எழுத்தாளர்: ஆன்றோஜ்
அடைமழை கொட்டி தீர்த்து ஓய்ந்து இருந்தது. தங்கள் வீட்டையும் புகலிடத்தையும் தண்ணீர் சூழ்ந்து கொள்ள வெள்ள நெருக்கடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள காய்ந்த இடங்களை தேடி மக்கள் தஞ்சம் புகுந்துகொண்டிருந்தனர்.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் நிலம் தொடும் மழைத்துளிகள் தங்கம் போல் ஜொலித்து நிலத்தினை அடைவதனை கண்டார் தயாளன். தங்கநிறமாய் வெட்டும் மழைத்துளிகளை ரசிக்க தவறியவன் மனதில் ஆறாவடுவாய் பல காயங்கள் இருக்க மதுவினை கையில் ஏந்தியபடி ஜன்னலின் வழியே வெறிச்சோடிய தெருவினை நோட்டமிட்டு கொண்டிருந்தார். சொகுசான வீடு, கார், சொத்து, பணம், நிலபுலன் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை, இவை அனைத்தையும் தனக்கு பின் கட்டி காக்க பிள்ளை செல்வமும் இல்லை தயாளனுக்கு. பிள்ளை இல்லாத ஏக்கம், மனைவிக்கு அதை வெளிக்காட்ட தெரியாமல் சண்டையும் சச்சரவுமாக தினமும் வீட்டில் சூழல் இருக்க குடிக்கு அடிமையானார் தயாளன். இரண்டு வருடங்கள் முன் தனது 35 வது வயதில் மலடியாய் தன்னை சீமந்த வீட்டில் ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என தூக்கில் தொங்கிவிட்டாள். மறுமணம் ஏமாற்றம் என்று எண்ணியதால் அதை பற்றி தயாளன் யோசிக்ககூட இல்லை.
அவரின் இந்த ஒரு விரக்தி மனநிலையை குலைப்பது போல சுந்தரி தன் 10 வயது மகள் லீலாவை கையில் பிடித்தும், தன் கைகுழந்தையை இடுப்பிலுமாக வந்தாள். வந்தவள் நேராக கெபியின் படியில் ஏறி நடுக்கெபியில் அமர்ந்தாள்.
தெருவிளக்கின் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் இல்லை. ஒரு மூலையில் கடந்த தார்பாலினை எடுத்து விரித்து தன் குழந்தைகளை படுக்க செய்தாள். பின்னர் சொருபம் நோக்கி உட்கார்ந்தவள் வெகுநேரமாகியும் கண்களை சொருபம் விட்டு எடுக்கவில்லை. தயாளன் அவளையும் அவள் பிள்ளைகளையும் மாறி மாறி பார்ப்பதை நிறுத்தவும் இல்லை. இறுதியாக தன் இரண்டு குழந்தைகள் நடுவில் அவள் படுத்து கொண்டாள். தயாளன் மாதா சொருபத்தை நோக்கினான், ஆயிரம் வலிகள் உள்ள மனம் வேண்டியது ஒன்றே,
“ஒரு கொழந்தைய தர கூடாதாமா?”
அன்று தயாளன் கோப்பையில் ஊற்றிய மதுவை அருந்தவில்லை, போதையின்றி தூங்க சென்றார்.
காலை விழிக்கும் போது ஒரு மனத்தெளிவு தயாளனுக்கு கிடைத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை தாராள மனதுடன் செய்தார். ஒரு வாரம் இப்படியே சென்று கொண்டிருந்தது. மது அருந்துவதை முற்றிலும் நிறுத்திகொண்டார் தயாளன். நிறுத்திகொண்டார் என்று சொல்வதை விட அதற்கான அவசியம் வரவில்லை என்றே சொல்லலாம்.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியே இருந்தனர். சமூக அக்கறை உள்ளவர்களும், காவல்துறை, தீயணைப்புத்துறை மேலும் பல துறைகள் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி தனது கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.
அன்றைய நாள் வெள்ள நிவாரணம் எல்லாம் களத்தில் சென்று வழங்கிவிட்டு மாலை வீடு திரும்பிய தயாளனுக்கு மிக அசதியாக இருந்தது. வந்தவர் கண்ணில் கெபியில் பரிசுத்தமாய் வீற்றிருக்கும் மாதா சொருபம் பட சொருபத்தின் கீழ் லீலா தன் தங்கையை மடியில் படுக்கவைத்து தானும் சுவரில் சாய்ந்தபடி தூங்குவதை தயாளன் கண்டார். காரில் இருந்த போர்வையை எடுத்து வந்து லீலா மேல் போர்த்திவிட்டார். வந்த வழியே திரும்பி சென்றவர் அசதியில் கட்டிலில் சென்று சாய்ந்தார். மணி இரண்டை தாண்டி இருக்கும் குழந்தை அழுது சத்தம் கேட்க எழுந்து ஜன்னலின் வழியே நோக்கினார். லீலா குழந்தையை சமாளிக்க முடியாமல் தானும் அழுதுகொண்டே அமுத்தி கொண்டிருந்தாள். தயாளன் கெபிக்கு சென்று,
“பாப்பா” என்றழைக்க
லீலா தன் தங்கையை கையில் தூக்கி கொண்டு பின்னே பயந்து சென்றவாறே, “வேணாம் எங்கள அடிக்காதீங்க வேணாம் வலிக்கும்“ என்று தயாளன் கூறவருவதை காதுகொடுக்காமல் சொல்லியதையே மறுபடியும் மறுபடியும் சொல்லிகொண்டிருக்க, அப்பொழுதான் கவனித்தான் லீலாவின் கண்ணத்தில் கைவிரல் பதிந்து இருப்பதை. குழந்தையும் வீறிட்டு அழ தயாளனால் சமாளிக்க முடியாமல் தான் கையோடு கொண்டுவந்திருந்த பால் புட்டியை லீலாவிடம் காட்டி,
”இந்தா மா இத பாப்பாக்கு குடுப்போமா?”
என்று தயாளன் கேட்க ஒரு அடி முன்னாள் வந்து எட்டி பால்புட்டியை தயாளன் கையில் இருந்து வாங்கினாள்.
“நீ சாப்டியா?” என்ற கேள்விக்கு, ‘இல்லை’ என்ற தலை அசைவு மட்டுமே பதிலாய் வந்தது.
“யாரு உன்ன அடிச்சது பாப்பா?” என்ற கேள்விக்கு பதில் இல்லை,
“அம்மா எங்க போனாங்க மா?” என்ற கேள்வி கேட்டவுடன் லீலா அழத்துடங்கினாள்.
“சரி சரி அழாத மா என்கூட வா உனக்கு சாப்பாடு செஞ்சு தரேன்.” என்று அழைத்த தயாளனை ஏறிட்டு பார்த்தாள். பால் குடித்து தூங்கி போன குழந்தையை தூக்கினார்.
“டிங்கு பாவம் அவள அடிக்காதீங்க பிளீஸ்.” என்றாள் லீலா கெஞ்சும் தோரணையில்.
குழந்தை பயந்துபோயிருப்பதை அறிந்துகொண்டவர் லீலா முன் மண்டிபோட்டு , ”பாப்பா யாரு உங்கள அடிச்சது?” என்ற கேள்விக்கு மீண்டும் அழ துடங்க அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல கெபியின் படி இறங்க திரும்பி மாதாவின் சொருபத்தை ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையில் கோடி நன்றிகள் நிறைந்திருந்தது.
ஒரு குழந்தையாவது தன்னை அப்பா என்றழைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்த தயாளன் இன்று உதவும் இதயம் கூட்டிலுள்ள 57 குழந்தைகளின் அன்பான ஆதரவான தந்தை.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: