எழுத்தாளர்: கதைநிலா
மாதவி வீடு…..
“மாதவி, எதுக்கும் ஒன்னுக்கு நாலு தடவை யோசிடி இது விளையாட்டில்ல வாழ்க்கை “
“அம்மா, இதுக்கு மேல யோசிக்க எதுவுமில்ல “
“பொம்பளைனா கொஞ்சம் விட்டுக் குடுத்துதான் போகனும். பொறுத்து போறதுல தப்பில்ல டி”
“பொறுமைக்கு அளவுண்டுமா இத்தனைநாள்ல அவன் செஞ்ச தப்ப உணர்ந்தானா? இதுக்கு மேலயும் அவன் உணரவும் மாட்டான்.எனக்கு அவனப்பத்தி தெரியும். நான் முடிவு பண்ணிட்ட நான் டைவர்ஸ் வாங்கத்தான் போறேன்.”
“நம்ம சொந்தக்காரங்க ஊர்ல உள்ளவங்கலாம் தப்பா பேசுவாங்கடி. அவங்க வாய்லலாம் நிக்க போறியா…?”
“அம்மா, மத்தவங்க பேசுவாங்கன்றதுக்காகலாம் என் வாழ்க்கைய என்னால அழிச்சிக்க முடியாது. என் ஃபேவரேட் ஹீரோயினை பேட்டி எடுக்க போறன்.பெரிய நடிகை அவ்வளவு பணம்,பேர், புகழ் இருக்கு.லவ் மேரேஜ்தான்.அவங்களே டைவர்ஸ் அப்ளே பண்ணிருக்காங்க. ஊர் முழுக்க பிரபலமானவங்க. அவங்க என்ன ஊர் பேசுற பேச்சுக்கு பயப்படுறாங்களா என்ன…? நம்ம வாழ்க்கை நம்ம இஷ்டபடி வாழனும்னு வாழ்றாங்க. நீயும் கொஞ்சம் பிராட் மைண்டடா இரு பழைய பஞ்சாங்கமாறி பேசாதே” என்றவள் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
மாதவி அழகும் அறிவும் திறமையும் கொண்ட இருபத்தைந்து வயது நங்கை. பிஏ ஜெர்னலிசம் படித்து முடித்த கையோடு பிரபல டீவி சேனல் ஒன்றில் செய்தி சேகரிப்பாளராக சேர்ந்து அவளின் திறமையை நாளுக்குநாள் மெருகேற்றி இன்று சீனியர் போஸ்டிங்கில் இருக்கிறாள்.
ஒரு முறை செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் காதலையும் சேகரித்தாள். அவனின் இரசனையும் அவளின் இரசனையும் காஃபீ ஷாப், தியேட்டர்,மால், கடற்கரை என பல இடங்களில் பறிமாற்றப்பட்டு இறுதியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.
மாறன் வீடு…
” மாறா, எதுக்கும் இன்னோரு வாட்டி “என அம்மா ஆரம்பிக்கும் போதே சாப்பிடும் தட்டு செவிட்டி அடிக்கப்பட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்தது.
“இன்னோரு வாட்டி அவளை பத்தி பேசுன நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் “
“இந்த கோவந்தான்டா உன்னை இந்த நிலைமைல நிறுத்திருக்கு “
” அவகூடலாம் மனுஷன் வாழுவானா உடம்பு பூராம் திமிரு “
“வாழ்க்கைனா அப்டி இப்டித்தான் இருக்கும் நீ விட்டு குடுத்து போனாதான் என்ன..? “
“அவகிட்ட இறங்கிப் போகனும்னு எனக்கு அவசியமில்லை” என்று வேகமாய் பைக்கை உதைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அலுவலகம் சென்றவனிடம் நண்பன் திவாகார் ஓடிவந்தான்.
“மாறா, இன்னைக்கு ஷெட்யூல் நீ ஹீரோவை பேட்டி எடுக்கனும்”
“எந்த ஹீரோ”
“அதான்டா டைவர்ஸ் ஹீரோ அவனை பேட்டி எடுக்கிறதுதான். நீ போய் எடுத்துட்டு வந்துருடா. என்று அவன் கிளம்பிவிட்டான்.
டாப்ஸ்டார் நாகராஜ் வீடு…
” ஸார் ஸ்டார்ட் பண்ணலாமா….?”
“யா ஷூயூர் “
“உங்களோட படங்கள் தொடர்ந்து பிளாஃப் ஆகிட்டே வருதே அதுக்கு என்ன காரணம் ஸார்…?”
“எனக்கு கதை தேர்ந்தெடுக்க தெரியலை அதான் காரணம்”
“ஹீரோக்கு கதைகளை மட்டுமில்ல மனைவியகூட சரியா தேர்ந்தெடுக்க தெரியலைனு சொல்றாங்களே உண்மையா ஸார்..?”
“ஏன் சுத்தி வளைச்சி கேக்குறீங்க? நேரடியாவே சொல்றேன். ஆமா அது உண்மைதான் அந்த தப்புலருந்து விடுபடத்தான் டைவர்ஸ்க்கு அப்ளே பண்ணிருக்கன்”
“உங்களுடையது காதல் திருமணமாச்சே இப்படி ஒரு முடிவுக்கு வரதுக்கு என்ன காரணம்…?”
“எல்லாம் அவளோட திமிரு. கொஞ்ச நஞ்சமில்ல உடம்பூரா திமிரு. சம்பாதிக்கிறோம்ற திமிரு. ஏதோ நாலு படம் நல்லா ஓடினதும் புருஷன்ற மரியாதைகூட குடுக்குறதில்லை எல்லாம் அவ இஷ்டத்துக்குத்தான் பண்ணுவா என்றான் ஆவேசமாய்.
கனவுக் கன்னி சம்யுக்தா வீடு…
“ஆல் ஓக்கே மேம் ஷேல் வீ ஸ்டார்ட்..?”
“யா ஷூயூர்”
“தென்னிந்தியாவுல மட்டுமே பேசபட்ட நடிகை தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து இந்திய அளவுல பேசபடுற நடிகையா மாறி இருக்கீங்க இதுக்கு எங்க சேனல் சார்பா நான் வாழ்த்துகள் தெரிவிச்சிக்கிறன் மேடம்”
“ரொம்ப நன்றி”
“மேடம் உங்க தொடர் வெற்றிக்கு என்ன காரணம்..?”
“என் தொழில்மேல எனக்கிருக்க காதல்”
“தொழில்ல வெற்றியடைஞ்ச நீங்க திருமண வாழ்க்கைல வெற்றி அடையலைனு பேசிக்கிறாங்களே அது உண்மையா..?”
“ உண்மைதான்”
“என்ன காரணம்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா…?”
“ஆம்பளைன்ற திமிருதான் காரணம் வேறென்ன. கொஞ்சமாச்சும் மனைவி சொல்றதை கேட்கனும் இல்லைனா இப்டித்தான் ஒன்னுத்துக்கும் உதவாம இருக்கனும்.”
நாகராஜ்
“என்னோட படங்கள் சரியா ஓடலை நான் மன வருத்தத்தோட அவகிட்ட பேசுனேன். அவ அதுக்கு ஆம்பளையா சம்பாதிக்க கூட துப்பில்லனு திட்டுடு ஷூட்டிங் கிளம்பி போனா. எனக்கு எப்டி இருந்தது தெரியுமா…?ஒரு மனுஷனுக்கு தோல்வி வரப்ப நான் இருக்கனு நிக்கிறதுதானேங்க காதல்” என்ற நாகராஜின் பதில் மாறனை தாக்குவதைப்போலிருந்தது.
அன்றொருநாள்…..
“வேலையவிட்டேன் மாது. அந்த சீனியர் ரொம்ப பேசுனான். போடா நீயும் வேணா உன் வேலையும் வேணானு வந்துட்டன்” என்றவன் தயங்கித் தயங்கி சொன்னான்.
எந்த காதலிதான் ஏற்றுக்கொள்வாள் உப்பு சப்பில்லாமல் திட்டியதெற்கெல்லாம் வேலையை விட்டு வந்தேன் என்றால். ஆனால் அவன் மாதவியோ பக்குவப்பட்டப்பெண்.
“அந்தாளை சும்மாவா விட்டு வந்த உன்னை பேசுன வாயை அடிச்சி ஒடச்சிட்டு வரவேண்டியதானே”
“இவ்ளோ ஈசியா சொல்ற உனக்கு என் மேல கோவமில்லையா மாது..?”
“உன்மேல கோவம் வருமா டா. இந்த வேலையில்லைனா ஆயிரம் வேலை உன் திறமைக்கு கிடைக்கும். மனசு வெறுப்போட நீ எந்த வேலையும் செய்ய வேணா உன் மனசுக்கு பிடிச்சதை செய். இன்னைக்கில்லைனாலும் என்னைக்காச்சும் ஒருநாள் நீ ஜெயிப்ப மாறா” என்றிட கண்கலங்கி அவளை கட்டிக் கொண்ட நினைவலைகள் மாறனின் மனதில் மென்சாரலாய் வீசியது.
நாகராஜ்…
“அவகூடாலம் மனுஷன் வாழவே முடியாது என்ன பெருசா ஜெயிச்சிட்டா நானும் என் குடும்ப பிண்ணனியும் இல்லைனா அவளால சினிமால இவ்ளோ தூரத்துக்கு வந்திருக்கவே முடியாது”
சம்யுக்தா
“சுத்த பேத்தல். என் வெற்றிக்கு அவனோட குடும்ப பின்னணிதான் காரணம்னா அவன் ஏன் சினிமா துறையில வெற்றி பெறலை…? இங்க முக்கியமானது திறமைதான் அது என்கிட்ட இருக்கு. நான் முன்னேறுனேன். மனைவியோட முன்னேற்றத்தப் பார்த்து பொறுத்துக்க முடியாத ஈகோயிஸ்ட் அவன்” என்ற சம்யுக்தாவின் பதில் மாதவியை சுழற்றிப் போட்டது.
அன்றோருநாள்…
“மாறா ஒரு ஹேப்பி நியூஸ்”
“என்ன மாது..?”
“அப்றம் சொல்றேன். ஆமா நீ ஏன் டல்லா இருக்க…?”
“பர்பாமென்ஸ் சரியில்லைனு சொல்லி இன்கிரிமெண்டே போடலை டி. சரி அதை விடு ஏதோ ஹேப்பி நியூஸ்னு சொன்னியே என்னது..?”
“இல்லை அது வந்து “
“சொல்லு மா “
“எனக்கு பெஸ்ட் பர்பாமர் அவார்ட் குடுத்து. சீனியர் போஸ்டிங் கொடுத்துட்டாங்க சேலரில ஃபைவ் தவுசண்ட் இன்கிரீமெண்ட் குடுத்துருக்காங்க”
“வாவ் எவ்ளோ சந்தோஷமான விஷியத்தை ஏன்டி இவ்ளோ சோகமா சொல்ற..?”
“இல்ல நீ இப்டி சொன்னதும் நான் எப்டி இதை சொல்றது உனக்கு ஹர்ட் ஆகும்ல”
“ச்சீ பைத்தியம் நீ யாருடி என் மனைவி என்னோட சரிபாதி. உன்னோட வெற்றியும் உன்னோட முன்னேற்றமும் எனக்கு பெருமைதான். இதுல ஈகோ எங்கருந்து வரும். என் பொண்டாட்டி பெஸ்ட் பர்பாமர்னு நினைக்கும் போதே பெருமையா இருக்கு” என்று அவள் மடியில் தலைவைத்து படுத்த ஈகோவில்லா மாறனை அதிகம் காதலித்தாள் மாதவி.
நாகராஜ்…
“சினிமா துறை பத்தி எனக்கும் தெரியும்ங்க. அதுக்காக இவ ஆடுன ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. என் முன்னாடியே பல பேர் இவகிட்ட வழிவாங்க. அவங்களை தடுக்க முடியாது. இவ விலகி இருக்கலாம்ல வெக்கமே இல்லாம இவளும் சிரிச்சிட்டு நிப்பா” என்றிட மாறனுக்கோ அவனின் மாதவியின் செய்கை நினைவுக்கு வந்தது.
“இந்த ஆம்பளைங்கலாம் ஏன் மாறா இப்டி இருக்காங்க..?”
“ஏன் என்ன ஆச்சு..?”
“என் கலிக் சந்தோஷ் இருக்கான்ல இன்னைக்கி காஃப்பிஷாப் கூட்டிடு போனான். நான் கமிடட்னு தெரிஞ்சும் பிரப்போஸ் பண்ணான் எனக்கு செம்ம ஆத்திரம் வந்துச்சி சுடசுட காஃப்பிய எடுத்து மூஞ்ஜில ஊத்திட்டு வந்துட்டன் பொறுக்கி. நமக்குள்ள ஒன் வீக்கா சண்டைல அதை தர்ஷூகிட்ட சொல்லிட்டு இருந்தேன். அதைக் கேட்டுடு கேப்ல கெடா வெட்ட வரான்டா. இனிமே சண்டை போட்டாகூட யார்கிட்டயும் சொல்லக்கூடாது” என்று சொன்ன மாதவி மாறனின் மடியில் அமர்ந்து அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
பிரேக் அப் பேட்ச் அப் ஆனதற்கு அவள் கொடுத்த முத்தம் இன்றும் தித்தது.
நாகராஜ்…
“எல்லா இடத்துலயும் என்னைவிட்டுக் குடுத்துருக்கா. பிரெண்ட்ஸ் பேமலினு விட்டு குடுத்தா கூட பரவால்ல. ஓப்பனா பல பேட்டிகள்ல சொல்லிருக்கா என் படம் சரியா ஓடாததுக்கு காரணம் எனக்கு கதைய சரியா தேர்வு செய்ய தெரியாததுனாலதான்னு சொல்லி என்னை அவமானபடுத்திருக்கா. என்னோட மைனஸை வெளியே சொல்றதுல அவளுக்கு அப்டி ஒரு ஈகோ சேடிஸ் பேக்ஷன்.” என ஹீரோ பேச மாறனின் நினைவு மாதவியைத்தான் தழுவியது.
“டேய் நாலு மாசமாச்சும் நீ வேலைக்கு போய். உன்னை நம்பி ஒருத்தி இருக்கான்ற எண்ணம் இருக்காடா உனக்கு…? ஏன்டா இப்டி இருக்க..?சம்பாத்தியம் புருஷ லட்சனம்டா என்று மாறனின் அம்மா திட்டித் தீர்த்க ஆதரவாய் அவன் தேவதை.
“அத்தை அவரு வேலைக்கு போகாமதான் இருக்காரு. சம்பாதிக்காம இல்லை. நாலு ஷார்ட் பிலிம்ஸ்க்கு எடிடிங் பண்ணி குடுத்தாரு. மாச மாசம் வீட்டு செலவுக்கு கரெட்டா காசு குடுத்துடுறாரு அத்தை அவரை திட்டாதீங்க. “
“ஆமாடியம்மா உன் புருஷனை ஒத்த வார்த்த சொல்லிடக்கூடாது. பெத்தவ என்கிட்டயே வரிஞ்சி கட்டிகிட்டு வருவ. என்னமோ பண்ணுங்க போங்க” என்று அம்மா வெளியே போனதும் அவளின் இடையைப் பிடித்து இதழைக் கவ்வியது ஏனென்று அன்று புரியவில்லை இன்று புரிந்தது.
பெற்றவளிடமே விட்டுக் கொடுக்காது பேசியவள் மற்றவரிடாமா என்னை மட்டம் தட்டிப் பேசுவாள்.
சம்யுக்தா…
“தொடர்ந்து எத்தனை படம் நடிச்சேன் டே அன்ட் நைட்டா ஷூட் முடிச்சிட்டு வீட்டுக்கு வருவேன். என்னை பத்தி கொஞ்சம் கூட அக்கறை படாம அவன் பிரெண்ட்ஸோட பார்ட்டி பண்ணிட்டு இருப்பான். அப்போலாம் மனசு எவ்ளோ வலிச்சிது தெரியுமா நீங்க ஒரு பொண்ணா இருக்கீங்க உங்களால புரிஞ்சிக்க முடியும்” என்று சம்யுக்தா இரு துளி கண்ணீரை சிந்தினாள் மாதவியோ தாரை தாரையாய் கண்ணீர் வடித்திருந்தாள்.
மாதவி அவசர அவசரமாக வந்து “ஸாரி, ஸாரி இன்னைக்கும் லேட் ஆய்டுச்சி பத்து நிமிஷம் டின்னர் பண்ணிடுறன்” என்று வந்தவள் அரக்க பறக்க குளித்துவிட்டு வெளியே வர அவளுக்கு பிடித்த சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் அவன் கைவண்ணத்தில் மணத்தது.
“ஸாரி மாறா, பசில நீயே செஞ்சிட்டியா…? ரொம்ப வேலைடா ஸாரி”
பச்…என்றவன் அவளுக்கு சப்பாத்தி ஒரு விள்ளலை எடுத்து ஊட்டிவிட்டான்.
“முதல்ல நீ தப்பு செஞ்சமாறி ஸாரி சொல்றதை நிறுத்துடி.வேலைனா அப்டி இப்டிதான் இருக்கும். நான் எத்தனைநாள் நைட் வீட்டுகே வராம ஆஃப்பீஸ்ல தங்கிருக்கன்.அதுக்கெல்லாம் ஸாரி கேட்டுடா இருந்தேன்”.
“பசிலதான் செஞ்சேன் என் பசிக்காக இல்லை என் பொண்டாட்டியோட பசியோட வருவான்றதுக்காக செஞ்சேன்” என்ற மாறனின் அன்பில் கரைந்த நாட்கள் அவளை நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
“ஹேய் மாது காலை இதுல வைடி”
“என்னது இது…?”
“பெடிகியூர் வாட்டர். யூடூப்ல பாத்தேன் இனிமே நான்தான் உனக்கு பியூட்டிஷியன்” என்று அவளின் கால்களை சுத்தம் செய்து அழகு படுத்திய மாறன்.
“வேலைக்கே போகாத எனக்கு எதுக்குடி மாச மாசம் நாலு சட்டை வாங்குற”
“நாலு எடத்துக்கு போற வர ஸ்மார்ட்டா இருக்கனும்லடா. ஆள் பாதி ஆடை பாதி. என் புருஷனை எல்லாரும் சைட் அடிக்கனும்” என்று கொஞ்சிய மாதவி.
” மாது இந்த மன்த் உங்க அப்பா மெடிக்கல் எக்ஸ்பென்ஸ் பில்லை நான் பே பண்ணிட்டன்டி. நீ ஹவுஸ் ரெண்ட்டை மட்டும் பே பண்ணிடு என்று வேலை கிடைத்ததும் சொன்ன மாறன்.
“இந்த புடவை எடுத்துக்கடி உன் கசின் மேரேஜ்க்கு”
“பச்ச்ச் ஐயாயரூபாக்கு எதுக்கு புடவை. சிம்பிளா ஆயிரரூபாக்கு எடுத்தா போதும். தாம் தூம்னு செலவு பண்ண தேவையில்ல” என்று சிக்கனத்தைக் கற்றுக் கொடுத்த மாதவி.
மாதவி காய்ச்சல் கண்டதில் அழுது வடிந்து கண்கள் சிவந்துப் போய் நாலுநாள் தூங்காமல் பணிவிடை செய்தவன் ஐந்தாம் நாள் அவன் காய்ச்சலில் விழுந்துவிட்டான்.
மருத்துவரோ காய்ச்சலெல்லாம் ஒன்றுமில்லை பயந்தே உடல் சூட்டை அதிகரிகச் செய்திருக்கிறார் என்று திட்டி அனுப்பிட விழுந்து விழுந்து சிரித்த கதையெல்லாம் இன்று நினைவுக்கு வந்து வாட்டியது இருவரையும்.
மாதவி புறப்பட்டால் தனது இரு சக்கர வாகனத்தில் கண்கள் கண்ணீரை வழிந்தவண்ணமே இருந்தது.
அப்படி என்ன செய்துவிட்டான் உருப்படியாய் ஒரு வேலையில் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்ததில்லை. தெரிந்துதானே காதலித்தேன். திருமணம் செய்து கொண்டேன்.
தன்மானம் மிக்கவன் யாராவது ஒரு வார்த்தை தவறாய் பேசிவிட்டாலும் போதும் கோவம் பொத்துக் கொண்டு வந்துவிடும். இவனும் வார்த்தையை விட்டுவிடுவான். மேலதிகாரிகளிடமும் வார்த்தையை சரமாறியாக பொழிந்துவிடுவான். இவனை வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். திறமை அதற்கு எள்ளளவும் குறையில்லை. கோபம் மட்டுந்தானே கெட்ட குணம் நான் கொஞ்சம் அனுசரித்து போயிருக்க கூடாது. எதற்காக அவனுடன் எதிர்த்தெரித்து வாயாட வேண்டும். என்ன செய்துவிட்டான் கோவத்தில் ஒரு அடி அடித்துவிட்டான். என் கணவன்தானே அவனுக்கில்லாத உரிமையா இதை ஏன் நான் பெரிது படுத்தினேன் விவாகரத்து வரை வந்துவிட்டேனே.
என் மேல் எத்தனை பிரியம். நான் சொன்னால் என்ன ஏதென்று கேள்வி கேட்காமல் செய்வானே. அன்று அவனே விரக்தியில்தான் அலுவலகம் விட்டு வந்திருந்தான். நானும் பேசி அவனின் மனதை கஷ்டபடுத்தி நானும் கஷ்டபட்டு பிரிந்து ச்சை இந்த மூன்று மாதம் மூன்று யுகமாக கழிந்ததே. அவனின் அணைபில்லா தேகம், அவனின் வாசனை படரா மேனி, அவனின் அன்பில் நெகிழா நெஞ்சம் மூன்று மாதமே தாங்க முடியவில்லை அவனின்றி எப்படி இருப்பேன்.
மற்ற ஆண்களைப்போல் மனைவியிடம் ஈகோ பார்ப்பவனில்லை. என் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுப்பவன். அவனின் தன்மானக் கொள்கைக்கு நானும் மதிப்புக் கொடுத்திருக்க வேண்டும்.
என் மீதுதான் தவறு நானே முதலில் இறங்கிச் செல்கிறேன் என்று கன்னங்களைத் துடைத்துக் கொண்டாள்.
மாறன் அவனின் இரும்புப் புரவியில் புயலாய் பறந்துக் கொண்டிருந்தான்.
எதிர்காற்றால் கண்ணில் நீர் வழிகிறதா..? அவளால் வழிகிறதா..? எனக் கேட்டால் ஈகோ இல்லாமல் ஒத்துக் கொள்வான் அவளுக்காக அவளின் பிரிவை எண்ணியே கண்ணீர் வடிக்கிறேன் என.
எத்தனை அன்பானவள். என்னுடைய ஆசைக்கும் விருப்பத்திற்கும் மதிப்புக் கொடுப்பவள். என்ன கேட்டுவிட்டால் உன் கோவத்தை தள்ளி வைத்து வேலையைத் தொடர்ந்தால் ராஜ கிரீடமா இறங்கிவிடும் என்று ஒற்றை வார்த்தைதானே கேட்டால் இதற்கு போய் அவளை அடித்திருக்க வேண்டுமா…?
என் மனைவிதானே என்னைக் கேள்வி கேட்பதில் என்ன குறைந்துவிட்டேன்.
சரி அடித்துவிட்டேன் நானே இறங்கிச் சென்று மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டுமே ஏன் கேட்வில்லை…?
எது தடுத்தது. எங்கோ யாரோ பேசியதை நம்பினேன். அவள் நிலையான வருமானம் கொடுக்கிறாள் நான் கொடுப்பதில்லை. சம்பாதிக்கும் திமிரில் ஆடுகிறாள் என எப்படி நானும் நினைக்கலாம். எத்தனையோ பெண்களை பார்க்கிறேனே அவர்களைப் போல் அல்லவே என் மாது. ச்சை என் மீதுதான் தவறு அவளிடம் எனக்கென்ன ஈகோ வேண்டிக் கிடக்கிறது நானே முதலில் இறங்கிச் செல்கிறேன்.
அவளில்லா வாழ்வும் வாழ்வல்லவே. அவளின் குண்டு கண்கள். சுழித்த இதழ். அமிர்த குரல். வாளிப்பான தேகம் முத்தாய்ப்பாய் அவளின் நேச நெஞ்சம் இவையில்லாமல் எப்படி வாழ்வேன் என்றவன் விறுவிறுவென உள்ளே வந்து தன் துணியை எல்லாம் பையில் அள்ளிவைத்துக் கொண்டான்.
“எங்கடா போற..?” என்ற அம்மாவின் கேள்விக்கு “என் பொண்டாட்டிகிட்ட” என்றான்.
“என்ன திடீர் மனமாற்றம்…?”
“அவ்ளோ பெரிய ஹீரோம்மா அவன். அவன் பொண்டாட்டி அவ்ளோ அசிங்கப் படுத்திருக்கு அவனை. ஆனாலும் அவன் காதலுக்காக அவன் எவ்ளோ பொறுத்து போய்ருக்கான். இன்னைக்கு அவன் பேசும்போதுதான் புரிஞ்சிது. என் லவ்க்காக நான் ஒருவாட்டிகூட இறங்கி போனதில்லையேமா. மாது எத்தனைவாட்டி என்னுடைய குறைகளை பொறுத்துகிட்டா அவ ஒருவாட்டி கோவபட்டதுக்கு நான் ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ணனும். நான் போறன்மா. அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை.”
மாதவியின் வீட்டில் அதே கேள்விக்கான பதிலை அதேபோல் கொடுத்திருந்தாள் மாது.
“அவ்ளோ பெரிய ஹீரோயின்மா. எவ்ளோ சம்பாதிக்கிறாங்க. எவ்ளோவிட்டு குடுத்து போய்ருக்காங்க. அவங்களே அவங்க காதலை காப்பாத்திக்க அவ்ளோ போராடிருக்காங்க. நான் என் வாழ்க்கைய காப்பாத்திக்க ஒன்னுமே பண்ணலையேமா”
“என்னை அடிச்சிட்டா நீ ஆம்பளையா..? நீ திங்குற சோறுலருந்து போடுற ட்ரெஸ்வரை தங்குற இடம் வரை என் சம்பாத்தியம். ஆம்பளைனா பொறுப்பு வேணும். அது இருக்கா உனக்கு வெட்டி தன்மானமும் வீணாப்போன கோவமுந்தான் இருக்கு. அவன் அடித்த கோவத்தில் அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி இன்று அழுதால்.
நான் சொன்ன வார்த்தைல அவன் தன்மானம் எவ்ளோ அடிபட்ருக்கும்மா. எம்மேலதான்மா தப்பு நான் அப்டி பேசிருக்க கூடாதும்மா என்று அழுதபடியை துணிகளை பையில் வைத்தாள்.
அவன் ஒருவாட்டிதானே கோவபட்டான் நான் ஏன்மா அதை பெருசா எடுத்துக்கனும். நானே இறங்கிப்போறேன்” என்றவள் வீசும் தென்றலாய் புறப்பட்டால்.
மாறன் மாதவி வீடு….
அவள் வருவதற்கு முன்னே வீடு திறந்திருந்தது. உள்ளே வந்துப் பார்த்தாள். அவளின் சேலையை கட்டிக் கொண்டு படுத்திருந்தான். அருகில் சென்றவள் கோவமாய் அவளின் சேலையை உருவிட மாறனோ அவள் கோவமாய் இருக்கிறாளென சமாதனமாய் பேசவர சேலையிருந்த இடத்தில் அவள் படுத்துக் கொண்டாள்.
மாறனோ இதழில் புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டு முத்தம் வைத்தான் மன்னிப்பை யாசிக்கும் யாசகனாய். அவளும் மன்னிப்பை அவ்வாறே கேட்க வார்த்தைகளேதும் தேவையில்லாமல் போனது சமாதனத்திற்கு.
“சம்மந்தி மாதவி வேகமா கிளம்பிட்டா நீங்க மாப்ளகிட்ட சொல்லிடுங்க”
“சம்மந்தி அவளுக்கு முன்ன இங்க புயல் கிளம்பிடுச்சி”
“என்ன புள்ளைங்களோ சண்டைனாலும் சரி சமாதனம்னாலும் சரி ஒரே மாதிரி இருக்குங்க”
“எப்டி திடீர்னு மனசு மாறுனாங்களோ…?”
“மனசு மாறுறதுக்கு பெரிய போதனைகளோ அறிவுகளோ தேவையில்ல சம்மந்தி அடுத்தவங்க வாழ்க்கை பாடமே போதும் புத்திசாலிகளுக்கு. நம்ம புள்ளைங்க ரெண்டும் புத்திசாலிங்க “என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தனர்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.