மரக் கைப்பிடியில் அழகாய் பொருந்திய கத்தி!
யார் கரங்களில்?
எந்த தருணங்களில்?…..
அது தீர்மானிக்கும்
அவரது வாழ்க்கையை!
இங்கே இது என்ன?
வெட்டு ஒன்று, துண்டு இரண்டா?
காய்கறி வெட்டுவதும் ஒரு
அழகான கலையே!
வெறும் கல்லுக்கு உயிர் கொடுப்பவன் சிற்பி!
வெற்றுப்பலகையைப்
பேச வைப்பவன் ஓவியன்!
சொற்களுக்கு உயிர் கொடுத்து,
உணர்வுகளை வெளிப்படுத்துபவன்
நல்ல நடிகன்!
பல்வேறு துறைகள்,
பல்வேறு மனிதர்கள்…..
அரசன் முதல் ஆண்டி வரை
அனைவரும் இணைவது
ஒரு புள்ளியில்……
ஆம்…..உணவு!
அத்துணை பேரையும்
தன் அன்பான,அக்கறையான,
அழகிய நேசத்தோடு
கட்டியிழுப்பது உணவமுது
படைக்கும் அவரவர் வீட்டுத் தேவதைகளே!
சமையலும் ஒரு தெய்வீகமான கலைதான்! அதில்
அர்ப்பணிப்பு இருந்தால்……
உணவமுது படைக்கலாம்.
“மிகினும் குறையினும்
நோய் செய்யும்”……….
உணவுக்கு ‘மருந்து ‘ என்ற
தனி அதிகாரம்
படைத்தார் நம் தெய்வப் புலவர்.
நாமும் அளவோடு உண்டு
வளமோடு வாழ்வோமே.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
