கி நடைபோட்டது.
அவள் வருண் அவளை பின்தொடர, அவள் வாழ்க்கையின் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
……
இறைவன் போடும் கணக்கை யார் அறிவர்? கடலிலே முத்தெடுக்கச் சென்றவன் செத்துப்போனதுண்டு, சாவதற்குச் சென்றவன் முத்தெடுத்து திரும்பி வருவதுண்டு ,என்ற தத்துவக் கவிஞன் சொன்னதைப்போல வாழ்க்கை என்பது விதியின் விளையாட்டுத்தான்.
காற்றிலே ஓர் சத்தம் அவளை அசைக்க, தன் பிள்ளை கைபிடித்து இழுக்க திரும்பியவளுக்கு அதிர்ச்சி.
அங்கே ! காவிநிற வேட்டி கட்டி மாநிறம் கொண்ட ஆறடி உயரமுள்ள ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஏலே ! உன்ன எத்தனை தட கூப்பிடறேன், கேட்கலையா??இங்க என்ன பண்ற !?? உரிமையாய் வந்து விழுந்த வார்த்தையில் தடுமாறியவள் ,கண்ணைத் துடைத்துக்கொண்டு யாரென்று பாத்தாள், அவளுக்குத் தெரிந்தவர் தான். அது வந்துப்பா..,ஊருக்கு ரொம்ப நேரமா பஸ் வரல ,அதான் அப்படியே நடந்து வந்தோம் “ என்று பச்சையாய் பொய் சொன்னாள்.
அவருக்கு ஏதோ புரிந்தது போல ,அதற்கு மேல் ஒன்னும் கேட்கலை .”வண்டில ஏறு ,வீட்டுக்கு போகலாம் “ ,என்று சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் பிள்ளையோடு வண்டியில் ஏறினாள்.
வரும் வழியெல்லாம் சூன்யமாய்த் தெரிந்தது, விஷயம் தெரிந்த அம்மாவோ கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.
எவ்ளோ துணிச்சல் உனக்கு ,சாகத் துணிஞ்சவளுக்கு வாழத்துப்பில்ல முட்டாள், பைத்தியக்காரி!! என்று வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தாள்.
ஏற்கனவே நொந்து போயிருந்தவள் இப்போது முழுவதுமாய் பலவீனமாய் உணர்ந்தாள். பசி மறந்தாள், படுத்த படுக்கையானாள். யார் யாரெல்லாம் எவ்வளவோ சொல்லியும் மனது மாறவில்லை,காயம் ஆறவில்லை.
அவ்வப்போது அம்மா அம்மா ,என்றழுத வருணைப் பார்த்தும் அவள் தேறவில்லை .காரணம் ரவியின் மேலிருந்த அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் தான்.
ஓர் நாள், என்ன தாண்டி நினைச்சுட்டு இருக்க ! ?இப்படியே படுத்திருந்தா வாழ்க்கை மாறிடுமா? போனவன் போயிட்டான், பிள்ள முகத்தை பாருடி ,புத்திகெட்டவளே ,இப்படியே நீ இருந்தா பையன் சங்கடப்படுவான் ல?
ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, நீ மட்டும் தான் இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறவன்னு நினைச்சுக்காத! உன்னப்போல ஆயிரம் பேரு ,ஆனா அவளுக அவ வேலை உண்டு புள்ளை உண்டுன்னு மனச தேத்திட்டு வாழ ஆரம்பிச்சுட்டாங்க,,உன்னப்போல முடங்கிக் கிடக்கல.,விட்டுட்டு போனவன நினைச்சு அழுதிட்டு கிடக்கியே, வெட்கமா இல்ல?? சொல்றத சொல்லிட்டேன் ,என்னவோ செய் ! என்று அதிரடியாய் கூறிவிட்டு அகன்றாள் அம்மா.
புத்தி சொன்னது பிள்ளைக்காய் மண்டையில் உறைக்க ஆரம்பித்தது. மெதுவாய் மீண்டாள். அலைபேசியில் ஆன்மீக கதைகளை தேடிப் படித்தாள் ,ஆன்மீகப்பாடல்களை தேடிக்கேட்டாள். ஒரு நாள் அவள் கண்ணில் ஓர் எழுத்தாளரின் கவிதை ஒன்று தென்பட்டது.
நிச்சயம் ஏதுமற்ற
நிதர்சன வாழ்வில்
நீ ஒன்றுணர்வாய்
நீ உதிக்கையில்
உன்னோடு வருவதும்
நீ இறக்கையில்
உன்னைவிட்டு
விலகுவதும்
சுவாசம் ஒன்றே **
சரித்ரா *
என்ற கவிதை வரிகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை மேலோட்டமாய் அவளுக்கு உணர்த்தியது. அன்றிலிருந்து அவரது எழுத்துகளை தேடிப் படிக்க ஆரம்பித்துவிட்டாள். ஏதோ ஒன்று அவ்வெழுத்தோடு தன்னைக் காந்தம் போல இழுப்பதை உணர்ந்தாள். வரிகள் அவள் வலிகளுக்கு அருமருந்தாய் ஆனது ,அம்மருந்தை நன்றாய் தன் மனக் காயங்களில் பூசிக்கொண்டு தெளிந்தாள்.
எப்போதும் அவர் கவிதைகளையேக் கட்டிக்கொண்டு கிடந்தாள், அவருக்காக கவிதை எழுதவும் செய்தாள். ஒரு கட்டத்தில் அக்கவிதைகளே தன்னை அடிமைப் படுத்துவதை உணர்ந்தாள்.
நீ என்னை மட்டும் எழுதப் பிறக்கவில்லை, எல்லாம் எழுது ! என்று பணிக்கப்பட்டாள்.
தன் மூளையை அகன்ற வான்வெளியிலே சிந்தனை சிறகை விரிக்க பறக்கவிட்டாள். பார்ப்பதை எல்லாம் எழுதினாள்,கேட்பதைக் காண்பதை ,நினைப்பதை எல்லாம் எழுதினாள். அவள் மனம் வெகுவாய் இலேசானது போல உணர்ந்தாள். தான் பிறவி எடுத்தது தமிழை எழுதத்தானோ!? என்று நினைக்கையில் உள்ளம் பூரித்துப் போனது.
சிறு சிறு கதை கவிதைகளை எழுதி சிறு எழுத்தாளர் எனும் நிலைக்கு மாறிவிட்டாள் அவள் மாறவில்லை, மாற்றமே அவளை மாறவைத்தது.
இப்போது அவளுக்கு அழுவதற்கு நேரமில்லை,வாழ வேண்டும் என்ற துடிப்பும் தவிப்பும் அதைவிட அதிகமான எழுத்தாசையும் அவளை விடாது ஓடவைத்துக் கொண்டிருக்கிறது.மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பெருந் தத்துவத்தின் அடிப்படையில் மனம் மாறிய ராசாத்தி மகிழ்வோடு வாழ்வாள்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.