சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: மாறியது நெஞ்சம்

by admin
104 views

எழுத்தாளர்: பத்மினி அருணாசலம் 

“ஏன்னா! விஜி கிட்ட வேண்டியமட்டும் எடுத்துச்சொல்லிப் பார்த்துட்டேன்! அவளுக்கு இஷ்டமில்லையாம்!”

        ” இப்படி சொல்றது நியாயமா? பத்து வருஷமா நாமளும் இவளுக்கு வரன் பாத்துண்டேதானிருக்கோம்! ஏதோகாரணத்தைச்சொல்லி, பிள்ளையாத்துக்காரா ஜாதகம் பொருந்தியிருந்தாலும், மேற்கொண்டு பேசவே மாட்டேங்குறா!

           இருந்திருந்து, இப்பதான் ஒரு ஜாதகம் பொருந்தி வந்ததோட, பைய்யனே, விஜி போட்டோவை பாத்துட்டு, ‘எனக்கு புடிச்சிருக்கு, உங்க பெண்ணும் என் போட்டோ பாத்து, சம்மதம்னு! சொன்னா, மேற்கொண்டு பேச, பெத்தவங்கள அழைச்சிண்டு நேரே வரேன்!”னு போன் பண்ணினான். இவ, அவனோட போட்டோவ பாத்தாளா? ஏன் வேண்டாங்குறா?” என்று ராமநாதன் முடிக்குமுன்னே,

           “அப்பா! ‘எங்காத்துக்காரர் வைதீக வாத்யார்!” ன்னு சொல்லிக்கிறதுல எனக்கு இஷ்டமில்லே! என்னால மடிசார் கட்டிண்டு, மடி, ஆசாரம்னு வாழ முடியாது!”…திடமாக தன் மறுப்பைத் தெரிவித்து விட்டு, வேகமாக வண்டியை கிளப்பிச்செல்லும் மகளை, திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர் அந்த அப்பாவி பெற்றோர்கள்!
                
          “எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பறதுலேயே குறியா இருக்காங்களேதவிர, வேறே சிந்தனையே இவங்களுக்கு வராதா?

           ஐ.டி.கம்பெனி வரன்களெல்லாம், தனக்கு வர்ற பொண்ணு சம அந்தஸ்த்தோட படிப்பு, வேலை, நாகரீகம்னு! இருக்கணும்! ஆடம்பரமா கல்யாணம் பண்ணனும்!னு
நெனைக்கிறதாலே, அவங்க என்ன மாதிரி லோயர் மிடில் க்ளாஸ் பொண்ணுங்க சம்பந்தத்தையே விரும்புவதில்லை!

           வங்கி, அரசாங்க வேலையில இருப்பவங்க கொஞ்சம் இறங்கி வந்தாலும், அவங்களுமே ‘சீர், நகை,பெரிய்ய மண்டபத்துல கல்யாணம்!’னுதான் கண்டிஷன்
போடறாங்க!

                என்னைப்போல வயசும் ஆகி, வசதியுமில்லாத பொண்ணுங்களைக்கேட்டு, ‘சொந்த தொழில் பண்றவங்களோ, வைதீக வாத்யார்களோ, கோவில் குருக்களோ!’தான் வருகிறார்கள்.

                            / 2 /

          சொந்த தொழில் பண்றவங்க தொடர்ந்து ‘சக்ஸஸ்’ ஆவாங்களா தெரியாது!

          வைதீக வாத்யாரை பண்ணிண்டா, வாழ்க்கை இழுபறிதான்!

           பொறந்த வீட்டுலதான் வசதியில்லாம வாழறோம்! போற இடத்திலயாச்சும் கொஞ்சம் வசதியோட சந்தோஷமா வாழலாம்னு! நான் நெனக்கிறதை பெத்தவங்களே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே?

            அதோட, போற இடத்துல நானே கஷ்டப்பட்டா! இவங்களுக்கு என்னால உதவி பண்ணமுடியுமா? என்னை பெத்து, வளர்த்து, கஷ்டப்பட்டு படிக்க வெச்ச பெத்தவங்கள தவிக்க விடலாமா? அவங்களுக்கு கடைசிவரை துணையிருப்பது என் கடமையும்தானே?

             விஜியின் மனசிற்குள், எண்ணங்கள் தாறுமாறாக போட்டியிட்டன. அதைப்போலவே, அவளது வண்டியும் இலக்கில்லாமல் விரைந்தது.

         பலத்த ஹாரன் சப்தம்! அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது! அதற்குள், எதிரே வந்த கார் மோதியதில், அவளது வண்டி பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதி அவளை கீழே தள்ளி விட்டது. கார் நிற்காமல் பறந்து விட்டது.

          “அச்சச்சோ! யாராச்சும் வந்து இந்த பொண்ணை தூக்குங்கோளேன்!” என்று பதறியபடி, அந்த வீட்டினுள்ளிருந்து, மங்களம்மாமி ஓடி வந்தாள்.

            அதற்குள் சற்றே சுதாரித்துக்கொண்ட விஜி, மெதுவாக எழுந்திருக்க முயன்றவள்! ‘ரொம்ப சாரி மாமி, உங்காத்து காம்பவுண்டு சுவரை இடிச்சுட்டேன்!” என்று மன்னிப்பு கேட்டாள்.

            “அது கெடக்கட்டும் விடும்மா! மெதுவா எழுந்திரு! என்று மாமி விஜியின் கைய்யைப்பற்றினாள்.

             “ஸ்ஸ்ஸ்..ஆ!” என விஜி வலிபொறுக்காமல் கத்தி விட்டாள்.

“அடடா! கைய்யெல்லாம் ரத்த விளாறா செராய்ச்சிருக்கே?” என்று பதறிய மாமி அவளை கைத்தாங்கலாக பிடித்து, வீட்டினுள் அழைத்துச்சென்று, சோபாவில் உட்கார்த்தி வைத்தாள்.

                    //    3.     .//

            “டீ..அனு! ‘ஃபர்ஸ்டு எய்டு பாக்ஸை கொண்டு வா!” என்று மாமி குரல் கொடுத்ததும், பக்கத்து அறையிலிருந்து, தாவணி அணிந்த பெண் வேகமாக வந்தாள்!

             விஜியைப்பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தபடி, ‘கொஞ்சம் வலிக்கும்தான் பொறுத்துக்குங்கோ! என்றபடி பஞ்சால் ரத்தத்தை மென்மையாக துடைத்து விட்டு, ஆயின்மெண்ட் போட்டு விட்டாள்.

               அதற்குள் சூடாக காப்பியை கொண்டு வந்து தந்த மாமி, ‘குடிம்மா! தெம்பாயிருக்கும்!” என்றாள்.

                “அக்கா! ஒரு புராஜக்ட் ரெடி பண்ணிண்டிருக்கேன். முடிச்சுட்டு வந்துடறேன். ரெஸ்ட் எடுத்துக்குங்கோ!” என்று சொல்லிவிட்டு ரூமிற்குள் போய்விட்டாள் அனு!

              “கேட் தொறக்கற சப்தம் கேக்கறது! என்னோட பிள்ளையாண்டான்தான் வந்திருக்கான். நான்போய், உன்னோட வண்டியை உள்பக்கமா நகத்தி வைக்கச்சொல்றேன்!” என வாசலுக்கு விரைந்தாள் மாமி.

             சுவையான காப்பியை ரசித்து குடித்தபடி, எதிர்புற சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களை பார்க்கும் ஆவலில் மெதுவாக எழுந்து, அருகே சென்றாள்.
      
                    மாமியுடன் உள்ளே வந்தவனை “எங்கோ பார்த்திருக்கோமே?” என்று தோன்றியது விஜிக்கு!

                  “அந்த போட்டோக்களிலிருப்பது, நானும், எங்காத்துக்காரரும், எங்களோட
பிள்ளையாண்டானும்தான். அடுத்த வருஷம் அனுவோட “கான்வகேஷன் “போட்டோவையும் மாட்டிடுவோம்!” என்று சொல்லி சிரித்தாள் மாமி!

         “அப்போ… வாசல்ல ‘பட்டாபிராம சாஸ்த்திரிகள்’ ன்னு போர்டு பாத்தேனே?

             “எங்காத்துக்காரர்தான்மா!” என்று மாமி சொன்னதும் விஜிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

                            /     4.    /

            “வைதீகத்துல அத்தனை வருமானம் வராதே? வேறே நல்ல வேலைக்கு முயற்சி பண்ணலையா?”

               “வருமானத்திலேயே குறியாயிருந்தா! நம்மளோட ‘சனாதன தர்மம்’ எப்படி தழைக்கும்? பரம்பரை பரம்பரையா எங்க குடும்பமே ‘வைதீகம்தான்!”. ஆனாலும், காலத்திற்கேத்த படிப்பும் அவசியம்னுதான், ‘ வேதம்’ படிக்கவெச்சதோட எங்காத்துக்காரரை, என்னோட மாமனார் பட்டதாரியாக்கினார்.

             ஏன், பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா, ‘படிச்சது போறும்னு’ பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்துற வழக்கமுள்ள அந்த காலத்திலேயே, என்னையும் எங்கப்பா பட்டதாரியாக்கினார்! என் மகனும் ‘வேத அத்யயனம்’ பண்ணியதோடு, எம்.ஏ. சமஸ்க்கிருதமும் படிச்சான். ஆனாலும், அவனும் விருப்பத்தோட ‘வைதீகம்’தான் பண்ணிண்டிருக்கான்”….

             மாமி சொல்வதைக்கேட்டதும், விஜிக்கு ஆச்சர்யம் தாங்காமல், “நாளுக்கு நாள் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆயிண்டிருக்கிற காலத்துல, நீங்க பழங்காலமாவே இருக்கறது ஆச்சர்யமாயிருக்கே?” என்றாள்.

          “யாரும்மா இப்போ பழங்காலமுறைப்படி வாழறோம்? குமுட்டி, விறகடுப்பு போய் கேஸ், இன்டக்க்ஷன் வந்தாச்சு! அம்மி, ஆட்டுரல் காணாமப்போய், மிக்ஸி, கிரைண்டர் வந்துடுத்து! ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் இல்லாத வீடேயில்லை! மாட்டு வண்டி, குதிரை வண்டி, சைக்கிள் போய், ஆட்டோ, காரெல்லாம் வந்தாச்சு! இப்பல்லாம் யாரும் பஸ், ரயிலைவிட, ஓலா, ஊபர்ன்னுதான் போறா!”

            இப்படி நமது வாழ்க்கைதரத்தை உயர்த்திக்கொண்டு வாழறது தவறில்லை. ஆனால், அதற்காக, நமது சனாதன தர்மப்படி வாழறதை மாத்திக்கவோ, மாத்த நினைக்கிறதோ தப்பும்மா!

              வேதத்தை ‘எழுதாக்கிளவி’ன்னு சொல்லுவா! அது எந்த புத்தகத்திலும் எழுதி வைத்து படிப்பதல்ல! குருவிடமிருந்து, அவர் வாய்மொழியாகத்தான் கற்கணும்! அதுவும் குரு இருக்குமிடத்திலேயே தங்கி ஏழு வருடங்கள் கற்கவேண்டும். அப்படி கற்ற வேதத்தை, நமது சனாதனதர்மப்படி, அன்றாட சந்தியாவந்தனம் முதல், பூஜை, புனஸ்காரங்கள், பிறப்பு முதல் இறப்பு வரையிலாக நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளிலும், தவறாது ஓதுவதே நமது கடமை! அந்த கடமையை நாங்கள் வழிவழியாக செய்து கொண்டு வருகிறோம்.

               எங்களைப்போன்ற சில குடும்பங்களிலும், இந்த காலத்திலும்கூட, தங்கள் குழந்தைகளை வேதம் பயில, குருகுலத்திற்கு அனுப்புகின்றனர். அந்த குழந்தைகளும், தங்களுடைய சிறுவயது சந்தோஷங்களை துறந்து, தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொண்டு, குருவிற்கு சேவை செய்து, வேதங்களை ஸ்ரத்தையாக கற்கிறார்கள்.
                       ////    5.     ////

              அந்த காலம்போலில்லாமல், இந்த காலத்து பிள்ளைகள் ‘வைதீகத்திலும் நன்றாகத்தான் சம்பாதிக்கிறார்கள். வசதியாகவும் வாழ்கிறார்கள். ஆனாலும்,….. என்றவளின் குரல் தழுதழுக்க, கண்களில் நீர் பொங்கியது….,

        “என்னாச்சு மாமி? என்று பதறினாள் விஜி.

        சட்டென்று சுதாரித்துக்கொண்ட மாமி, “வைதீக வாத்யார்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர்ந்தாலும், கிருஹஸ்தனாரதுதான் கேள்விக்குறியா போச்சு! பொண்ணைப்பெத்தவா எங்கள்ட்ட சம்பந்தம் பேசவே யோசிக்கிறா? போறபோக்க பாத்தா! “வைதீகம்” தழைக்குமா?ன்னே சந்தேகமாயிருக்கு!

             “போதும்மா…..இதையெல்லாம் சொல்லி, அவங்கள ஏன் சங்கடப்படுத்தறே?” என்றான் கார்த்திக்.

             “பளிச்சென்று விபூதி குங்குமம் நெற்றியில் துலங்க, நீலக்கலர் டீ ஷர்ட்டும், வெள்ளை வேட்டியும் அணிந்து, கம்பீரமாக நிற்கும் கார்த்தியைப்பார்த்ததும்! போனவாரம் அப்பா, “இந்த போட்டோவை பாரும்மா!” என்று கம்ப்யூட்டரில் காட்டியதை, தான் அலட்சியமாக பார்த்தோமே? அது இவனைத்தானா?” என்று தடுமாறினாள் விஜி.

         “மேடம்! உங்க வண்டியை சரிபண்ண மெக்கானிக்கை வரச்சொல்லியிருக்கேன். உங்க போன் நெம்பரையும், விலாசத்தையும் கொடுத்தால், வண்டி ரெடியானதும் அனுப்பி வைக்கிறேன்!” என்றான்.

               “அப்படியே செய்பா!” என்ற மாமி, “இப்ப வரை உன்னோட பேரைக்கூட கேட்கலேயே நான்?”என்று சிரித்துக்கொண்டாள் மாமி.

               “விஜின்னு கூப்பிடுங்கோ மாமி!” என்றாள்.

             “கார்த்தீ! விஜிய தனியா அனுப்பவேண்டாம். உன் வண்டியிலேயே அவளை அவங்க வீட்டுல விட்டுட்டு வா”..

             “சரிம்மா! அவங்களுக்கு என்னோட வர சம்மதமா?ன்னு கேளுங்க!” என்றவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி, ‘எனக்கு சம்மதம்தான்மா!” என்றாள் விஜி.

               “விஜி! குங்குமம் எடுத்துக்கோம்மா!” என்றபடி  மாமி, புடவை, ரவிக்கையுடன் தாம்பூலத்தை கொடுத்தாள்.

           அப்போது, ‘வாசல்ல யாரோட வண்டி இத்தனை டேமேஜாயிருக்கே?” என்றபடி
பட்டாபிராமய்யர் உள்ளே வந்தார்.

          “அந்த வண்டி இந்த பொண்ணு விஜியோடதுதான். அவ கிளம்பிண்டிருக்கா! நான் விவரம் சொல்றேன்”

          “மாமா! மாமியோட சேர்ந்து நில்லுங்கோ! நமஸ்காரம் பண்றேன்!” என்றாள் விஜி.

         “தீர்க்காயுசா இரும்மா! என்று மாமா வாழ்த்த, “உனக்கு நல்ல வரனா அமைஞ்சு சீக்கீரமே விவாஹம் ஆகட்டும்!னு” மாமி ஆசீர்வதித்தாள்.

         உள்ளேயிருந்து வந்த அனு, ‘அக்கா! அடிக்கடி ஆத்துக்கு வாங்கோ!” என்றாள்.

               “ஜாக்கிரதையா ஒக்காருங்கோ! திரும்ப விழுந்துடப்போறீங்க!” என்றபடி வண்டியை அலுங்காமல் ஓட்டும் கார்த்தியிடம், ‘என்னை அடையாளம் தெரியல்லியா?” என்று தயங்கியபடியே கேட்டாள் விஜி!

         “ஏன் தெரியாம? என்று சிரித்தவன், வீட்டுலதான் யாருக்கும் தெரியாது!”….

          “பிள்ளைக்கு எத்தனை ஜாதகம் வந்தாலும் பொண்ணு வீட்ல சம்மதிக்கலையே ன்னு அம்மாக்கு ரொம்ப கவலை! அதனாலதான், ஜாதகம் பார்த்தது, உங்களை போட்டோவில் பார்த்தது! எதையுமே சொல்லல.. அதோட, பொண்ணை கேட்டுச்சொல்றேன்னு!” சொன்ன உங்கப்பாவும் பேசாததினால, ‘உங்களுக்கு விருப்பமில்லைன்னு’ நெனச்சேன்”……

                         ///    6.    ////

             “இல்ல…இல்ல…நான் பதில் சொல்லாததற்கு காரணமே வேறே! நான் ஒரே பொண்ணு! என்னோட சம்பளத்திலேதான் குடும்பமே நடக்குது! நான் கல்யாணம் பண்ணிகிட்டா, அவர்களோட எதிர்காலம் எப்படி?” ன்ற கவலையிலதான், நான் பிடிகொடுக்கல…..

                “அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம்! கல்யாணத்துக்கப்புறம், உங்களோட பெற்றோரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு உண்டு. அதில் நான் பின் வாங்க மாட்டேன்!”…

              “எத்தனை உயர்ந்த உள்ளம்? அன்பும், பண்பும் , சனாதனதர்மத்தைப்பேணும் சங்கல்பமும் கொண்ட இவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகும் பாக்யத்தை, அசட்டுத்தனமாக, ‘ஆடம்பர வாழ்க்கைக்கு’ ஆசைபட்டு தவறவிட இருந்தேனே?”என்று தன்னையே கடிந்து கொண்டவளின் காதுகளில் ‘மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ?” என்ற பாடல் தேனாக பாய்ந்தது!…

                  தோளைப்பற்றிய. விஜியின் மென்கரங்கள் அவளது சம்மதத்தைச்சொல்ல! கார்த்திக்கின்  நெஞ்சமும் பூரித்தது!

முற்றும்.

றிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!