சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: புது வசந்தம்

by admin
144 views

எழுத்தாளர்: சௌஜன்யா

“இங்கே பாருய்யா… நான் கேட்ட காசுக்கு ஒற்றை ரூபாய் குறைஞ்சாலும், உன் பொண்டாட்டிக்குப் போனை போட்டு அம்புட்டு விசயத்தையும் சொல்லிபுடுவேன்!” என்றவள் விலகி இருந்த தனது சேலை முந்தானையைச் சரி செய்து கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள்.

“தெருவில் மேயுற கழுதை நீ. உனக்கென்னடி அம்புட்டு ஏத்தம். பேசாம தர்றதை வாங்கிட்டு இடத்தை காலி பண்ணு” என்று கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டு தனது சட்டை ஜோப்பில் இருந்து சில நூறு ரூபாய் தாள்களை எடுத்து அவள் மேல் விட்டெறிந்தான் அந்தக் கிழவன்.

முகத்தின் மீது காசு வீசப்பட்ட போதிலும் அவளிடத்தில் எந்தச் சலனமும் இல்லை!

கீழே சிதறிக் கிடந்த பணத்தை சேகரித்துக் கொண்டு, கலைந்திருந்த தனது முடியையும் கொண்டையிட்டு முடித்தவள், அந்த வீட்டில் இருந்து வெளியே இறங்கிச் சென்றாள்.

நேரம் அதிகாலை நான்கு மணியைத் தொட்டிருந்தது. செருப்பு அணியாத வெறும் கால்களுடன் தார் சாலையில் நடந்து சென்றாள் அவள்.

அவள் தான் வசந்தி!

இந்தச் சமுதாயத்தில் நாம் தினம் தினம் கடந்து செல்லும் சராசரி பெண்களில் தான் வசந்தியும் அடங்குவாள். வயதோ முப்பத்தி ஐந்து!

கருத்த தேகமும், பழைய சேலையும், பல நாட்களாக சீப்பே படாத கூந்தலுமாகச் சாலையில் வலம் வருபவளைக் கண்டால் யாராக இருந்தாலும் ஒரு நொடி முகம் சுழிப்பார்கள்.

இருபதுகளிலேயே அவளுக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், கணவன் – குழந்தைகள் என்று யாரிடமும் பெரிதாக அவள் அன்பு காட்டியதில்லை.

அவளது குடிகாரக் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து வசந்தியைக் கொடுமைப்படுத்த, தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டாள்.

வசந்தியின் தந்தை அவர்கள் வசிக்கும் ஏரியாவிலேயே துணிகளுக்கு இஸ்திரி போடும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். வசந்தியோடு சேர்த்து மூன்று மகள்கள் அவருக்கு.

மற்ற இரண்டு மகள்களும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசிக்க, வசந்திக்கும் அவளது பிள்ளைகளுக்கும் சேர்த்து தனது நோயுற்ற உடம்பையும் பொருட்படுத்தாமல், குடும்பத்திற்காக உழைக்கிறார் அவர்.

தினமும் அவர் உழைத்து ஐந்தோ பத்தோ கொண்டு வந்து கொடுத்தால் தான், அவருக்கே அந்த வீட்டில் கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கும்!

கணவனைப் பிரிந்து வந்தவள், தான் பெற்ற பிள்ளைகளுக்காக வேலைக்குச் சென்று உழைக்கிறாளா என்றால், இல்லை!

அவள் செய்வதெல்லாம் காலையில் தன் மகன்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, தன் தந்தையுடன் சேர்ந்து அவரது இஸ்திரி கடைக்குச் செல்வது தான்.

அங்கு செல்பவள் அவருக்கு உதவி எல்லாம் செய்ய மாட்டாள். இஸ்திரி கடையோரம் இருக்கும் நடைமேடையில் அமர்ந்து கொண்டு சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்து, கூடவே தையல் பயிற்சி கற்றிருந்தாலும் அவளுக்கு, உழைத்து சம்பாதித்து தனது அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அறவே இல்லை.

அதுமட்டுமல்ல, உன் வாழ்வின் லட்சியம் என்னவென்று கேட்டால் கூட அவளிடம் பதில் ஒன்றும் இருக்காது.

லட்சியம் என்கிற ஒன்று வசந்திக்கு இருந்தால் தானே அதைப் பற்றி எல்லாம் அவள் ஆழ்ந்து சிந்திக்க முடியும்!

தன் தந்தைக்கு எப்பொழுதாவது கரியை எரித்து, அந்தக் கனலை இஸ்திரி பெட்டிக்குள் போட உதவி செய்வாள். அவ்வளவு தான்!

அதிகாலை நான்கு மணிக்கு பூட்டப்படாத ஓட்டு வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள், அந்தக் கிழவன் விசிறியடித்தப் பணத்தை தனது துணிப் பையினுள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தாள்.

பாய் விரிக்காமல் தலையணை மட்டும் போட்டு தரையிலேயே படுத்துக் கொண்டவளை தூக்கம் நொடிகளில் தழுவிக் கொண்டது.

அவள் மீண்டும் எழ, காலை பதினோரு மணி ஆகிவிட்டது. வசந்தி எழுவதற்கு முன்பாகவே அவளது பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிச் சென்று விட்டனர்.

எழுந்து பல் துலக்கி, முகம் கழுவிவிட்டு வந்தவள், சமையல் கட்டுக்குள் நுழைந்து மண்பானையில் இருந்த பழைய சோற்றை எடுத்துப் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

“இந்தக் கழுதை நேத்து ராத்திரி எங்கே போய் ஊர் மேஞ்சுட்டு வந்துச்சோ! கட்டி கொடுத்த இடத்துல ஒழுங்கா வாழத் துப்பில்லாம இங்கே வந்து என் உசிரை வாங்குது. இவளால பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் இருக்கா? துப்புக் கெட்ட கழுதை!” என்று, வசந்தியின் தாய் அவளை வார்த்தைகளால் வசைப்பாடியதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.

சோற்றை கவளம் கவளமாக வாயினுள் அள்ளிப் போட்டவள், புடவையை மட்டும் மாற்றிவிட்டு தன் பையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே இறங்கிச் சென்றாள்.

வழக்கம் போல செருப்பு அணியாத காலுடன் அந்தத் தெருவில் நடந்து சென்றவள், அங்கிருந்த டீக்கடை ஒன்றில் தேனீர் வாங்கிப் பருகினாள்.

அந்தக் கடையில் நின்று தேனீர் பருகிய ஆண்மகன்களின் பார்வை தன் உடல் அங்கங்களின் மீது அலைவதையோ அல்லது இவளைப் பார்த்ததும் ஏளனச் சிரிப்புடன் அவர்கள் எள்ளி நகையாடியதையோ அவள் கண்டு கொள்ளவே இல்லை.

டீயைக் குடித்து முடித்ததும் கிளம்பி விட்டாள், தன் தந்தையின் இஸ்திரி கடைக்கு!

ஏற்கனவே இஸ்திரி செய்து கொண்டிருந்தவர், வசந்தி வருவதைக் கண்டபோதிலும் அவளிடம் எதுவும் பேசவில்லை.

அவ்வளவு ஏன்! அவளை அவர் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

அந்தக் கடைக்கு வழக்கமாக துணிகளைத் தேய்க்க கொடுக்கும் சாந்தாம்மா வந்து சில காட்டன் புடவைகளைக் கொடுக்க, அவர் அதை வாங்கி வைத்துக் கொண்டார்.

நடைமேடையில் அமர்ந்திருந்தவளிடம், “என்ன வசந்தி. இன்னைக்கும் இங்கே தான் வெட்டியா உட்கார்ந்திருக்கியா? உன் பிள்ளைகளுக்காக கூட நீ வேலைக்கு எதுவும் போகக் கூடாதா?” என்று சாந்தாம்மா கேட்க, அவளிடம் பதில் இல்லை.

“என்னமோ போ! உன் அப்பாவுக்கு உடம்பில் தெம்பு இருக்கிற வரைக்கும் தான் அவர் உழைச்சு உங்கக் குடும்பத்துக்கு கஞ்சி ஊத்துவார். அதுக்கப்புறம் எல்லாரும் என்ன செய்யப் போறீங்க?” என்றவரைப் பார்த்தவள் எழுந்து அவரிடம் வந்தாள்.

“சாந்தாம்மா டீ குடிக்கணும். ஒரு பத்தோ இருபதோ இருந்தா குடுங்களேன்!” என்று அவள் உணர்ச்சியே இல்லாத குரலில் கேட்க, தனது மணி பர்சில் இருந்து இருபது ரூபாயை எடுத்து வசந்தியிடம் கொடுத்தார் அவர்.

அதை வாங்கியவள் கால் போன போக்கில் எங்கோ நடந்து செல்ல, “இவளை எந்த ரகத்தில் சேர்க்கிறதுன்னே தெரியல!” என்று புலம்பியபடி அங்கிருந்து சென்று விட்டார்.

இப்படியே நாட்கள் நகர, வசந்தியின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.

வசந்தியின் தாயோ, தன் மகள்  தவறான உறவிற்குச் சென்று வருவது தெரிந்தால் அவளுக்குச் சாப்பிட உணவு கொடுக்க மாட்டார்.

பசி வயிற்றைக் கிள்ளும் போதெல்லாம் சாந்தாம்மாவின் வீட்டு வாசலில் சென்று நிற்பாள் அவள்.

“பழைய சோறு ஏதாச்சும் இருந்தா குடுங்க சாந்தாம்மா! ரொம்ப பசிக்குது. வீட்டில் அம்மா சோறு தர மாட்டேன்னு சொல்லீருச்சு” என்றவளிடம்,

“ஏன்டி உனக்கு இந்தப் பொழப்பு? உங்க அப்பா கடை பக்கத்திலேயே ஒரு தையல் மெஷினைப் போட்டு நாலு பேருக்குத் துணி தைச்சு கொடுத்து, உன் காசுல உன் பிள்ளைகளையும் படிக்க வச்சு டீசென்டா வாழலாமில்ல” என்றார் அவர்.

ஆனால், அவர் சொன்ன அறிவுரை எதுவும் வசந்தியின் தலையில் ஏறியதாகத் தெரியவில்லை.

“சாப்பாடு இருந்தா தாங்கம்மா. ரொம்பப் பசிக்குது!” என்பது மட்டுமே அவளது பதிலாக இருக்க, தலையில் அடித்தபடி அவளுக்கு உணவைக் கொண்டு வந்து கொடுத்தார் சாந்தாம்மா.

இரண்டு மாதங்கள் கடந்திருக்க, ஒருநாள் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த வசந்தியின் தந்தை மயங்கிச் சரிந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரைத் தூக்கி அவசரமாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் செயல் இழந்திருக்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்று டாக்டர்கள் கையை விரித்துவிட, அவரை வீட்டிற்கே அழைத்து வந்து விட்டனர்.

இதோடு வசந்தியின் தந்தை படுத்த படுக்கையாகி ஒரு மாத காலம் ஆகிவிட்டது.

கையில் இருந்த பணம் அனைத்தும் அவரது மாத்திரை மருந்திற்கே செலவாகிக் கொண்டிருக்க, மளிகை சாமான் வாங்கக் கூட காசில்லாமல் ஆனது.

வசந்தியின் தந்தை படுக்கையில் விழுந்த பிறகு அவரது இஸ்திரி கடையும் முடங்கிப் போனது.

அடுத்த வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் போக, வீட்டின் நிலையை நினைத்து கலங்கிப் போய் அழுது கொண்டிருந்தார் வசந்தியின் தாய்.

“அழாதீங்க பாட்டி! நான் வேணும்னா நம்ம முத்து அண்ணாச்சி கடைக்கு வேலைக்குப் போகட்டுமா. தாத்தாவையும் குணப்படுத்திடலாம்” என்று வசந்தியின் மூத்த மகன் கூற, அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார் அவர்.

அவர்களுக்கு நேர் எதிராக அமர்ந்திருந்த வசந்தியை எரிக்கும் பார்வை பார்த்தவரோ,

“உலகம் முழுசா தெரியாத சின்ன பிள்ளை கூட, வீடு இருக்கற நிலைமையைப் பார்த்து வேலைக்குப் போகட்டுமான்னு கேட்குது. ஆனா, இந்த கூறு கெட்டவ, சாப்பிடுறதையும் ஊர் மேயுறதையும் தவிர வேற எதையுமே செய்யுறதில்ல. த்தூ…” என்று காறி உமிழ்ந்தார்.

அவர் பேசியதைக் கேட்டதும் உதட்டை வளைத்துச் சிரித்தவள், வேகமாக எழுந்து சென்று தனது துணிப்பையில் இருந்தப் பணத்தை எடுத்து வந்து தன் தாயிடம் நீட்டினாள்.

“உனக்கு பணம் தானே வேணும். இந்தா வச்சுக்கோ!” என்றவளை எரிக்கும் பார்வை பார்த்தவரோ, அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து அவளைக் கோபமாக அடிக்க ஆரம்பித்தார்.

துடைப்பம் பிய்ந்து போகும் அளவுக்கு தன் மகளை அடித்தவர், “அட ச்சீ… யாருக்கு வேணும் உன் மானம் கெட்ட காசு. முதல்ல இங்கே இருந்து வெளியே போடி. என் கண்ணு முன்னாடி நிற்காதே!” என்று கத்த, கண்களில் இருந்து நீர் வழிய அங்கிருந்து வெளியே சென்று விட்டாள் வசந்தி.

கால் போன போக்கில் நடந்தவள் தான் வழக்கமாகச் செல்லும் தன் தந்தையின் இஸ்திரி கடைக்கு அருகில் சென்று அமர்ந்தாள்.

உடம்பில் அடிப்பட்ட இடங்கள் அனைத்தும் தீயாய் எரிந்தது. ஆனால், அவளது கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

சாலையை வெறித்தபடியே அமர்ந்திருந்தவளின் அருகே ஒரு சிட்டுக்குருவி வந்து எதையோ கொத்த, கவனத்தை அதனிடத்தில் செலுத்தினாள்.

தனது கூட்டிற்காக சிறிய கம்புகளையும் குச்சிகளையும் சேகரித்துச் சென்று கொண்டிருந்தது அந்தப் பறவை.

அதன் செயலை சில நொடிகள் பார்த்தவள், சுற்றியிருந்த உலகத்தின் மீது அப்பொழுது தான் கவனம் செலுத்தினாள்.

வீட்டு வேலை செய்யும் பெண்கள், சாலையைச் சுத்தப்படுத்தும் துப்புரவு பணி செய்வோர், வீடு வீடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் பையன், தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் தாத்தா என்று அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரையும் ஆழ்ந்து கவனித்தாள் அவள்.

 ஐந்தறிவு ஜீவன் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை என்று, தன்னைச் சுற்றியிருக்கும் உலகில் வாழும் அனைவருமே உழைத்து தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்கிற நிதர்சனம் புரிந்தது அவளுக்கு.

ஏக்கமாகத் திரும்பி தன் தந்தையின் இஸ்திரி கடையைப் பார்த்தாள் வசந்தி.

அவளது கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டே இருந்தது!

சில மணிநேரம் அங்கேயே அமர்ந்திருந்தவளின் மனதில் இத்தனை வருடங்களில் இல்லாத அவளவிலான ஒரு மாற்றம்!

அவள் எழுந்தாள்; நேராக சாந்தாம்மாவின் வீட்டிற்குச் சென்றாள்.

“எங்க அப்பாவோட தொழிலை நானே எடுத்து நடத்தலாம்னு இருக்கேன் சாந்தாம்மா! எங்களோட கடையை மறுபடியும் திறக்க, எனக்கு உதவி செய்வீங்களா?” என்று அவள் கேட்க, சாந்தாம்மாவின் முகத்தில் பிரகாசமானப் புன்னகை!

அதன் பிறகு…

அவள் மனம் மாறியது, குணம் மாறியது, வாழ்க்கையின் தரம் மாறியது.

ஆம்! வசந்தி மாறி விட்டாள்; தன் வாழ்விற்கான விடியலைத் தேடி!

இனி வசந்தியின் வாழ்வில் புது வசந்தம் வீசட்டும்!

முற்றும்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!