எழுத்தாளர் கவி சந்திரா

by admin
234 views

உங்கள் பெயர்: நிஜப் பெயர் : கவிதா சந்திரசேகர்
புனைப்பெயர் : கவி சந்திரா

வெளியிட்டிருக்கும் புத்தகங்கள்: எழுதியிருக்கும் கதைகள் 42
புத்தகமாக வெளி வந்திருக்கும் கதைகள் 24

உங்கள் படைப்புகள் கிடைக்கும் இடம்:
கவி சந்திரா பதிப்பகம்
99623 18439
பிரியா நிலையம்
94444 62284
அருண் பதிப்பகம்
90031 45749

1. உங்கள் படைப்பிற்கான தேடலின் போது நீங்கள் கண்டறிந்த அல்லது கற்றறிந்த ஒரு புதிய விஷயம் என்ன?

சிறு வயதிலிருந்து சில தமிழ் சொற்களை நாம் தவறான அர்த்தத்தில் அதுவும் நாம் சொல்ல வருவதற்கு எதிர்மறையான அர்த்தத்தில் சரியான புரிதல் இல்லாமல் பயன்படுத்தி வந்திருப்பது தெரிந்தது.

(உதாரணம் : நாற்றம், அருகாமை)

2. உங்கள் எழுத்தில் உருவான எந்த கதாப்பாத்திரத்தின் வழி தற்போதைய உலகத்தை நீங்கள் காண விரும்புகீறீர்கள்?! அது ஏன்?

ஹாஹா.. வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை.. (நடக்க வாய்ப்பே இல்லையே..!)
அப்படி சொல்லியே ஆக வேண்டுமானால், “கையில் மிதக்கும் கனவா நீ..!!” கதையில் வரும் சஞ்சய் தத்தாத்ரேயன் வழியும் என் முதல் கதை “நானே நானா நீயே தானா..!!” கதையின் நாயகி நிவேதிதா வழியிலும் தான் பார்க்க விரும்புகிறேன்..

ஒருவன் இந்த உலகத்தில் நடக்கும் பல அநியாயங்களை தன் வழியில் தட்டிக் கேட்கவும் தண்டிக்கவும் கூடியவன், இன்று நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களுக்கு இப்படியான ஒருவன் தேவை.

அதே போல் நிவி மிகவும் நேர்மறையான பெண். தன்னை சுற்றி நடக்கும், எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்குமென நம்புபவள், எந்த ஒரு பிரச்சனையையும் நிதானமாக எதிர்க்கொள்ள கூடியவள்.

3. நீங்கள் எழுத யோசித்த அல்லது தயக்கம் கொண்ட எழுத்து வகை எது? காரணம் என்ன?

தயக்கம் என்று சொல்ல வேண்டுமானால், சரித்திர வகை கதைகளை எழுதவே நான் இப்போதும் தயங்குகிறேன்.. என்னிடம் சில வாசகிகள் இந்தத் வகை கதையை எழுத சொல்லி கேட்டும் ஏனோ எனக்கு அதை எடுப்பதில் ஒரு தயக்கம் இருந்துக் கொண்டே இருக்கிறது.

4. ரைட்டர் ப்லோக் (writer block) பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இதுவரை அப்படி ஒன்றை நான் எதிர்க் கொண்டது இல்லை.. வேண்டுமானால் இப்படி சொல்லலாம், எழுதுவதில் தான் தடைகளும் தடங்கல்களும் உருவாகிறது.. தொடர்ந்து எழுத நேரம் போதவில்லை என்று சொல்லலாம்.

5. எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாதென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

எழுத்தாளர்களுக்கு என்று பொதுப்படையாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டுமென நாம் தீர்மானிக்க முடியாது.

ஒரே காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களிடையே பிரிவினை இருக்க கூடாது என நான் நினைக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

6. எழுதிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் எது? ஏன்?

பொதுவாக குடும்ப தலைவியாக வீட்டின் மொத்த பொறுப்பையும் கவனிக்க வேண்டி இருப்பதால் தனியாக இதற்கென நான் நேரம் பிரிப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எழுதினால் தான் என்னால் கதையே எழுத முடியும்.

அதிலும் பெரும்பாலும் நான் இரவில் தான் எழுதுவது வழக்கம். (அப்போ தான் யாரும் எந்த வேலையும் சொல்ல மாட்டாங்க..)

7. அப்படி உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால், இதுவரை நீங்கள் படித்த சங்க

இலக்கிய கதைகளில் (பொன்னியின் செல்வன்/ மஹாபாரதம்/ ராமாயணம்/ இன்னும் பல) எந்த கதையின் நடையை அல்லது ஏதாவது ஒன்றை அந்நாவலில் மாற்றி அமைத்திட விரும்பிடுவீர்கள்? அது ஏன்?

இதை மட்டும் செய்யவே கூடாது என நினைக்கிறேன்..

சில விஷயங்களை அப்படியே தள்ளி வைத்து ரசிப்பது தான் அழகு. அதன் பழமை மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பதே நம் கடமை.

எனக்கு பெரும் வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் அதே பெயரில் இன்றைய கால கட்டத்துக்கு தகுந்தது போல் சிலர் எடுப்பதிலேயே உடன்பாடு கிடையாது. நாம் பார்த்து ரசித்த ஒன்றை மற்றவர்களும் பார்த்து ரசிக்க வழி விட்டு தள்ளி நின்று அழகு பார்க்க வேண்டும்.

8. எங்கு உங்களின் கதை சார்ந்த விடயங்களை பற்றி யோசிப்பீர்கள்?

ஹாஹா.. பெரும்பாலும் சமையலறையில் தான்.

இதில் கொடுமை என்னவென்றால் அங்கிருக்கும் போது அப்படியே அருவி மாதிரி கொட்டும் காட்சிகளும் வசனங்களும் நாம் எழுதுவதற்கு வந்து அமர்ந்த உடன் மறந்து போய் விடும். அப்போதே குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள அந்த சமயத்தில் வாய்ப்பும் இருக்காது.

9. எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஒன்றெது?

மீண்டும் அதே தான்.. நான் என்னை பற்றி மட்டும் கூறுகிறேன்..

என் கதை என்னுடைய கதையாகவே இருக்க வேண்டுமானால் எங்கும் யாரின் தலையீடும் யாரின் குறுக்கீடும் வர நான் அனுமதிக்கவே மாட்டேன்..

அதே போல் யாருக்காகவும் கதையின் போக்கில் மாற்றமும் கொண்டு வர மாட்டேன்.. நான் நினைத்ததை மட்டுமே எழுதி முடிப்பேன்..

இது சிலருக்கு (பலருக்கு) திமிராக கூட தெரியலாம்.. ஆனால் என்னை பொறுத்தவரையில் இது என் கற்பனையில் நான் செதுக்கும் ஓவியத்தில் மற்றவர் வண்ணம் தீட்டுவதை விரும்பாததால் உண்டான பிடிவாதம்.

10. நீங்கள் எழுதியதில் உங்களின் மாஸ்ட்டர் பீஸ் எது? ஏன்?

இதற்கான பதிலை நான் எப்படி சொல்ல முடியும்..? என் அன்பான வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.

11. நீங்கள் எழுதியிருக்கவே கூடாதென்று நினைத்த உங்களின் ஒரு படைப்பு எது?

கடவுளின் கருணையினால் இதுவரை இப்படி ஒன்று நடக்கவில்லை.

12. எழுத்துத் துறையை பொறுத்த மட்டில் உங்களின் தாரக மந்திரம் என்ன?

ஒரு கதையை எழுத துவங்கும் போதே, இந்த கதைக்களம் இங்கே ஆரம்பித்து இப்படி சென்று இங்கே தான் முடிய வேண்டுமென்ற ஒரு முழு திட்டமும் என் மனதில் இருக்கும்..

அதை எப்போதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவோ மாற்றிக் கொள்ளவோ நான் தயாரில்லை. இதில் சற்று அதிகமாகவே நான் பிடிவாதமாக இருப்பேன்..  

✌️கேட்டவுடன் கேள்விகளுக்கு பதிலளித்து அனுப்பிய கவி சந்திரா அக்காவிற்கு அரூபி தளத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் ❤️

You may also like

Leave a Comment

error: Content is protected !!