உடன்கட்டை

by Nirmal
143 views

உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர்.

இது 1798ல் எழுதப்பட்டது.

அவர் பெயர்: Donald Campbell.

பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன்.

இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை.

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும்.

வெள்ளை சேலை கட்டி இருந்தாள்.

தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள்.

அவளைச் சுற்றி 20 பெண்கள்
நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள்.

உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள்.

பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும்.

இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள்.

இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள்.

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள்.

வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார்.

அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன்.

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன்.

500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு அழைத்தார்.

சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார்.

நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள்.

பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள் நெற்றியில் தடவினார்கள்.

பிறகு அந்தப் பெண் சிதைக்கு அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள்.

சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.

இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல் அருகில் அமர்ந்தாள்.

பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை, திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள்.

தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார்.

பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள்.

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள். ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள்.

அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார்.

பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள்.

பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள்.

பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள் ..

பிறகு,இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள்.

குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய் போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள்.

பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள்.

இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது.

இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார்.

ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார்.

பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள்.

பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார்.

பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள்.

அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது.

ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது.

சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது.

நான் அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது.

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும், ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது.

©Muthukumar Sankaran

You may also like

Leave a Comment

error: Content is protected !!