சாப்பிட்ட பிறகு கழிவறைக்கு சென்று வந்த பின் என்று அநேகமான நேரங்களில் கைகளை கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளும் நாம், அனுதினமும் உபயோகப்படுத்தும் கணினியையும் மடிக்கணினியையும் சரிவர பராமரிக்கின்றோமா என்ற கேள்விக்கு இன்றளவிலும் பதில் என்னவோ இழுப்பறியே.
கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கின்ற மின்சார சாதனங்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன.
அதிலும் கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக்டீரியா இருக்கிறதென்றால் ஆமாவா, அப்படியா என்று கேட்டிடும் கூட்டமே அதிகம்.
லண்டனிலிருக்கும் ஒரு அலுவலகத்தில் நடத்திய கீ போர்ட் பரிசோதனையில், 150 மடங்குக்கும் அதிகமான கிருமிகள் கொண்ட கீ போர்டை ஒன்றை சோதனையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கூடவே, அங்கிருந்த பயன்பாட்டுக்குத் தகுதி அற்ற பல கீ போர்டுகள் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.
அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவறை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலிபார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப்பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சிக்குள்ளாயிருக்கின்றனர்.

இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் வயிற்று வலி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள்.
தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப்பும் அமைகிறது.
பலர் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதில்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் கைக்குட்டையின்றி இரும்புவதையும் தும்புவதையும் சகஜமாக்கி கொள்கின்றனர்.
இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் அதிகமாகும். சளி, காய்ச்சல் மற்றும் இரப்பை குடல் அழற்சி கொண்டவர்கள் பயன்படுத்திய கீ போர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் நோய் மிக எளிதாகத் சாதனங்களின் வழி அடுத்தவர்களுக்கும் பரவிடும்.
அடிக்கடி கீ போர்டு, மவுஸ் மற்றும் நாம் பயன்படுத்தும் மடிக்கணினி அல்லது கணினி சார்ந்த பொருட்களைச் சுத்தம் செய்திட வேண்டும்.
கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டி அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகளையோ, சிறிய குப்பைகளையோ வெளியே அகற்றிடலாம்.

மெல்லிய துணியால் கீ போர்ட்டை துடைத்தெடுக்கலாம். அதற்காகவே பிரத்தேயகமான சிறிய அளவிலான துண்டுகள் கணினி சார்ந்த கடைகளிலும் இப்போது விற்பனைக்கு உள்ளன.
ஆகவே, இனி உங்களின் கணினியை அடிக்கடி சுத்தப்படுத்தி கிருமியிடமிருந்து தப்பித்திருங்கள்.