எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 5: அமைதியாக வாழ வந்த உலகில் அமைதியின்மை ஏன்?
இந்த கதை ஒரு மனிதனின் உள்ளக் குழப்பத்தையும், கடவுளிடம் அவன் நேரடியாகக் கேட்கும் கேள்விகளையும், கடவுள் தரும் ஆழமான ஆன்மிகப் பதில்களையும் கொண்டது. இது ஒரு உணர்ச்சி மிகுந்த, ஆழமான உரையாடல் கதை.
நடுநிசி, கடலில் ஒரு படகில் தனியாக ஒரு மனிதன்.
அவன் மனதில் கொட்டிக்கிடந்த கேள்விகள். இயற்கையின் கொந்தளிப்பும் மனித வாழ்வின் வலியும் அவனை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
துயரம் தாங்காமல் அவன் விழிகள் மூடி இருந்தான்.
அப்போது, படகுக்குள் மிகப் பிரகாசமான ஒளி பரவியது.
திடீரென அந்த ஒளி ஒரு உருவமாகி நிதானமான குரலில்,
“மகனே அருண், உன் இருதயத்தில் உள்ள குமுறல்களை கேள். நான் பதிலளிக்கிறேன்.” என்றார்.
அருண் பயந்து அதிர்ச்சி கலந்த வியப்போடு “நீநீ…?” என இழுத்தான்.
“நானும் உன்னை போல ஒருவன் தான், நீ எப்போது உன்னை நினைக்கிறாயோ, அப்போது நான் பிறக்கிறேன்.”
என்றார். ” சரி உன் கேள்விகளை கேள் அருண்” என்றார்.
5. அமைதியாக வாழ வந்த உலகில் அமைதியின்மை ஏன்?
இந்த உலகம் பசுமை, பறவைகள், இரவு அமைதி… இவை எல்லாம் அமைதிக்கானது. ஆனால் மனிதர்களுக்குள் போர், அரசியல், வீணான பிரிவுகள், குழப்பங்கள். ஏன்?”
“உலகம் அமைதியாகவே உள்ளது. மனிதர்கள் தங்களது ஆசைகளை தீர்த்து கொள்ள உலகைத் திரித்துக் காண்கிறார்கள். அமைதியை இழந்தது உலகம் இல்லை. அது மனிதனின் உள்ளம். உன் உள்ளத்தில் அமைதி பிறக்கும்போது, நீ பார்க்கும் உலகம் மாறும். யுத்தமே நடந்தாலும், உன் மனம் அமைதியாகவே இருக்கும்.
அது உன்னுள் காணப்படும் மன அமைதியால் மட்டுமே சாத்தியம்” என்றான் இறைவன்.
மௌனத்தில் தலை குனிந்தபடி
“நான் கோபப்பட்டேன்… ஆனால் என் கோபத்திற்குள் என் உணர்வுகளும் இருக்கின்றன. என் கேள்விகளுக்கு என்னுள்ளேயே பதில்கள் இருப்பது அறியாமல் இத்தனை குழப்பம் என்னுள் கிளம்பியது.”
என மன்னிப்பு கேட்டு வணங்கினான் அருண்.
“குழப்பம் ஏற்பட்டால்தான் தெளிவு பிறக்கும். என் பதில்கள் உன் உணர்வுகளில் பதிந்துவிட்டன. கேள்விகள் ஒளியை தேடுவன. பதில்கள் ஒளியை வெளிப்படுத்துவன. இரண்டுமே உன்னிடமே உள்ளது என உனக்கு புரிய வைத்தேன்.”
தொடர்ந்து “உன் மனதின் அமைதி. நீ கேட்டால் பதிலளிப்பவன். நீ விழித்தால் தோன்றுபவன். நீ நேசித்தால் வாழ்பவன். உன்னோடு எப்போதும் இருப்பவன் நான்” என்றார் கடவுள்.
இயற்கையின் பேராற்றலும், மனித வாழ்க்கையின் வலியுமான மரணங்களும், நம்மை உள் நோக்க வைக்கின்றன. இறைவன் எல்லாவற்றிற்கும் காரணமல்ல, ஆனால் எல்லாவற்றிலும் நம் உள்ளத்தின் பிரதிபலிப்பாக இறைவன் இருக்கிறார். உணர்வுகளுடன் கேள்விகள் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பிம்பம்தான் என உணர்ந்தான் அருண்.
இந்த கதை அருணைப் போல் குழப்பமுள்ள உள்ளத்தில் அமைதி ஒளிக்கீற்று ஏற்பட்ட செய்யுமானால் அதுவே இறைவன்
முற்றும்
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.