இளைய தலைமுறைஎழுத்தாளர்களில் எனக்குப் பிடித்த வெகு சில எழுத்தாளர்களில் சத்யராஜ்குமாரும் ஒருவர்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் செய்த ஓர் உதவியை அநியாயத்திற்கு ஞாபகம் வைத்துக் கொண்டு ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
இனி அவர் போட்ட பதிவு.
……………..
கதை ஒன்றை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். கூடவே ஒரு கடிதம்.
“என்னுடைய கதை பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளுக்கு எந்த வகையிலும் குறைந்ததாகப் படவில்லை. இருந்தாலும் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள்?
பத்திரிகை ஆபிசில் தெரிந்தவர்கள் சிபாரிசு பண்ண வேண்டுமா? என்னை மாதிரி ஆளுங்க கதையெல்லாம் போட மாட்டாங்களா?
“இப்படி அவரிடம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு வைத்தேன்.
இந்த லெட்டருக்கு ஒரு மாசத்துக்கு மேலாகியும் எந்தப் பதிலும் போடவில்லை. சரி அவ்வளவுதான்.
இந்தக் கதை கத்தரிக்காயை எல்லாம் மூட்டை கட்டிப் போட்டு விடலாம் என்று சலித்திருந்த போது அவரிடமிருந்து பதில்.
“ஆபிஸ் வேலையாக பம்பாய் சென்று விட்டதால் உடனே பதில் எழுத முடியவில்லை. உங்கள் கதை படித்தேன். நன்றாக உள்ளது.
சாவி பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயம் பிரசுரம் ஆகும். நேரில் வாருங்களேன். நிறைய பேசலாம்.”
அன்றைக்கு என்னைக் கூப்பிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் ராஜேஷ்குமார் நடத்திய கதோபதேசம் என்னைப் போன்ற ஒரு வளரும் எழுத்தாளனுக்கு வரப்பிரசாதம்.
இமயத்தில் சந்தியாவை… என்று தலைப்பு வைத்து அவருக்கு நான் அனுப்பிய அந்தக் கதை எவரெஸ்ட் மலையேறும் குழுவில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரணக் கதைதான்.
ஆனால் மலையேறுவது தொடர்பான சின்னச் சின்ன விஷயங்களை கதையில் இழையோட விட்டிருந்தது நான் நினைத்த மாதிரியே அவரை இம்ப்ரெஸ் பண்ணியிருந்தது.
லெட்டரில் பக்கம் பக்கமாய் எழுத முடியாது, அதனால்தான் நேரில் வரச் சொன்னேன் என்றவர் அந்தக் கதை நன்றாகவே இருந்தாலும் அதில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டினார்.
தலைப்பு ரொம்ப சாதாரணமாய் உள்ளது. ‘பனி தூறிய அந்த பத்து நிமிஷம்’ என்று வைத்திருக்கலாம் என்றார். (இந்தத் தலைப்பைக் கொஞ்ச நாள் கழித்து வேறொரு கதைக்கு உபயோகித்துக் கொண்டேன்.)
கதையை ஆரம்பித்த இடம் தப்பு. சிறுகதையைப் பொறுத்த வரை முடிவுக்கு ரொம்பப் பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
எல்லாப் பத்திரிகைகளும் இன்ன இன்ன மாதிரிக் கதைகளைப் போட வேண்டும் என்று கொள்கை வைத்திருக்கிறார்கள். சில கதைகள் எல்லாப் பத்திரிகைக்கும் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் இந்தக் கதை சாவிக்கு தகுந்த மாதிரி உள்ளது அதனால்தான் அங்கே அனுப்பச் சொன்னேன் என்றார். பத்திரிகைகளுக்கு அவர்கள் விரும்பும் கதைதான் வேண்டும்.
யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை என்றார். ஆனால் பத்திரிகைகள் தங்களுக்கென்று கொள்கை வைத்திருக்கிற மாதிரி நீயும் உனக்கென்று இப்படிப்பட்ட கதைதான் எழுதுவது என்று கொள்கை வைத்துக் கொள்ளலாம்.
இரண்டும் ஒத்துப் போகிற மாதிரி எழுதினால் கதையும் வெளிவரும், உன் பேரும் கெடாது.
அவர் அளித்த உபதேசத்திலிருந்து மேலும் சில துளிகள்.
எழுத்து ஒரு தனி உலகம். தினமும் கொஞ்ச நேரம் அந்த உலகத்துக்குள் எட்டிப் பார்த்து விட்டு வருவதை பழக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். எதை எழுத வேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது என்பதே எழுத்தாளன் ஆக விரும்புபவன் முக்கியமாய்த் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அநாவசியமாய்க் கதையில் ஒரு வரி கூட வைக்க வேண்டாம். அப்புறம் கதையை வெட்டி விட்டார்கள், சிதைத்து விட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் கதை கெட்டு விடும் என்கிற மாதிரி நறுக்கென்று எழுதிப் பழக வேண்டும்.
இங்கே புதிதாய் ஜனரஞ்சனி என்று ஒரு பத்திரிகை கோயமுத்தூரிலிருந்து வெளிவரப் போகிறது. அதன் ஆசிரியர் வளரும் இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கச் சொன்னார்.
வேறு ஏதாவது கதை இருந்தால் அவருக்கு அனுப்பி வைக்கலாம் என்றார். நான்தான் அப்போது கதை வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்தேனே !
டயரியில் மடித்து வைத்திருந்த மூன்று சிறுகதைகளை எடுத்து அவர் கையில் கொடுக்க கொஞ்சம் அசந்துதான் போனார்.
அதில் ஒரு கதையின் தலைப்பு – விடமாட்டேண்டா உங்களை.
சிரித்துக் கொண்டே – பத்திரிகைகாரர்களை மிரட்டுகிற இந்த மாதிரித் தலைப்பெல்லாம் வைக்க வேண்டாம் என்று செல்லமாய்க் கடிந்து கொண்டார்.
இரண்டு வாரங்களில் இமயத்தில் சந்தியாவை… சிறுகதை அரஸ் படம் வரைந்து சாவியில் வெளி வந்தது. அதே வாரத்தில் ஜனரஞ்சனியிலும் என் கதை வெளியானது.
பத்திரிகை உலகத்தின் இரும்புக் கதவுகளை எப்படித் தட்டித் திறக்க வேண்டும் என்று ஒரு குட்டிப் பையனுக்குச் சொல்லிக் கொடுத்த ராஜேஷ்குமார் எழுத்தின் மூலமாக எனக்கு அறிமுகமான மனிதர்களில் ஒரு ஜெம் !
– சத்யராஜ் குமார்
©rajesh kumar