தனிமைக்காக கானகம் தேடி ஓட,
இனிமையான நீர் சலசலத்து ஓட,
அமைதியான சூழல் மனதை கவர,
இமை மூடி ஆழ்ந்து சுவாசித்தேன்.
நீரின் வாசமா? இல்லை மர
வேரின் வாசமா? இல்லை காய்ந்த
இலைகளின் வாசமா? இல்லை இல்லை
காட்டின் வாசமிது! என் நாசி
தொட்டு அடி மனதின் ஆழம் சென்று,
கூடாரம் போட்டு இருந்தவளின்
நினைவை வெளியே தள்ளியது.
என்னவளின் எண்ணம் வந்ததும்,
ஏன் அவள் எண்ணம் வந்தது
என்றே தோன்றியது.
எங்கு நோக்கினும் அவள் முகம் தோன்றுதே,
இங்கும் வந்து நிம்மதியை குலைக்கும்
இவள், யாரிவளோ? என்று கலங்காமல்,
யாரோ இவள் என கடக்க வேண்டும்
என்று உறுதி பூண்டு,
சலசலக்கும் ஓடையோரம் நடந்து,
சமதளம் கண்டு,
கூடாரம் இட்டு
அமைதியாய் அமர்ந்தேன்;
உள்ளக் கூடாரத்திலிருந்து
அவள் நினைவுகளை விரட்ட..
– அருள்மொழி மணவாளன்
