அன்பமுதூட்டவே அன்னையவள் அம்புலியை அழைத்த
அழகான தருணங்கள் அலைபேசிக்குள் அடங்கிப்போனதே
மழலையிலிருந்தே இணை(க்)கின்றனர் இணையத்துடன் அனைத்திற்குமே
விரல்நுனிக்குள்ளே உலகினையறிய உன்னத கருவி
உள்ளங்களையும் உணர்வுகளையும் உருக்குலைக்கும் உயிர்க்கொல்லி
கையடக்கப்பொறியதனுள் மெய்யடக்கி மதிமயங்கும் மானக்கேடு
ஓடியாடி ஆடிப்பாடி இவையெதுவும் இன்றில்லை
குடும்பமொன்றேயெனினும் தனித்தனி தீவுகளாய் தானிருக்கின்றோம்
தன்னிலை தான்மறந்து உண்ணலும் உறங்கலுமின்றி
உரையாடலில் உறவாடலின்றி மதுவதிலே மயங்குதலாய்
இணையத்துடன் இணைந்திருந்து பிணையக்கைதியாய் பணயமாகிறோம்
விளம்பரமும் வியாபாரமும் வாழ்வதுவாய் விலைபோகின்றோம்
ஆடம்பரத்திலே ஆர்வமாகியே அவசியத்துக்கதிகமாய் ஆசைகொள்கிறோம்
இணையவிடா இணையத்துள்ளே இணைந்திடவே எண்ணிடாதே
அளவறிந்து ஆக்கத்திற்காய் அறிவுடனே அனுபவிப்போம்
மனிதம் மாண்பிழக்காதே உயிருறவுகளில் ஒன்றிணைவோம்
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
