அடிமை சங்கிலியின்
ஒவ்வொரு கண்ணியிலிருந்தும்
ஒவ்வொரு மானிடரையும்
விடுவிக்க புறப்பட்டது கவிதை
முண்டாசுக் கவிஞனின்
கண்களிலிருந்து தீப்பொறியாக
கரங்களிலிருந்து கூர்வாளாக-எதிரிகளின்
அதிகாரமறுத்தன போராடி
நாமிருக்கும் நாடு
நமதென்பதறியச் செய்தது
நம்மை நாமே
செம்மையாய் ஆள்வோமென்றது
அணிவகுத்த பாக்கள்-சோர்வு
பிணியகற்றிய தேனீக்கள்
தனியொருவனுக்கு உணவிலையெனில்
ஜெகமழித்திட வந்த ஜோதீ
நிஜத்தில் திசையெட்டும்
எழுந்தது உரிமைப் போர்த்தீ
எட்டியது அரசியல் சுதந்திரம்
எட்டாதது பொருளியல் சுதந்திரம்
எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க
பொல்லாங் கிழைக்கும் தடைகள் உடைக்க
நூறாண்டு கடந்தும் தேவை
பாவாண்ட பாரதி சேவை
–பெரணமல்லூர் சேகரன்
(செப்டம்பர் 11..பாரதி நினைவு நாள்)