துளிகளுக்குள் வாழ்கிறோம்
அடர்ந்து ஓய்ந்த பெருமழையொன்றும்
நம்மோடு பயணித்த தில்லை
சிறு இலை நுனியில்
பெரும் பாறை உடலில்
நிலம் தேக்காத வெட்டையில்
குமிழிகள் உடையாத நீரிலென
பிரிந்து கிடக்கும் துளிகளை
யார் யாரோ சேகரித்து கொண்டிருக்கலாம் …
சாலையோர நடைப் பயணத்தில் கிளையசைத்து
காலணி அணியாத பாதத்தில் ஈரம் இழுத்து
அசைந்து போன கால்களுக்கு ஓய்வு கொடுத்து
ஒவ்வொரு துளியாக ரசிக்கும் மனம்
தன் வாழ்விலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவே
இந்த மழை விட்டு செல்கிறது
காற்றெங்கும் தன் துளிகளை …….
நிழலி🌺