எழுத்தாளர்: தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்
” ஏங்க… வீட்ல எல்லா வேலையும் செய்து முடிக்கிறதுக்குள்ள உயிரு போகுதுங்க… தெனமும் சாயந்திரமாவே வந்து எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணினா என்னவாம்” மனைவியின் வழக்கமான பல்லவி. மனைவிக்குத் தான் மட்டும்தான் வேலை செய்வது போலவும் அலுவலகத்தில் ஏஸில கணவர் ஜாலியா சும்மா உக்காருவதாகவும் நினைப்பு.
சிரித்துக் கொண்டார் பரமசிவம். வங்கியில் துணை மேலாளர்னா வங்கி வேலை மட்டுமில்லாம காலையிலே வங்கியைத் திறப்பதிலிருந்து ராத்திரி எட்டு மணிக்கு கதவை மூடுறது வரை சில நேரம் ஷட்டர் ஏத்துறதிலிருந்து, இரவு ஷட்டர் இறக்குறது, கரெண்ட் போச்சுன்னா ஜேனரேட்டர் வாடகைக்கு எடுக்குறது… கூட்டம் அதிகமானா கேஷியரா எக்ஸ்ட்ரா வேலை செய்றது, ஏடிஎம் வேலை செய்யலைன்னா மக்கள்ட்டருந்து வர்ற வார்த்தைகளை டைஜெஸ்ட் பண்றது… சாக்கடை அடைச்சா ஆள் ஏற்பாடு, கூலி பேசறது… மழைத்தண்ணி உள்ளே வந்தா அதைச் சமாளிக்க ஏற்பாடுகள்… அது இதுன்னு ஆஃபிஸ் ப்ளஸ் வீட்டு வேலை பாக்கிற நிலைமை. புரிஞ்சுக்கிடாம மனைவி, “உங்களுக்கென்ன… பேங்க்ல நிம்மதியா தூங்கிட்டு வரலாம்… நா வீட்டிலே இடுப்பொடிய வேலை செய்றேன்” னு நக்கல். பொதுவா வங்கிகள்ல மேலாளரைக் குடும்பத் தலைவராகவும் துணை மேலாளரைத் தாய் போலவும் கருதுவர். துணை மேலாளர் வேலை அம்மாதிரி. வீடு போல சின்ன சின்ன நச்சு வேலைகளுக்கு அவரே பொறுப்பு. அதைத்தவிர செக் பாஸ் பண்றது, பணப்பொறுப்பு, லாக்கர் பொறுப்பு எல்லாமே அவரது.
அலுவலகத்தில் அவர் இருந்தால் எழுத்தர், காசாளர், மேலாளர், வாடிக்கையாளர்கள் எல்லோருக்குமே ஒரு நிம்மதி; ஏதும் பிரச்னைனா துணை மேலாளர் இருக்காருன்னு. கவுண்டர்ல கூட்டமா இருந்தா ஓடி வந்து பொது மக்களை வரிசையில் நிற்கவைத்து தானும் வேகமா பேஸ்புக் என்ட்ரி அல்லது மக்களின் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவது என்று ஐந்து நிமிடத்தில் கூட்டத்தைக் காணாமல் போகச் செய்வார். எழுத்தர் தன் கண்ணாலேயே பரமசிவத்திற்கு நன்றி கூறுவார். அதே போல காசாளருக்கு ஐநூறு ரூபாய் குறைந்தாலும் சாயந்தரமா உட்கார்ந்து எல்லா பேக்கெட்டையும் வவுச்சர்களையும் செக் பண்ணுவார். கண்டு பிடித்து கொடுக்கும் வரை டீ கூட குடிக்க மாட்டார். தேவைப்பட்ட வாடிக்கையாளர் வீடு கூட போய் விசாரித்து வருவார். காசாளரிடம் பணம் இல்லைன்னா கையிலிருந்து கொடுத்து அன்றைய கணக்கை முடிக்க உதவி பண்ணுவார். பணமதிப்பு இழப்பு சமயம் இரவு பத்து மணி வரை கூட நிறைய நாட்கள் வேலை பார்த்திருக்கிறார்.
பரமசிவத்தின் பணி ஓய்வு நாள் வழியனுப்பி விழா கூட்டத்தில்தான் அவரது மனைவிக்கு ஓரளவு கணவரைப் பற்றி புரிய வந்தது. பேசினவர்கள் எல்லோருமே பரமசிவத்தை வானளவு புகழ்ந்தார்கள். “தாய் போல எங்களை அரவணைத்து எங்களுக்கு மனசளவில் ஏதும் குறைகள் வராமல் பார்த்துக்கொண்டதோடு தனிப்பட்ட குடும்பக்கஷ்டங்களுக்கும் ஆறுதல் கூறி, தாய் தந்தைக்கும் மேலாக இருந்தார், இவரைப் போல இன்னொரு தாயுள்ளம் படைத்தவர் கிளைக்கு அமைவது கஷ்டம்” என்று வாழ்த்தினார்கள்.
பரமசிவத்துக்கு சந்தோஷமாகவும் இருந்தது மேலும் இவர்களைப் பிரிகிறோமே என்ற துக்கமும் தொண்டையை அடைத்தது. தனது குணநலன்களுக்குக் காரணம் தனது தாயும் தந்தையுமே காரணம் என தாழ்மையுடன் கூறி தன் பெற்றோர்களை நினைவு கூர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டார் அந்த தாயுமானவர்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: