அரிசி பல் முளைக்க
அன்னையவள் கைவிரலே
தேய்க்கும் பிரஸ் ஆனது
அடுத்தடுத்து பல் முளைக்க
அழகழகாய் பிரஸ் வாங்கி
பொம்மை வைத்து விளையாட
கை பிடித்து பழக்கிவிட்டாள்
அன்னை
பள்ளி செல்ல தொடங்கையில்
பாடம் சொல்லும் டீச்சரும்
காலை இரவு இரு முறை
பல் தேய்க்க வேண்டுமென
நல்ல பழக்கம் சொல்லிட
நல்ல பிள்ளை ஆகியே
தினமும் பற்கள் துலக்கினேன்
நெகிழி பிரஸ் உதவியுடன்
காலம் கடந்து போகையில்
நானும் வளர்ந்து போனேனே
பாலர் பாடம் யாவையும்
மறந்து துறந்து போனேனே
நாக்கு ருசிக்கு மயங்கியே
கண்டதையும் புசித்திட
வாயும் கெட்டு போனதே
பல்லு சொத்தை ஆனதே
சீர் கெட்ட உணவினால் உடல்
சீக்கிரமாக சீர்கெட
பற்கள் கொட்டி போயிட
பொக்கை வாய் ஆனேனே
பல்லு போன பின்னரே
ருசிக்கு உண்ண முடியலை
பசிக்கு மட்டும் உணவையே
பருகிட தானே முடியுது
பல் போனால்
சொல் மட்டும் போகது
திட உணவும் போய்
மீண்டும் குழந்தையாக
நீர்ம நிலை உணவே
— அருள்மொழி மணவாளன்