அந்த நாள் நியாபகம்
நெஞ்சிலே வந்ததே வந்ததே
வானொலி …. வானொலி… வானொலி ….
இந்த நாள் அன்று போல்
என்னுடன் நீ இல்லையே… இல்லையே …
அது ஏன்… ஏன்… வானொலி…!
காற்றின் வழியில்
காதல் வரிகளை
காதில் சேர்த்து
இன்பத்தை அள்ளி தந்த
உனை நினைத்து பாடுகிறேன் நான்.!
உன்னில் நான் கேட்ட வரிகள் இன்னும் என்னுள் ஒலித்து கொண்டிருக்கின்றன,
எவரும் மில்லாத நேரங்களில்
மனதிற்கு துணையாய்
வரிகளால் ஆறுதல் தந்து அருகில்
வாழ்ந்தவன் நீயே,!
என் விரல்களுக்காக
ஏங்கி தவிக்கின்றன
உன் மேல் உள்ள கைப்பிடியும்
உனை உயிரூட்டும் பொத்தானும்
அலை வரிசையை அளந்து விடவே
உன் தலை மேல் இரு
கொம்பை போன்று
சுமந்து நிற்கின்றாயா
கருமைநிற வலையால்
அடை பட்டு போனாலும்
உன் குரல் என்
செவிகளை வந்து
தழுவி விடுகின்றன;
போர் வீரர்களை போல்
அறுபத்து நான்கு அரை
கோடுகளை கோலமிட்டும்;
படை தளபதிகளின் அம்பை போல்
பதினேழு கோடுகள்
நீண்டும் நிற்கின்றன;
அழகனுக்கு கண்கள் படக்கூடாது
என்று நெற்றியின் ஓரம்
சிகப்பு நிற பொட்டொன்று
வைத்து விட்டனரோ;
கண்ணை கவரா அரை
வெண்ணிற நிறத்தில்
உன் மேனி இருந்தாலும்;
உள்ளம் கவர்ந்த வரிகளையும்;
உலகை சுற்றி வந்த
உணர்வுகளையும் தந்து
மனதை கவர்ந்த கள்வன் நீ தானே…!!! ✍️ ஆர். இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: உயிர் நண்பன்
previous post