உருண்டு விழுந்த விழிகளோடு
உதிரம் வழியும் உதட்டோடு
உடைந்த பற்கள் கோரம் காட்ட
ஊசி நகத்தில் ரத்தம் தெறிக்க
ஊளையிட்டு வருமாம் காட்டேரி
உறக்கம் கொள்வாய்
உடனே என்றேன்!
ஆதவனும் அசைந்தேற
அண்டமும் விழித்தோட
அச்சமயமெல்லாம் வெளிப்படாது
அரவமின்றி அண்டிக்கிடந்து
அச்சப்பட்டு ஒளிந்தோடி
அந்தி மெல்ல சாய்ந்து
அகலிடமனைத்தும்
அசந்துறங்கையிலே
அநாவசிய சத்தமெழுப்பி
அசடாய் வெளிப்படும்
அர்த்தமற்ற கோழை கண்டு
அச்சப்பட என்னவிருக்கிறது
அதிராமல் பதிலளிக்கிறாள்
அகவை எட்டும் எட்டா மகள்!
புனிதா பார்த்திபன்