கல்யாணம் முடிந்த ஏழாம் நாளிலேயே மூன்று நாள் விடுமுறை
எடுத்துக்கொள்கிறாள்
என் புது பொண்டாட்டி !
விடியலுக்கு பிறகான காலையில்
நான் இரு சக்கர வாகனத்தில்
மளிகைக்கடை நோக்கி பறக்கிறேன் .
அது நாள் வரை ஈ ஓட்டிய கடையெல்லாம்
ஆட்கள் நிரம்பி ததும்பி வழிகிறார்கள் .
ஆளரவமற்ற கடைகளைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறேன் .
மனித தலைகள் குறையும் கடையின்
கடைசி விளிம்பில் நிற்கிறேன் .
பரபரப்பு குறையாத அண்ணாச்சி
என்ன வேணும் புது மாப்பிள்ளைக்கு ?
என சத்தமாக கேட்கிறார் .
மெல்லிய கிசுகிசுத்த வார்த்தைகளின்
என் வாயசைவில்
“விஸ்பர் “,
என்பதை புரிந்து கொள்கிறார்.
செய்தித்தாளில் சுருட்டி அதை கைகளில் கொடுக்கிறார்.
100 ரூபாய் தாளை நீட்டுகிறேன்
எண்ணி பார்க்காத சில்லறைகளை
சட்டைப்பையில் போடுகிறேன்,
வாங்கி பழக்கப்படாத பொருளை வண்டியில் திணிக்கிறேன்,
கடைக்காரரின் நமட்டுச் சிரிப்பில் வெட்கத்தில் சிவக்கிறேன்!
அண்ணி வந்து சாங்கியம் சொல்கிறார் !
கிழக்கு நோக்கி நான் நிற்க,
கட்டியவள் என் காலில் விழ,
வெற்றிலை பாக்குடன்… மல்லிகைப்பூவையுமம்….
மாதவிடாய் கவசமும்…
சீதனமாய் திணிக்கப்படுகிறது அவள் கையில்…
அவள் உச்சந்தலையை
நான் தொட்டு கும்பிட பணிக்கப்படுகிறேன்
அன்றைய நாளில்
இவை யாவுமே முதல் முறையாக!
இலால்குடி
ரெ.மலையரசன்