அறிமுகமில்லாத போதும்
பல வருடம் பழகியது போன்று
சகஜமாக தான் பேசினாள்
ஏராளமாக என்னென்னவோ
பேசினாலும்
சரளமாகவே தான் பேசினாள்.
என் தோழியின் சாயலை ஒத்தவள்
ஆங்கில பாடமெடுக்கும்
என் சுஜாதா மிஸ்ஸின்
முகவெட்டு அவளுக்கு இருந்தது.
நன்றாய் பேசி கொண்டிருக்கும் வேளையில்
கொஞ்சம் ஞாபகம் வந்தவளாய்
நீ யார் என்றாள்?
என் அருமை,பெருமைகளை பேசி
தருமி புலவனை போல்
கேட்டவைகளை,பார்ப்பவைகளை,
உணர்ந்தவைகளை எல்லாம்
உள்ளது உள்ள படி
கவி படைப்பேன் என்றேன்.
இதுவரை ஒலித்து கொண்டிருந்த
அவளது குரல்
அந்த நிமிடத்திலிருந்து
நின்று விட்டிருந்தது.
டைரிகளை,நோட்டு புத்தகங்களை
என் கண் முன்னிலிருந்து அகற்றுங்கள்.
என் கைகளை கட்டி போடுங்கள்
நான் இனிமேல் எழுத மாட்டேன் என
சத்தியபிரமாணம் கூட செய்கிறேன்.
அவளது இரகசியங்களை
ஒரு போதும் மனதை விட்டு
அகல விட மாட்டேன்
சங்கீதஸ்வரங்கள் பாடல்களில்
ஒலித்து ஒளிக்கும்
பானுபிரியாவை போல்
போனிலாவது அந்த தேவதையை
இன்னும் கொஞ்சம்
பேசச் சொல்லுங்கள்!
-லி.நௌஷாத் கான்-