எழுத்தாளர்: சுஶ்ரீ
எனக்கு நாலஞ்சு வயசுக்கு மேல நடந்தது கொஞ்சம் ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கு என் மேல அவ்வளவு பிரியம், எனக்கும்தான். எப்பவும் தூக்கி வச்சு கொஞ்சுவாங்க. விதவிதமா டிரஸ் போட்டு அழகு பாப்பாங்க. அக்கம் பக்கம் யாரையும் அண்ட விட மாட்டாங்க, கண்ணு போட்டுடுவாங்களாம். ஆச்சு ஸ்கூல்ல போட்டாச்சு, எனக்கு ஒரு தங்கையும் பொறந்தாச்சு. அம்மா இப்பல்லாம் கொஞ்சம் திட்டறா. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம், ஆனா தங்கை பொறக்கற வரை அப்படி கொஞ்சி சீராட்டின அம்மா இப்ப கொஞ்சம் கோவப்படறது, திட்டறது எனக்கு புதுசு.
மனைவி:
கல்யாணம் ஆனது, என்மேல என் மனைவிக்கு அவ்வளவு பிரியம், எனக்கும்தான். கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஹனிமூன் போனோம், நெருக்கம் அதிகமாச்சு. என் டிரஸ்லாம் அவதான் செலக்ட் பண்ணுவா. வெளில போகும் போது கண்கொத்தி பாம்பா இருப்பா ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் கொஞ்சம் சிரிச்சுப் பேசினா கூட பொறுக்காது.
யாராவது கொஞ்சம் முறுக்கா அழகா இருந்தா போறுமே வந்து ஈஷிக்கறதுகள், ஊருக்கு போய் அம்மா கையால திருஷ்டி கழிக்கணும்பா. மூணு வருஷம் வரை அப்படி ஒரு பொசசிவ் என் மனைவி, முதல் குழந்தை பிறந்தான். இப்ப கவனம் பூரா அவன் மேல. என்ன உங்கம்மா இப்படி வளத்து வச்சிருக்கா குழந்தை அழுதா இதமா தூக்கி அப்படியே நடந்து முதுகுல தட்டிக் கொடுத்து தூங்க வைக்கத் தெரியதா, இப்படி ஆரம்பிச்சு சிறுசுசிறுசா எல்லாத்துக்கும் ஒரு சூடு. இந்த மாறுதல் எனக்கு புதுசு.
அம்மா:
”டேய், எனக்கு முடியலைடா இந்தத் துணியெல்லாம், மொட்டை மாடில கொண்டு போய் காய வை.”
“போம்மா, எனக்கு வேலை இருக்கு”
“ தெரியும் உன் வேலை என்னனு எப்பப் பாரு அந்த ஜன்னலை
”கட்டிண்டு அழு, புதுசா அந்த குடும்பம் எதுத்தாத்துக்கு குடி வந்ததுல இருந்து ஜன்னலை கட்டிண்டு அழறே”
“ போம்மா எதையாவது கற்பனை பண்ணிண்டு, ஃபைனல் எக்சாமுக்கு பிரிபேர் பண்ணிண்டிருக்கேன்”
“ அந்த ஃபிசிக்ஸ் புக்கை வச்சிண்டு கண்ணு ஜன்னலுக்கு வெளில எங்கே போறதுனு தெரியாதுனு நினைச்சயா, நானும் உன் வயசை தாண்டிதான் வந்திருக்கேன்.”
“ அம்மா நிஜமா நீ லவ் பண்ணி இருக்கயா?”
கடகடவென சிரிச்ச அம்மா,” உன் வாயாலயே ஒத்துண்டயா, அந்த எதுத்தாத்து நீலாப் பொண்ணு வேற பிரிவு உன் அப்பாக்கு தெரிஞ்சா கொன்னுடுவார், ரொம்ப வளறவிடாம ஆரம்பத்துலயே கட் பண்ணிக்கோ, உன் போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சுட்டு நல்ல வேலைல சேரற வழியைப் பாரு முதல்ல. என் அண்ணா பொண்ணு தங்க விக்ரகமா காத்துண்டிருக்கா உனக்காக.”இதெல்லாம் அந்த நீலா காதுல விழற மாதிரி.
மனைவி:
இப்ப அந்த தங்க விக்ரகம்தான் என் மனைவி. அந்த நீலாவை விட அழகுதான் இல்லைன்னு சொல்லலை ஆனா எதிர் வீட்டு ஜன்னல் நிலாவின் அந்த புன் முறுவல் மனசுல நிக்கறதே.
“ ஏன்னா சமையலறைல பிசியா இருக்கேன் தெரியலையா குழந்தை எழுந்துண்டு அழறான் தூக்குங்கோ”
“நான் சும்மாவா இருக்கேன் நானும்தான் பிசி”
“வயசுக்கேத்த நடத்தை இருக்கணும், ஜன்னல் கிட்டயே என்ன வேலை எப்பவும். அந்த கடங்காரிக்கும் புத்தி இல்லை, என்னடா மனைவி குழந்தையோட இருக்கற ஒருத்தனை பாத்து வழியறோமேனு”
“என்னடி சொல்றே நான் என் லேப்டாப் வச்சிண்டு உக்காந்திருக்கேன், தேவையில்லாம யார் மேலயும் பழி போடாதே”
“ அந்த அழகி மீனாவை சொன்னா கோபம் வருதாக்கும், புருஷனை விட்டுட்டு அம்மாவண்டை ஓடி வந்திருக்கா, வந்தா அடங்கி இருக்க வேணாமோ, எப்ப பாரு அங்க்கிள், அங்க்கிள்னு உங்க கிட்ட என்ன உரசடம் வேண்டி இருக்கு. நீங்களும்தான் அழகான பொண்டாட்டியை ஆத்துல வச்சிண்டு இன்னொருத்தி கிட்ட பல்லை காட்டறோமேனு தெரிய வேண்டாம்” இதெல்லாம் அந்த பொண்ணு காதுல விழற மாதிரி.
அம்மா:
நான் படுக்கைல புறள்றேன் . என்னடா ஆச்சு பக்கத்துல வந்தா,”எப்பவும் ஆறரைக்கு எழுந்துப்பயே இன்னிக்கு என்ன ஆச்சு”
“தெரியலைம்மா நேத்து ஃபிரண்டஸ் கூட சேந்து ஃபுட் மால்ல கொத்து பரோட்டா சாப்டேன், வயிறு சங்கடம் பண்றது ஒரு மாதிரி இழுத்துப் பிடிச்சு வலிக்கறது”
என் முகத்துல வேதனையை பாத்த அம்மா உள்ளே போய் ஒரு பாட்டிலை கொண்டு வந்தா. பக்கத்துல உக்காந்து பனியனை சற்றே விலக்கி ஒரு கை விளக்கெண்ணை பரபரனு வயித்துல தேச்சு விட்டா, ஒரு ஸ்பூன் வெந்தயம் மோர் ஒரு கிளாஸ் கொடுத்தா.
அம்மா கை பட்டதுலயே ஒரு ரிலீஃப் தெரிஞ்சது.
“கண்டதை சாப்பிடாதேன்னா எங்க கேக்கறே”
மனைவி:
அன்னிக்கு நான் வரப்பவே ரொம்ப லேட். என் தங்க விக்ரகம் காத்திருந்து கதவை திறந்தது.
”என்ன ஆச்சு ஏன் இவ்வளவு நேரம்”
“சுந்தரத்தோட பர்த்டே பார்ட்டி கொஞ்சம் லேட் ஆயிடுத்து.”
“ கொஞ்சம் இல்லை மணி இப்ப பன்னண்டேகால்.”
“சரி எனக்கு படுத்துக்கணும் வயறு என்னமோ பண்றது” போய் படுக்கைல விழுந்தேன். அடி வயிற்றில் முணுக் முணுக்னு வலி.
பெட்ரூம் வந்த மனைவி“ என்ன உடம்பு வலியா? பீர், விஸ்கினு எதையாவது நிறைய குடிச்சு வச்சேளா”
“ ஒரு பெக்தான் குடிச்சேன், அப்பறம் ஆந்திரா ஸ்பெஷல் பிரியாணி டேஸ்டா இருக்குனு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேனு நினைக்கறேன். வயிறு விண் விண்ணுனு தெறிக்கறது”
என் முகத்துல வேதனையை பாத்த மனைவி உள்ளே போய் ஒரு பாட்டிலை கொண்டு வந்தா. திரும்ப வந்து பக்கத்தில் உக்காந்தா. ஒரு கை விளக்கெண்ணை கைல எடுத்து அடி வயித்துல பரபரனு தேச்சா. ” சொன்னா கேட்டாதானே, வயசாச்சு கண்டதை சாப்பிடக் கூடாதுனு உங்களுக்கே தெரியணும், பிரியாணியே
பாத்ததில்லையா என்ன” ஒரு டம்ளர்ல ‘ஈனோ’ போட்டு நிறைய தண்ணி ஊத்தி கொடுத்தா. அவ கை வயித்துல பட்டதுமே அம்மா ஞாபகம் வந்தது.
மனைவியோ, தாயாரோ, சொந்த பெண்ணோ அந்த தாய்க்குணம்
எல்லார்க்கும் பொதுவோ!
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: