எழுத்தாளர்: சாந்தி ஜொ
சென்னையிலிருந்து அலங்காநத்ததிற்கு செல்லும் பேருந்தில் ஏறியதும் கிடைத்த இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் நான் இந்த முறை ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். போகும் வழியில் ரோட்டில் அவளை எங்கேயாவது காண்பேனா என சிந்தித்து கொண்டே பயணத்தை தொடங்கினேன். சாத்தியமா என்று தெரியவில்லை? போன வருடம் நடந்த அந்த நிகழ்ச்சி என் நினைவிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அவளின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருட அலுவலக விடுமுறையின் போதும் அலங்காநத்தத்தில் உள்ள மாமாவின் வீட்டிற்கு செல்வது என் வழக்கம். போன வருடம் அங்கு சென்றபோது தான் அவளைக் கண்டேன். ஊரிலுள்ள பஸ் நிறுத்ததின் அருகில் அமைந்துள்ள சிந்தனையாளரின் சிலைக்கு கீழே அவள் அமர்ந்து இருந்தாள். அழுக்கேறிய தலையும் கிழிந்த சீலையும் உடுத்தி வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். ஊரில் உள்ள ஒரு சில வீடுகளில் மிச்சமான சாப்பாடுகள் அவளுக்கு கிடைக்கும். அது போக பஸ்சுக்காக காத்திருக்கும் சில பேர்களிடம் கை ஏந்தி பிச்சையும் எடுப்பாள். அவளுடைய இருப்பிடம் அந்த சிலையின் கீழ் உள்ள மண் தரைதான். ஒருநாள் மாமாவுடன் பக்கத்து ஊர் கடைக்கு சென்று இரவு ஊருக்கு திரும்பிய போது அவள் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. கூர்ந்து கவனித்து பார்க்கையில் அவள் அழுது பேசிக் கொண்டிருப்பது அருகில் நின்று கொண்டிருந்த சிலையோடு என்பதை புரிந்து கொண்டேன்.
“என் மேல கோவமா இருக்கியா? மன்னிச்சுகோ. பக்கத்துல இருக்க சக்கரத்தாழ்வார் கோயில ஏதோ விசேசம் போல. நிறைய சனங்க சாமி கும்பிட வந்து இருந்தாங்க. எல்லாரும் சாப்புடு முடிஞ்சதும் நான் ஏதாவது சாப்புட கிடைக்கும்னு நின்னுட்டு இருந்தேன். அப்ப ஒருத்தன் வந்து இங்கலாம் நீ நிக்க கூடாதுனு சொல்லி என்னைய தள்ளிவிட்டான். பக்கத்துல இருக்க முள்ளு செடில விழுந்துட்டேன். அதான் கையில காயம். ஆனா தள்ளிவிட்டவன பார்க்கும் போது என் புள்ள மாதிரியே இருந்தான். என் புள்ள… என் புள்ள… என்ன செய்றானோ? அவன் என்னைய வீட்ட விட்டு துரத்திட்டான். ஆனா அவன என் மனசுல இருந்து துரத்த முடியல. அவன் நல்ல இருக்கணும். அது போதும் எனக்கு”
மாமாவிடம் அவளை பற்றி விசாரித்த போது 1 வருடமாக அந்த சிலைக்கு கீழே தான் அவள் பிச்சை எடுத்து உறங்குவாள் என்றும் பைத்தியக்காரதனமாக சிலையிடம் இப்படி பேசிக் கொண்டிருப்பாள் என்றும் சொன்னார்.
அடுத்தநாள் காலையில் அவள் அதே போல சிலையிடம் “எல்லாரையும் கண்கொத்தி பாம்பு போல நீ பாத்துட்டு இருக்க. ஆனா ஒன்ன பாக்க என்ன தவிர யாரும் இல்லயே. உனக்கு நான் இருக்கேன் எனக்கு நீ இருக்க” என்று சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் உருவத்தை வைத்து பிச்சைக்காரி என சொன்னாலும் அவள் பேசுவதை கேட்கும் போது ஏதோ அவளிடம் போய் பேச வேண்டும் என்று எனக்கு தோன்றியது. மனம் அவளிடம் பேசு என்று சொன்னாலும் கால்கள் நகரவில்லை.
சில நாட்கள் கழித்து தெருவை அகலப்படுத்தும் திட்டத்திற்காக அதிகாரிகள் அங்கு பார்வையிட வந்து அந்த சிலையை அப்புறப்படுத்த சொல்லி ஆணையிட்டார்கள். சிலையை அப்புறப்படுத்த வந்த வேலையாட்கள் மீது அவள் மண்ணை வீசி எறிந்தாள். கோவமாக திட்டினாள். அழுது புரண்டாள்.
கடைசியில் அந்த வேலையாட்கள் அவளை தூக்கி ரோட்டின் மறுபக்கம் போட்டார்கள். அங்கு வந்த லாரியில் அந்த சிலை ஏற்றபட்டது. லாரி செல்லும் வரை கதறி கதறி அழுதாள்.
“அய்யோ… ஏன் சாமி என்னைய மனுசப் பிறவிய படச்சீங்க. எனக்கு யாரு இருக்க?” என்று கத்தினாள்.
அடுத்த நாள் காலையில் சிலை இருந்த இடத்தில் அவளை பார்ப்பதற்காக சென்றேன். அவள் அங்கு இல்லை. ரோட்டின் மறுபக்கம் போய் பார்த்தேன். அங்கேயும் அவள் இல்லை.
அதன் பிறது சென்னைக்கு வந்த 1 வருடத்தில் அவளை பற்றி நினைவுகள் அடிக்கடி எனக்குள் தோன்றும். ஒன்றில் அன்பு வைக்கும் மனம் ஏன் அதை பிரிய மட்டும் அனுமதிக்க மாட்டேன் என்கிறது. பிரிவதில் அக்கறைக் காட்டும் சிலருக்கு ஏன் அன்பு புரிவதில்லை. அவள் துணையாக நினைத்துக் கொண்டிருந்த சிலைக்கு கல் மனதா, அவளை துரத்திய மகனுக்கு கல் மனதா என்ற கேள்விகளோடும் அவளை இந்த வருடம் ஊருக்கு செல்லும் வழியில் பார்த்தால் பேச வேண்டும் என்ற ஏக்கத்தோடும் செல்கிறேன்.
முற்றும்.