நின் கரம் கோர்த்து
விழி அலர மலர் நுதழில்
மங்கல குங்குமமிட்ட காட்சி
இதயக் கூட்டில் இன்பத்தேனாய்
இன்றளவிலும் இனிக்கின்றதே!
புலரும் பொழுதெல்லாம்
இருவிரலால் அள்ளி அள்ளி இட்டு
நிரந்தரமாய் சிவந்த
விரல்களின் வண்ணம்
இன்னும் என் கைகளுக்குள் கதைசொல்கின்றதே!
நித்தம் வாசல் சேர்கையில்
விரிந்த முகத்தில்
விசாலமாயிட்ட மங்கலமும்
மொட்டிதழில் மலர்ந்திடும்
புன்னகையும் மனதிற்குள் பனிக்குவியலை நிறைத்தது
இன்றும் குளிரிதம் தருகின்றதே!
உன் கரையற்ற அன்பால்
எண்பதகவை இன்பமாய் கடந்தவன் கரைசேரும் காலம்
வந்ததை உணர்கிறேன்!
நான் சாம்பலாய் கரைந்தாலும்
உன் நெற்றி சூடிய குங்குமம்
என்றும் ஒளிர்ந்திட வேண்டுமென்பதை
என் கடைசி ஆசையாய்
கேட்க விளைகிறேன்!
ஊரோ உறவோ அறவே தவிர்த்து
அகன்ற நெற்றியில் நின் பொட்டு நிரந்தரமாய் நிலைத்திட வேண்டும்!
உன் திருமுக வடிவம் மாறாதிருக்க கடைசி வரம் வேண்டி வந்தேன்- ஆனால் நீ முந்திக் கொண்டாயே!
சுமங்கலியாய் சென்றாள் எனும் பெயரைச் சுமந்து பெரிய நெற்றியில் சிவப்பு உயிராய் எனையும் சுமந்து,
உன் இறுதி ஆசை நிறைவேற மங்கல முகத்தோடு மடி சாய்ந்தாயே!
புனிதா பார்த்திபன்