என் இளமைப்பருவத்தில் ஓர் நாள் அப்பா வெண்ணிற கோமாதா ஒன்றை வாங்கி வந்தார்..
சில மாதங்களில் இளவெருதை ஈன்றாள் தாயானவள்..
அன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் ரெட்டை பிறவிகள் என்று சொல்லுமளவிற்கு இணை பிரியாது விளையாடி சுற்றி திரிந்தோம்
நானும் கருப்பனாகிய காளையனும்..
துயில் எழுந்து முதலில் விழிப்பதும் அவன் முன்பு தான்..
துயில் கொள்ள போகும் முன் விழிகளில் நிறைப்பதும் அவனை தான்..
பள்ளி விட்டு வந்ததும் சீருடை கூட களையாமல் காளையனவனிடம் தான் அத்தனை கதைகளை பேசுவேன்..
சந்தோஷமோ துக்கமோ அத்தனையும் பகிர்ந்தேன்..
காலத்தின் சூழ்ச்சியை யார் வெல்ல முடியும்?
போதாத நேரம் சூறாவளி சுழற்றி அடித்ததில் தொழுவத்தின் மேற்கூரை கருப்பன் காளையனவனின் மேல் தான் விழ வேண்டுமா?
கருப்பனின் முன் கால் முறிந்து நடக்க முடியாமல் செய்த கயமை காலத்தை திட்டாத நாளில்லை நான்..
அவனை அழைத்துக் கொண்டு செல்லும் போது கண்ணீருடன் கடைசியாக அவன் என்னை பார்த்த பார்வை இன்னும் கண்ணுக்குள் நிழலாடுகிறது..
எங்கே அழைத்துச் செல்வார்கள் என்று ஓரளவு தெரியுமாதலால் அப்பாவிடம் வேண்டாமென்று அழுது மன்றாடினேன்..
அவனால் இனி பயனில்லை என்று சொல்லி விட்டார்..
‘இப்படி ஒரு சூழலில் நானும் காலை இழந்தால் இப்படி என்னை கொடுப்பீர்களா?’ என்று கத்தினேன்..
கன்னம் தாங்கிய ஒற்றை அடியை வாங்கி கொண்டு அவன் செல்லும் வழியைப் பார்த்து அழுதேன்..
காலம் செய்த விதியின் சதி..
ஆரம்பம் எப்படி எழுதப்பட்டதோ முடிவும் முன்பே எழுதப்பட்டது தானே..
வருடம் உருண்டோடினாலும் கருப்பனின் நினைவுகள் நெஞ்சில் நீங்கா நேயத்துடன் நேசமுற்றிருக்கும்…!
✍️அனுஷாடேவிட்