தத்தளிப்பு

by Nirmal
32 views

சுந்தரேசன் அதிகாலை தேநீர் கோப்பை எடுத்துக் கொண்டு தனது நாட்குறிப்பு புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு முன் தாழ்வாரத்தில் வந்து நின்று கொண்டான்.

தேநீர் சூடாகத்தான் இருந்தது. அதை விட சூடாக இருந்தது அவன் மனது. நாட்குறிப்பு டைரியில் அவனும் நானும் கையொப்பம் இட்ட ஒரு அறிவிப்பு கடிதமும் மாதாந்திரம் அவனுக்கு பணம் அனுப்பின விவரங்கள் இருந்தன.

“இதெல்லாம் ஒரு டாக்குமெண்ட் என்று யார் ஒத்துக் கொள்வார்கள்? எப்படி இது லீகலா செல்லுபடியாகும்?” நினைக்க நினைக்க; ஆற்றமையின் கண்ணீரும் கோபமும் தான் மிஞ்சியது.

சாரங்கனிடம் அவன் எத்தனை நம்பிக்கை வைத்திருந்தான்! அவனை நம்பித் தானே இந்தப் பதினைந்து வருடங்களாக மாதாமாதம் எண்பதினாயிரம் அவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அவனும் கொஞ்சமும் அசிரத்தையில்லாமல் ஒழுங்காக தவணை கட்டிவிட்டு மாதா மாதம் எத்தனை கட்டப்பட்டது மீதம் எத்தனை கட்ட வேண்டும் என்பதற்கு தொய்வில்லாமல் வங்கி ஸ்டேட்மென்ட் அனுப்பவும் தவறினதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன் ,” குறைந்த பட்சமாக ஓரு 5000 ரூபாய் மட்டும் கடன் கணக்கில் வைத்து விட்டு, என் கையில் கொஞ்சம் பணம் இருந்தது,மாப்பிளே! மொத்தக் கணக்கையும் முடிச்சுட்டேன்டா என்று உற்சாகமாகத்தான் பேசினான்.

இப்படி ஒரு நண்பன் கிடைக்க நான் என்ன அதிர்ஷ்டம் செய்தேனோ,என்று பூரித்துப் போய் விட்டேன். இதில் என்ன மனத்தாங்கல் வந்தது; என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. நீங்கள் நினைப்பது போல் அல்ல,அது. புது வீடு அவன் பெயரில்தான் உள்ளது.

துபாயில் இருக்கும் எனக்கு இந்தியாவில் சிவகாசியில் இருக்கும் வங்கியில் கடன் எப்படி கொடுப்பார்கள்? அவன் கொடுத்த ஆலோசனையின் மேல்தான், ஒரு ஏற்பாட்டை பண்ணினோம்.

அவன் பெயரிலேயே வீட்டு மனையை ரெஜிஸ்டர் செய்வது; அவன் பெயரிலேயே கடன் வாங்குவது; மாதா மாதம் நான் அனுப்பும் பணத்தைக் கட்டிக்கொண்டு வந்து; தவணை முற்றுமாக முடிந்த பின் என் பெயருக்கே வீட்டை அவன் சாசனம் செய்து கொடுக்க வேண்டியது. வீட்டில் அனைவரும் இந்த ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு.

என் மனைவி சுசிலாவும்” எதுக்குங்க! இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கணும்” என்றாலும் நான் அவள் பேச்சை கேட்பதாக இல்லை, என்பதை தெரிந்து கொண்டு பேசாமல் இருந்தாள். இப்போது பலத்த அடி எங்களுக்கு.

அதைத் தொடர்ந்து தினமும், சண்டையும், சச்சரவும். எங்களுக்குள் விரிசல் பெரிதாகி நேற்று ஒரு கட்டத்தில் கை ஓங்கி விட்டான். எட்டு வயது புஷ்கலா பயந்து விட்டாள்.

மூன்று மாதமாக அவனிடமிருந்து எந்த ஒரு அலைபேசி அழைப்போ குறுஞ்செய்தியோ ஒன்றும் இல்லை. அவன் மனைவி கீதாவும் பேசுவதில்லை.

நாங்கள் பேசினாலும் விட்டேத்தியாகப் பேசி, அழைப்பை துண்டிப்பதில் குறியாக இருந்தாள். எங்களுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை . உடனடியாக இந்தியா செல்லவும் முடியவில்லை.

ஆறு மாதம் கழித்துதான் என்னால் இந்தியா செல்ல முடிந்தது. பத்ரகாளி அம்மன் கோவில் தெருவிலிருக்கும் அவன் வீட்டிற்குச் சென்றேன்.

” சார்! நீங்கள் அவர் நண்பரா? உங்களுக்குத் தெரியாதா? அவர் இந்த வீட்டை எங்களுக்கு கிரயம் பண்ணிட்டு மதுரையில் செட்டில் ஆகிட்டார்” என்று தகவல் சொல்ல எனக்கு அடிவயிற்றிலிருந்து குமுறி வந்த ஆங்காரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு மதுரை சென்றேன்.

மதுரையில் தெற்கு வாசல் பக்கம் இருக்கும் அவன் அண்ணன் வீட்டிற்குப் போனேன். வாசலில் சாரங்கனின் பிள்ளை மகேசன் விளையாடிக்கொணாடிருந்தான். “பெரியப்பா! சுந்தரேசன் மாமா வந்திருக்கிறாரு, பாருங்க”, என்று உற்சாகமாக குரல் கொடுத்தான்.

சிறிய வீடு. வீடு வறுமையின் விளிம்பில் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. கட்டிலில் சாரங்கன்.. எலும்பும் தோலுமாய். கீதா அவன் அருகில் அமர்ந்து ,ஏதோ ஒரு கஞ்சியை அவனுக்கு ஸ்பூனால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் சாரங்கன் முகத்தில் ஒரு மலர்ச்சி,. ” வாடா! மாப்பிள்ளே! “

” கீதா அந்த பேக்கை எடுத்துட்டு வந்து சுந்தரேசன் கையில் கொடு” என்றான்.

” நீ எப்படியும் ன்னைத் தேடி வருவாய் என்று தெரியும். உனக்காகத்தான் உசிரை கையில் பிடிச்சுட்டு காத்திருக்கேன்.” என்றான். “என்னடா ஆச்சு? அண்ணா! நீங்கதான் சொல்லுங்க. இவனுக்கு என்னதான் ஆச்சு” என்று பதட்டமாய் சுந்தரேசன் கேட்க அதற்குள் கீதா ஒரு ரெக்ஸின் பையை சுந்தரேசனிடம் கொடுத்தாள்.

அண்ணா கேசவன் ,” வாப்பா,! தினம் அவனுக்கு உன் நினைவுதான்.அவனுக்கு இரண்டு கிட்னியும் சுத்தமாய் வேலை செய்யாமல் போய் ஒரு வருஷம் ஆச்சு. கையில் இருந்த காசு எல்லாம் கடலில் கரைத்த உப்பு மாதிரி கரைஞ்சுடுத்து. வீட்டை வித்துதான் வைத்தியம் பண்ணுகிறோம். நானும் பெட்ரோல் பங்கில்தான் வேலை பார்க்கிறேன். அவன் விருப்ப ஓய்வு பெற்றதால் வரும் பென்ஷனை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். உன் வீட்டை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும், அதற்கு நீ நேரில் வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.”

சுந்தரேசனுக்கு இப்போதுதான் புரிந்தது. தன் கையில் இருந்த சேமிப்பு எல்லாம் போட்டு வீட்டுக்கடனை முடித்தது தெளிவாயிற்று‌. தனக்கு உடல் சரியில்லை என்பதை எனக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதில் மிக்க கவனமாய் இருந்திருக்கிறான்.

“சே! இவனைப் போய் சந்தேகித்தேனே! என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். மனம் கனத்து கண்ணீர் பெருகியது. இத்தனை சிரமத்திலும், தனக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் தான், தன் சேமிப்புப் பணத்தில் வீட்டுக் கடனை முடித்துள்ளான். அது எவ்வளவு என்று கூட அவன் தனக்குச் சொல்லவில்லை; என்ன பெருந்தன்மை அவனுக்கு!

சுந்தரேசன் சாரங்கனின் காலடியில் அமர்ந்து அவன் கைகளை தன் கரத்தில் பிடித்துக் கொண்டு ஏதோ சொல்ல முற்பட,சாரங்கன் ” நமக்கு நேரம் அதிகம் இல்லை.

நாளையே ரிஜிஸ்டர் ஆபிஸ் போகணும். வீட்டை உன் பேருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். சிவகாசி ஆபிஸின் ரிஜிஸ்டரார் எங்களுடைய நண்பர்தான்‌, நாம் போனால் மட்டும் போதும்.

உடனே வேலை முடிந்திடும், அண்ணா! நீ டாக்ஸி ஏற்பாடு பண்ணிடு” என்று அவன் பேசப்பேச சுந்தரேசன் அவன் கணிப்பிலேயே சிற்றெறும்பு மாதிரி சிறுத்துப் போக; சாரங்கன் விஸ்வரூபம் எடுத்திருந்தான்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!