பல் உயிரை பலிகொடுத்து
நல்லதொரு சுதந்திரத்தை
நாம் பெற்றோம்
நாடு வளமுற – இன்று
ஊமை கண்ட கனவுகள்
ஊர்வலம் போவதுபோல்
ஆமையின் வீட்டுக்குள்
அடியெடுத்து வைக்கிறோம்.
வள்ளுவரின் மொழி கண்டோம்
வள்ளளாரின் வழி கண்டோம்
காந்தியின் நெறி கண்டோம்
சாந்தி மட்டும் என்று காண்போம்.
குடியாட்சி காணுமுன்
முடியாட்சி கண்டோம்
” குடி ” யாட்சி ஆள்வதால்
குடி முழ்கி போனோம்.
வாய்மையும் தாய்மைஒன்றென
சொன்ன நாட்டிலே
பொய்மையும் கயமையும்
நன்றென வாழுது நாட்டிலே.
சூரியனும் சந்திரனும்
சும்மா இருக்க
விளக்கு மட்டும்
விளம்பரம் தேடுவதுபோல்
சவ மாலைக்கும்
சபரி மலைக்கும்
சம்மந்தம் செய்வோரை
உயர்த்தி தலையில் வைத்தோம்.
உண்டு உறங்கி
ஊரைக் கெடுப்போரே
சுண்டு விரல் நீண்டியதும்
சுதந்திரம் வந்து விடவில்லை.
அம்மா வென அழுமுன்னே
அன்னை தந்த உணவல்ல சுதந்திரம்.
அய்யோ அய்யோவென அழுதுபுலம்பி
ஆரூயிர் விட்டு வாங்கிய சுதந்திரம்.
பாரதப் போரொன்று
பழங்கதை கண்டதுபோல்
சுதந்திரப் போரை
சுயநலமின்றி கண்டோம்- இன்று
சூதும் வாதும்
சுதந்திரமானது.
சுயநல மொன்றே
பொதுநல மானது.
வேற்றுமையில் ஒற்றுமை
கண்ட நாம்- இன்று
ஒற்றுமையில் வேற்றுமை
கண்டு வேதனையில் நிற்கிறோம்.
பற்றிய பணத்தை
பாதுகாக்க
ஒட்டுண்ணிகள் மட்டும்
ஒற்றுமையாய் இருக்கின்றன.
கரையான் புற்றுக்குள்
கருநாகம் குடிவந்ததுபோல்
முறையான தத்துவத்தில் முதலைகள் நுழைந்து விட்டது.
இனியொரு சுதந்திரதை
இதயத்தில் வைப்போம்
தனியொரு மனிதனையும்
தரனியில் காப்போம்.
நன்றியுடன்
செ.ம.சுபாஷினி
ஈரோடு.
🙏🙏🙏