படம் பார்த்து கவி: அவள்களின் கதை

by admin 1
43 views

கனவுகளைச் சுமந்து
கரை ஏறியவளின்
கற்பனையாவும் கணவனெனும்
கயவனால் கரைந்து போக
கண்ணைக் கட்டி
கல்யாணக் காட்டில் விடப்பட்டவள்
கட்டவிழும் முன்னே
மண்ணில் விழுந்த
இரு மகவிற்கு
ஒற்றை முகவரியாகிட
இறுதிப் பாதை
தேட விளைந்தவளிற்கு
விடிவெள்ளியாய் வழிகாட்டியது
பரண்மேல் கவிழ்ந்திருந்த
பித்தளைப் பாத்திரம்!
உழைப்பே மூலதனமாய்
அரிசியும் உளுந்தும்
ஆட்டிச் சோர்ந்தவள்
அம்புலி வடிவில்
அச்சுக் கோர்த்து
ஆவி பறக்க பரிமாறினாள்
ஆதவனும் உதயமாகுமுன்னே!
வெப்பத்துக்குள் வெந்தவளின்
உப்புப்படிந்த உழைப்போடு
ஓரமாய் நின்று
எட்டிப் பார்த்தவனுக்கு
தட்டு நிறைய
அடுக்கித்தந்த மனிதம்
விறகில் வெந்தவளை
கொஞ்சம் உயரத்திலே
நிறுத்தி அழகுபார்த்தது!
இது இவளொருவளின் கதையல்ல
எச்சலனமுமின்றி கொதிக்கும் தண்ணீருக்குள் தவமேற்று
வடிவேற்று வெளிவரும்
இந்த இட்லிகளிடம் கேட்டால்
ஓராயிரம் வாழ்வியல்
கதைகளைச் சொல்லலாம்!
ஆனால் அவையாவும்
ஆவிக்குள் வெந்து
வாழ்வை மீட்கப் போராடும்
அவள்களின் கதைகளாகவே இருக்கும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!