சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: சிந்தனையில் மாற்றம்

by admin
129 views

எழுத்தாளர்: மிருதுளா அஷ்வின்

If you shut your door to all errors, truth will be shut out. — Tagore என்று ரபீந்திரநாத் தாகூர் படத்தோடு வாசகம் அச்சிடப்பட்ட  போஸ்டரை அவள் படுக்கைக்கு நேர் எதிர் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்தாள் சாணக்யா.

“பாரு… இதெல்லாம் தேவையா? பொண்ணுங்களை சரியா வளர்த்தா இப்படியெல்லாம் நடக்குமா?” என்று தொலைகாட்சியில் செய்தியை பார்த்து ஏசிக் கொண்டிருந்தார் கற்பகவல்லி பாட்டி.

நாங்க எல்லாம் அந்த காலத்துல குனிஞ்ச தலை நிமிராமல் இருப்போம்… ஆனா இப்ப அப்படியா இருக்காங்க?” என்று குறைப் பாடியதும், அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் சாணக்யா.

“பாட்டி..” என்று எதிர்த்து வாதாட வந்தவளை, அவளின் தாயார் சகுந்தலாவின் கெஞ்சலான பார்வை அவளை தடுத்து நிறுத்தியது.

அம்மாவை கண்டதும் தன்னை அடக்கிக் கொண்டு, கோபக்கனலை ஒரு பெருமூச்சுவிட்டபடி அடக்கினாள்.

அதே நேரம் பாட்டியின் மகன் சிவராமனும் அவரது மகன் அரிச்சந்திரனும் உள்ளே வந்தார்கள். சாணக்யா கற்பகவல்லி பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. தன் தாயின் குணம் அறிந்த சகுந்தலா அவர் பேசும் அத்தனை பேச்சுக்கும் அமைதியாக இருப்பார். ஆனால் அதே குணத்தை சாணக்யாவிடம் எதிர்பார்த்தால் எப்படி? சாணக்யா தர்க்கம் செய்ய, அதற்கும் பெண்பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று சகுந்தலாவின் தலை தான் உருளும்.

சகுந்தலாவின் கணவர் செல்வம் மாசத்தில் பாதி நாட்கள் ஊரில் இருப்பதில்லை. அவரின் வேலை அப்படி. கனரக வாகன போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் வேலையில் இருப்பவர். அவர் பல ஊருக்கு சென்று பல மக்களை பார்ப்பதால், சமுதாயம் பற்றி புரிந்து முற்போக்குவதியாக வாழ்பவர். தன் பெண்ணையும் அவ்வாறே வாழ வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.

ஒவ்வொரு முறை கற்பகவல்லி வரும் போதும் சாணக்யா திருமணம் பற்றி பேசி, ஒரு பிரச்சனையை கிளப்பினாலும் கொஞ்சமும் சளைக்காமல் நிராகரித்து விடுவார் செல்வம்.

“கல்யாணம் செய்து வேற வீட்டுக்கு போகும் பெண்ணுக்கு எதுக்கு இவ்வளவு படிப்பு? சமைக்கவும், புருஷனை பத்திரமா பார்த்துகிட்டா போதும் அவன் அவளை தங்கத்தட்டில் தாங்க மாட்டானா என்ன?” என்று கற்பகவல்லி கூறும் போதும்,

சாணக்யா, “ஏன் பாட்டி… நான் ஏன் அவனை நம்பி இருக்கணும்? அதோட நான் படிக்கிறது என் அறிவை வளர்த்துக்கத்தான். இதில் நான் எவ்வளவு படிக்கணுமென்று இன்னொருத்தர் எப்படி சொல்ல முடியும்?” என்று அவரோடு வாதிடுவாள். தந்தையின் துணையோடு அவள் பேசுவதை பாட்டியால் தடுக்க முடியாது. மருமகன் முன் அதிர்ந்து பேச மாட்டார் கற்பகவல்லி.

தாய்மாமன் மற்றும் அவரது மகன் வந்ததும், நலம் விசாரித்து உள்ளே சென்றுவிட்டாள் சாணக்யா. அவர்களிடம் தற்போது அவர் பார்த்த தொலைகாட்சி செய்தியில் யாரோ ஒரு காமுகன் பதின் பருவ பெண்ணை சீண்டியதாகவும், பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் வர, அதனை கண்டு பாட்டியம்மாள் அச்சிறு பெண்ணை குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டார்.

அந்த பெண் அணிந்து சென்ற உடை சரியில்லை; துணையோடு செல்லவில்லை, வளர்ப்பு சரியில்லை, அப்பெண் தான் அந்த காமுகனுக்கு சைகை செய்யும் விதமாக நடந்திருப்பாள் என்று எண்ணற்ற பேச்சுகளில் பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சுமத்துவதைக் கேட்டதும், பொங்கி விட்டாள் சாணக்யா. ஆண்கள் இருவரும் கூட அமைதி காப்பதை அறிந்து அவர்கள் மீதும் கடுங்கோபம் கொண்டாள்.

“பாட்டி… யார்? எப்படி? என்ன நடந்துச்சுனு முழு விவரமும் தெரியாம சும்மா வாய் புளிச்சுதா, மாங்காய் புளிச்சுதான்னு பேசக் கூடாது. நீங்களே ஒரு பெண் இனத்தில் இருந்து கொண்டு, இன்னொரு பெண்ணை அதுவும் டீனேஜ் பெண்ணை இப்படி கொச்சையாக பேச எப்படி வாய் வருது உங்களுக்கு?”

“என்னடி பெரியவங்களை மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க? உள்ள போடி! பெண்ணை வளர்க்க தெரியாதவங்களுக்கு தான் பெண்கள் பிறந்து இந்த ஊரே கெட்டுப் போச்சு…” என்று பாட்டி ஏசவும், சகுந்தலா ஓடி வந்து தன் பெண்ணை அடக்க முயன்றார்.

“அம்மா இதில் நீ தலையிடாத… என்னிக்காவது ஒரு நாள் இங்க வர வேண்டியது; நாலு பிரச்சனை செய்ய வேண்டியது; கிளம்பி போக வேண்டியது; இதே வேலையா போச்சு இவங்களுக்கு… குட்டக் குட்ட எவ்வளவு நாள் குனிஞ்சுட்டே இருக்கிறது? நீ பேசாம அவங்க சொல்றதை எல்லாம் கேட்டு தான், அவங்களுக்கு வயசானாலும் இன்னும் வாய் குறையல. நிதானம் இல்ல. தான் நினைச்சது தான் சரின்னு வாதம் பண்ணிட்டு இருக்காங்க. இன்னிக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்” என்றாள்

அவள் பேசுவதை அதற்கு மேல் தடுக்கவில்லை சகுந்தலா.

“பாட்டியம்மா… நீங்க இங்க வந்து தங்குவதை நான் தப்பு சொல்லல. ஆனா நீங்க வந்தாலே ஏனடா இவங்க வராங்க அப்படிங்கிற பயம் தான் வருது அம்மாக்கு.

ஒவ்வொரு முறையும் வளர்ப்பு சரியில்லைன்னு சொல்றீங்களே… பொண்ணுங்களை மட்டும் சரியா வளர்த்தால் போதாது. முக்கியமா ஆண்பிள்ளைகள் தான் ஒழுங்காக நெறிமுறை சொல்லி வளர்க்கப்படனும்.

பாதிக்கப்பட்ட டீனேஜ் பொண்ணு தப்புன்னு சொன்னீங்களே… அப்படி சீண்டுவதே தப்பு, பெருங்குற்றம், செய்யக்கூடாதுன்னு அந்த பையனுக்கு ஏன் சொல்லி தரலை.?

அப்படி மற்றவர்கள் சொல்லித் தந்தாலும் அது அவர்களுக்கு மண்டையில் உறைக்குதான்னு தெரியல. ஏன்னா உங்களை மாதிரி சிலர் அவங்களை ஆம்பிளைடா, வாரிசு, எதுவெனா செய்யலாம் அப்படிங்கிற கேவலமான திமிரை அவர்களுக்குள் சின்ன வயசிலிருந்தே விதைப்பதால் தான். அதனால் தான் இந்த மாதிரி காமுகர்கள் நான்கு வயது குழந்தையையும் விடுவதில்லை, சில வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளைக் கூட விடுவதாயில்லை.” என்றாள் மூச்சு வாங்க.

அவள் பேசுவதை மாமன் மகன் அரிச்சந்திரன் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“அடியே… இந்தாடி இதுக்கு தான் உன்னை ரொம்ப படிக்க வைக்கக் கூடாதுன்னு சொன்னேன். சட்டம் பேசற… யாரை எப்படி வளர்த்தால் நாடு உருபடும் என்று எங்களுக்கு தெரியும்?”

“கிழிச்சீங்க! நீங்க வளர்த்த மகன் தானே இந்த மாமா. அவர் ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டவர் தானே, அப்புறம் எதுக்கு இன்னொரு பெண் கேட்குது?? ரெண்டு பொண்ணுங்களை ஏமாத்தி குடும்ப செலவுக்கு காசு இல்லாம, கடன் பிரச்சனையில் மூழ்கிப் போயிட்டு இருக்காரே! எதனால் இப்படி ஆச்சு.?” என்று கேட்டாள். தாய்மாமனுக்கோ முகத்தை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை. கூடவே சாணக்யாவை உக்கிரமாக முறைத்தார்.

“ரெண்டு கல்யாணம் எல்லாம் சர்வ சாதாரணமா ரொம்ப வருஷமா நடந்துட்டு தான் இருக்கு என் தாத்தா கூட ரெண்டு பொண்டாட்டி கட்டினாரு. அவர் நல்லா வாழ்ந்துட்டு போனாரு!” கற்பகவல்லி இவ்வாறு கூறவும்

“நான் ரெண்டு பொண்ணு கட்டினேன் அதுக்கு என்ன இப்ப? என்னால முடியுது நான் செய்யறேன்! மரியாதை இல்லாம பேசினா நாக்கை இழுத்து வெச்சு அறுத்திருவேன்” சிவராமனும் சண்டைக்கு வந்தார்.

“நியாயப்படுத்தி பேசாதீங்க! நீங்க ரெண்டு பொண்டாட்டி கட்டினவங்க.. உங்களுக்கு பொண்ணு பொறந்து இருந்தா, அந்த பொண்ணை கட்டின மாப்பிள்ளையும் ரெண்டு பொண்டாட்டி கட்டினா என்ன பண்ணுவீங்க?”

“அவனை வெட்டி போட்டிருவேன்” என்றார் கோபமாக!

“உங்களுக்கு வந்தா இரத்தம், உங்க மாமனாருக்கு வந்தா தக்காளி சட்டினியா? இது வீரம் இல்ல அசிங்கம்” என்றாள் சாணக்யா.

மேலும், “உங்க இஷ்டத்துக்கு சமுதாயம் மாறனும், அதுவே பெண்கள் நினைச்சா பழியை ஈசியா அவங்க மேலேயே போடுவீங்க… என்ன உலக மகா நியாயம் இது?”

சிவராமன் அதற்கு மேல பேசவில்லை. அரிச்சந்திரன், “சாணக்யா… பேசாத பிளீஸ். அமைதியாக இரு” என்று இடைப்புகுந்தான்.

“ஹரி… உனக்கும் இதே மாதிரி பழைய கேவலமான எண்ணங்கள் இருந்தா, என்கிட்ட பேசிடாதே” என்று எச்சரிக்கை விடுக்கும் குரலில் கூறினாள்.

“நீ எதுக்கு டா அவளிடம் பம்மிட்டு பேசற? ஆம்பிளையா தைரியமா பேசுடா… அவ கிடக்கிறா… ராங்கிக்காரி” என்றார் பாட்டி.

“இதை தான் சொல்லிட்டு இருக்கேன். உங்களை எல்லாம் திருத்தவே முடியாது… திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க. அதே தான் இந்த சமுதாயத்துக்கும். மக்கள் வேறு சமுதாயம் வேறு இல்ல. சீக்கிரம் உங்களுக்கு புரியனும் என்று நான் கடவுளை வேண்டிக்கிறேன்” என்றவள் அன்னையிடம் திரும்பி “அம்மா நான் கிளம்பறேன்… பஸ்சுக்கு லேட்டாகுது” என்றவள் வெளியே நடந்தாள்.

அவள் பின்னாடியே ஓடி வந்த அரிச்சந்திரன் அவளை தடுத்து நிறுத்தினான்.

அவள் மீது எப்போதுமே அவனுக்கு நல்ல அபிப்ராயம் இருக்க, அவளோடு இணக்கமாக பழகவும் ஆவல் கொண்டான் அவன்.

“சாணக்யா… எதுக்கு பாட்டியிடம் வீண் சண்டை…? அவங்க எப்பவும் இப்படித்தான் என்று நான் சொல்லியா உனக்கு தெரியணும்?” என்று கேட்டான்.

அவள் நின்று அவனை உற்று நோக்கினாள். உடனே அவன், “நீ பேசியது தப்புன்னு நான் சொல்ல வரலை. ஆனா பேசின விதம் சரியான்னு தான் கேட்கிறேன்.”

“நீ மட்டும் உத்தமபுத்திரனா? நீ கூட பொண்ணுங்களை கிண்டல் பண்ணி சிரிக்கிறதைப் பார்த்திருக்கேன். அவங்க உடல் குண்டா இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும், ஏன் எப்படி இருந்தாலும் உனக்கென்ன? அவங்களை நீயா சோறு போட்டு காப்பாத்த போற? அவங்க உடலில் ஏதும் பிரச்னை இருந்து கூட அவங்களுக்கு பாதிப்பு இருக்கலாம்!; எதுவேனா இருக்கட்டும், நீ பண்றதைப் பார்த்து இன்னும் நாலு பேர் செய்வான்,… உங்களுக்கு அது சில நொடிகள் சந்தோஷம் ஆனா அதை காது கொடுத்து கேட்கும் பெண்களுக்கு, தன்னை நினைத்தே அவமானபடும், பலவீனமாக மாறும் வாய்ப்பு எவ்வளவு இருக்கு தெரியுமா? அவங்களோட தன்னம்பிக்கையை அழிப்பதில் அப்படியென்ன சந்தோஷம்? தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான். நான் எல்லா ஆண்களையும் பெண்களையும் குறை சொல்ல வரல. எப்பவுமே நல்லதை விட கெட்டதை ஈசியா மற்றவருக்கு கடத்திட முடியுது.”

“எனக்கு புரியுது சாணக்யா. இனிமே நான் யாரையும் கிண்டல் பண்ண மாட்டேன்” என்றான் தலைகுனிந்து.

“சொல்லாதே… அதை பின்பற்றி வாழப் பாரு அரிச்சந்திரன்.”

“நிச்சயமா… ஆனா உன் ஒருத்தியால இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும் நினைக்கிறாயா?”

“சிறு துளி பெருவெள்ளம் என்று கேள்விப்பட்டதில்லையா நீ?

இன்னிக்கு வந்த நியூஸ் பற்றி எடுத்துக்கோ. பாலியல் துன்புறுத்தல்கள் என்றாலே, பாதிக்கபட்ட குழந்தை, பெண்களையே அவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கி விடுகின்றார்கள். குற்றம் செய்தவன் ஏதோ சாதித்ததுப் போல வாழ்கிறான். தன் சுயநலத்திற்காக யாரையும், எந்த உயிரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் அவனை மட்டுமல்ல அவனை சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் அழித்து விடும்.

சின்ன வயசிலிருந்தே, ஆண்பிள்ளைகளுக்கு, பெண் என்பவள் போகப்பொருள் அல்ல. அவளுக்கும் உணர்வுகள் இருக்கிறது. உனக்கு இருக்கும் அதே கண்கள், காதுகள் மூக்கு போன்ற உடல் பாகங்கள் தான் அவளுக்கும் இருக்கிறது. அவள் எந்தவித ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டியவள் அல்ல. நீ போடும் அரைகால் சட்டை அவளும் போட்டால் என்ன? அதே கால்கள் தானே?

ஒரு பெண் நம் பாரம்பரிய சேலையையும் ஒரு ஆண் வேட்டி சட்டை அணிந்து மேலைநாட்டு வீதியில் உலா வந்தால், பலபேருடைய பார்வை அவர்கள் இருவர் மீது விழும். ஏனென்றால் அது வித்தியாசமாக அவர்களுக்கு தென்படுவதால்.! ஆனால் ஒரு கூட்டமே அங்கே இதே உடையை அணிந்தால் அது வித்தியாசமாக தெரியாது போய்விடும். அதுவும் ஒரு வித ஆடை வடிவமைப்பு என்று புரிந்துவிடும். வித்தியாசமாக உணர்ந்த மக்களும் அதை வாங்கி பயன்படுத்த தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறதே!…

அந்த வித்தியாசத்தை போன்றது தான் ஆண் பெண் பிள்ளைகளை வெவ்வேறு விதமாக வளர்ப்பதும்.

அவன் அப்படிதான் என்று ஆண் பிள்ளைகளை ‘தண்ணி தெளித்து’ விடவும் வேண்டாம். பெண்களுக்கு நல்ல பெயர், பட்டம் கொடுத்து அவர்களை அடக்கி வைக்கவும் வேண்டாம்.

வீட்டில் இருவரையும் சமமாக நடத்தினால் நல்லது தானே.. தீர்வு என்று வெளியில் தேட வேண்டாம். வீட்டில் இருந்து துவங்கினாலே மாற்றம் நிகழும்.

பள்ளி பருவத்திலிருந்தே சகஜமாக பேசி நட்பு பாராட்டினால், வேற்றுமை தெரியாது. இதை சொல்லி சொல்லி வளர்த்தால், எதிர்காலம் சற்று மாறுபட்டு வாழும்.

‘மீ டூ’ என்கிற பதிவுகளில் கூட பலர் பாதிக்கப்பட்டது பற்றி சொன்னார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அவர்கள் நெருப்பில் இருந்து மீண்ட சர்வைவர்ஸ்.”

“வாவ்… நிறைய விஷயம் பேசறியே. எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றான் அவன்.

“இராமாயணத்தில்…”

“என்னது இராமாயணமா? நிகழ்காலத்தில் தொடங்கி இராமர் காலத்துக்கு போயிட்டியா?”

“ஆமா. சீதாதேவி தன் பெண்மையை நிரூபிக்க தீ வேள்வியில் குளித்தாள். அவள் கணவன் இராமன் அதை செய்ய முதலில் சொல்லாவிட்டாலும், ஊர் பேசியதை எதிர்க்கவில்லையே. அவரை யாருமே அவரின் ஏக பத்தினி விரதத்தை ஊரார் முன்னாடி நிரூபிக்க சொல்லவில்லையே. ஏன்?! காலங்காலமாக இது ஆண்கள் சமுதாயமாக தான் இருக்கிறது என்றைக்கு ஆண்கள் பெண்கள் பேதம் மறைந்து மக்கள் சமுதாயமாக மாறுகிறதோ அன்று சரிசமமாக வாழ்வதாக எண்ணலாம்.” என்றாள். அவளுள் இருந்த ஆத்திரத்தை, ஆதங்கத்தை அவனிடம் கொட்டினாள்.

அவள் பேசியதைக் கேட்டு அவனின் கண்கள் வருத்தத்தை தெளிவுற காட்டியது. அரிச்சந்திரன் தன் மனதில் இருந்த அழுக்கை களைந்து பெண்களை மதிக்க வேண்டும் என்று எண்ணினான்.

அவர்களும் இந்த பூமியில் அவர்கள் விருப்பம் போல வாழ எல்லாவித உரிமையும் உள்ளவர்கள் என்பதைப் புரிந்துக் கொண்டான். அவனுள்ளும் பெண்களை சற்றே கீழாக தான் எண்ணியிருந்தான். இன்று அது மாற்றம் காணும் நாளாக உணர்ந்தான் அரிச்சந்திரன்.

அவனும் சாணக்யா கண்களை நேராக பார்த்து, “என் நெஞ்சிலே நீ சொன்னதை எழுதிட்டேன். சிந்தனையில் மாற்றம் நிகழ்ந்தால், அது சமுதாயத்தில் ஏற்படும். என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.” என்றான்.

முற்றும்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!