படித்ததில் பிடித்தது: ஓட்டை பானை

by Nirmal
112 views

நம்மிடம் இருக்கும் சிறிய  குறைகளை எப்போதும் நினைத்து வருத்தப்படுவதை விடுத்து கடினமாக உழைத்தால், குறையும் நிறையாகி வெற்றி பெறலாம். இதை உணர்த்தக்கூடிய ஒரு அழகிய கதையைப் பார்ப்போம்.

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்கு செல்வார். அதற்காக இரண்டு பானைகள் வைத்திருந்தார். அந்த இரண்டு பானையையும் நீளமான குச்சியில் இரண்டு பக்கமும் கயிறுக்கட்டி தொங்கவிட்டு குச்சியை தோளில் சுமந்தப்படி ஆற்றுக்கு செல்வது அவருடைய வழக்கம்.

அவர் வைத்திருந்த இரு பானையில் ஒன்று ஓட்டைப் பானை. அதனால், அந்தப் பானை முழுவதும் தண்ணீர் நிரப்பினாலும் வீட்டிற்கு வந்துப் பார்த்தால், பாதி பானை தான் தண்ணீர் இருக்கும். இதை சொல்லியே நிறைந்த பானை ஓட்டைப் பானையை கேலி செய்து சிரிக்கும்.

இப்படியே ஒரு வருடம் ஓடி விடுகிறது. ஒருநாள் ஓட்டைப் பானை வருத்தம் தாங்க முடியாமல் விவசாயி இடம் கேட்கிறது, ‘ஐயா! என்னுடைய குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் முழுமையாக தண்ணீரை என்னுள் நிரப்பினாலும், வீடு வந்து சேரும் பொழுது அதில் பாதியைதான் என்னால் கொடுக்க முடிகிறது’ என்று வேதனையுடன் கூறியது.

அதற்கு விவசாயி கூறுகிறார், ‘எனக்கு நீ தண்ணீரை சிந்துவது ஏற்கனவே தெரியும். அதனால்தான் நீ வரும் பாதையில் விதைகளை விதைத்துவிட்டு வந்தேன். நீ சிந்தும் நீரினால் அந்த செடிகள் செழிப்பாக வளர்ந்து இப்போது எனக்கு நிறைய மலர்கள் தரும் செடிகளாக வளர்ந்து நிற்கிறது.

அதை விற்று நிறைய காசு சம்பாதிக்கிறேன். அதனால், நீ வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில், உன்னுடைய குறையும் எனக்கு நிறையே!’ என்று கூறினார். இதைக் கேட்ட பிறகு அந்த பானையும் தன்னை தாழ்வாக நினைப்பதை நிறுத்திவிட்டு மகிழ்ச்சியாக தன்னுடைய வேலையை செய்யத்தொடங்கியது.

இந்த கதையில் வரும் ஓட்டைப் பானையைப்போல அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்று நம்முடைய குறையை நினைத்து வருத்தப்படுவதை விடுத்து, நம்முடைய முயற்சியை தொடர்ந்து செய்து வந்தால், குறையும் நிறையாகும். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம். முயற்சித்துப் பாருங்கள்.

#படித்ததில் பிடித்தது

You may also like

Leave a Comment

error: Content is protected !!