1870, கடவுள் தான் மனிதனை படைச்சார்ன்னு மதவாதிகள் சொன்னது தவறு, மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தவன்னு டார்வின் ஒரு கருத்தை சொல்லி வைக்க, அதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்களும் அறிவியலாளர்களும் போராடிய கால கட்டம்.
மற்ற விலங்குகளில் இருந்து மனிதன் வேறுபடுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது அவனுடைய கலையறிவு.
இசை, ஓவியம் போன்ற நுண்ணிய கலைத்திறன் எப்போது மனிதனுக்குள் நிகழ்ந்தது என்பதில் பெரும் குழப்பம் உண்டு. அன்றைய தேதியில் அவற்றை புரிந்து கொள்ள கிடைத்தது குகை மனிதர்களின் எளிய கோட்டோவியங்கள்.
யானை, சிறுத்தை என கண்ணில் பட்டவைகளை குகை மனிதன் வரைந்து வைத்தது மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றிய புரிதலில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.
சரியா சொன்னா 1869க்கு முன் வரை மனிதனின் நாகரீக வள்ர்ச்சி என்பது சுமார் 2000 முதல் 5000 ஆண்டுகளுக்குள் தான் நிகழ்ந்திருக்கனும் என்பதே அதுவரையிலான கண்டுபிடிப்புகளின் முடிவு.
ஆனால் 1869’ல் ஸ்பெய்னில் உள்ள ஒரு கிராமத்தில் வேட்டைக்கு போன ஒரு க்ரூப் ஒரு குகையை கண்டு பிடிச்சாங்க. குளிருக்கு இதமா பதமா இருந்ததால ஓய்வெடுக்க அதை பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க.
அதுக்கு அப்புறமா 10 வருடங்கள் கழிச்சு 9 வயதான மரியா அந்த குகையின் உள்ளே சுவரின் மேல் சில சித்திரங்கள் இருப்பதை பார்த்து அவங்கப்பா கிட்ட சொல்ல, தன்னார்வ புதை பொருள் ஆராய்ச்சியாளாரான மார்செலினோ அது கற்கால மனிதர்களின் ஓவியம், தன் மகள் கண்டு பிடித்தது விலை மதிப்பில்லாத ஒரு பொக்கிஷம்ன்னு உணர்ந்தார்.
அந்த ஓவியங்களில் காணப்பட்ட மிருகங்கள் சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை என அவர் நினைத்தார்.
‘அல்டாமிரா குகை’ (Altamira) ஓவியங்கள் உலகிற்கு புதிய வெளிச்சங்கள் தரும் என நம்பினார். ஆனால் அவருக்கு கெட்ட காலம் ஆரம்பித்திருந்தது.
சுமார் 270 அடி வரை நீளமுள்ள அல்டாமிரா ஓவியங்கள், அதுவரை கண்டுபிடித்திருந்த பல்வேறு ஓவியங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக 3டி எஃப்ஃபெக்டில் இருந்தது முதல் ஆச்சரியம்.
இரண்டாவதாக அவை கலர் ஓவியங்கள். அதிலும் கலர்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தி ஓவியத்துக்கு உண்மை தன்மையை குடுத்திருந்தார்கள். இதை விட ஆச்சரியமான ஒரு விஷயம் இருந்தது.
வெளிச்சம் இல்லாமல் அவ்வளவு பெரிய ஓவியம் சாத்தியமே இல்லை. வெளிச்சத்துக்காக தீப்பந்தம் பயன்படுத்தி இருந்தால் புகையின் கறை மேல் சுவற்றில் படிந்திருக்கும்.
பொதுவாக கும்மிருட்டான குகைகளின் மேல் சுவற்றில் காணப்படும் அனைத்து ஓவியங்களிலும் ‘புகைக் கறை’ இருக்கும். ஆனால் அல்டாமிரா ஓவியங்களில் அவை இல்லை.
தேவையான வெளிச்சம் எப்படி கிடைத்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. இவை அனைத்தும் மார்செலினோக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்தது.
மார்செலினோ நினைத்தது போல அவ்வளவு எளிதாக அவரால் அதை மற்ற ஆராய்ச்சியாளர்களிடம் நிரூபிக்க முடியவில்லை.
‘மதத்தை போலவே அறிவியலும் மனிதனின் கண்டுபிடிப்பு தான், அதை அவ்வளவு எளிதாக மாற்றிட முடியாது’ன்னு அவருக்கு கற்றுக் கொடுத்தது அந்த ஓவியங்கள்.
ஒரு புறம் ‘சர்ச்’ அவரை கடவுளுக்கு எதிரானவர்ன்னு துவைத்து எடுக்க, இன்னோரு புறம் ஆராய்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல் போனது. அதில் முக்கியமான கேள்வி புகைக்கறை இல்லாமல் எப்படி ஓவியங்கள் சாத்தியம் என்பது தான்.
போதாக்குறைக்கு ஓவியங்களை பிரதி எடுக்க அவர் நியமித்த ஓவியன் ஒருவன் குகையில் கொஞ்சம் பெயின்ட்டை சிந்தி வைக்க, பெருமைக்காக ஃபோர்ஜரி செய்தார் என்ற அவப்பழியை சுமந்து கிறுக்கு பிடித்து அலைந்தார் மார்செலினோ.
தற்செயலாக, தன் வீட்டு வேலைக்காரியின் மூலமாக மிருக எலும்பு மஜ்ஜைகளை எரித்தால் அதனால் வரும் புகை சுவற்றில் படியாது என்பதை தெரிந்து கொண்டார்.
10,000 ஆண்டுகளுக்கு முன்பே அதையும் கண்டு பிடிச்சவன் எவ்ளோ பெரிய அறிவாளியாக இருக்கனும்.
கற்கால மனிதன் அறிவு வளர்ச்சியில் பின் தங்கியவன் என்ற நமது எண்ணம் எவ்வளவு பெரிய தவறு, மனிதனின் பரிணாம வளர்ச்சி நாம நினைத்த காலத்துக்கும் முந்தையது என்பதை புரிந்து கொண்டு வெளிப்படுத்த முடியாமல் மனதுக்குள் குமைந்து கண்ணை மூடினார் மார்செலினோ.
அவர் இறந்து 15 ஆண்டுகளுக்கு பின் அவருடைய கண்டுபிடிப்பு உண்மை என அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டது.
மிகவும் புகழ்பெற்ற “Mea culpa d’une sceptique” என்ற பகிரங்க மன்னிப்பு கடிதமும் வெளியிட்டு தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேடி கொண்டார் புதை பொருள் ஆராய்க்சியாளர் “Cartailhac”.
அதன் பிறகும் அல்டாமிரா குகை ஓவியங்கள் தனக்குள்ளே ஆச்சரியங்களை வைத்திருந்தது. அதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அது 35,000 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று தெரிந்து பேஸ்தடித்தார்கள்.
கற்கால மனிதன், உண்மையில் கற்கால மனிதன் தானா என்ற கேள்வியை எதிரில் வைத்து இன்றும் நிற்கிறது அல்டாமிரா குகை.
உலக புகழ்பெற்ற ஓவியர் பிகாஸோ, அல்டாமிரா ஓவியங்களை பார்வையிட்ட பின், “இதுவரை வந்த அனைத்து படைப்பும் இதன் முன் நலிந்து போனவை” என்று சொன்னார்.
1985’ல் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட குகைக்கு மனிதர்கள் படையெடுக்க, நிரந்தரமாக மூடி விட்டு அதை போன்ற ஒரு மாடலை உருவாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறது ஸ்பெயின் அரசு.
குகையில் இருந்த கைத்தடங்களை வைத்து அவற்றை வரைந்தது பெண் என முடிவு செய்திருக்கிறார்கள்.
ஓவியங்கள் தொடர்பான தகவல்கள் கமென்ட்டில் இருக்கிறது. இந்த ஓவியங்களை பற்றி கேள்விப்பட்டு படிக்கும் போது சிக்கின மற்றொரு மேட்டர்.
Antonio Banderas நடித்த வெளியான ‘Finding Altamira’ திரைப்படம்.
அட்டகாசமான ஒளிப்பதிவுடன் 1870களை கண்ணில் நிறுத்திய செம்ம்ம்ம Biography திரைப்படம். கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத ஒன்று.
மேலே சொன்ன அனைத்தையும் அட்டகாசமான ஒளிப்பதிவுடன் திரையிலும் காணலாம்.
©Dr. M.Saravana Kumar
1 comment
Cave paintings are apprx 40,000 yrs older.(according to 3rd social book)