சுதந்திர தினத்தன்று கொடியேற்றி ஆரஞ்சு முட்டாய் கொடுத்தார்கள்
அன்று பிறந்தது மிட்டாய் மீது மோகம்
ஏன் சுதந்திர தினம் தினமும் கொண்டாடவில்லை என்று
ஏற்றாத கொடிக்கம்பத்தின் மீது ஏக்கமாக படியும் என் கண்கள்
வெல்லப்பாகினால் வீட்டினில் செய்யும் மிட்டாய்களின் அந்த ஏக்கம் தணிந்தாலும்
கையில் காசு இல்லாமல் ஐம்பது பைசா ஆசை சாக்லேட் வாங்க முடியாமல்
கண்களில் ஆசை தேக்கி பெட்டிக்கடையை தாண்டிச்சென்ற நாட்கள் பல
தோழியரின் பிறந்தநாள் அன்று கிடைக்கும் சாக்லேட்டுக்காக
அவள் பின்னால் அலைந்த ஞாபகங்களும் வருகிறது இன்று
காலம் கடக்க சாக்லேட் ஆசை குறையவில்லை
மனமுடித்த மணாவாளன் வெளிநாட்டு சாக்லேட்களை வாங்கி குவித்து ஏக்கங்களை குறைத்தான்
சிறு வயது ஏக்கத்தினாலோ என்னவோ இளம் வயதில் அதிகம் உனண்டதால்
முதுமையில் உடல் முழுவதும் இனிப்பு என்று மருத்துவர் கூறி
சாக்லேட் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூறினார்
ஆனால் முடியுமோ?
இன்றும் சாக்லேட்டை பார்த்தால் கண்கள் மின்னுகிறது
- அருள்மொழி மணவாளன்