மூனு வருஷமும் 109 நாளும்!

by admin 1
52 views

அவள் 35 வயதைக் கடந்த பெண். அதிகாலையில் குடும்பத்திற்கு மதியமும் சேர்த்துச் சமைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டி கவனித்து, கணவனை வழியனுப்பி, அரக்கபரக்க அரசாங்க வேலைக்கு ஓடி, மாலை வீட்டுக்கு வந்து பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்து, களைத்துப் படுத்துத் தூங்கும் பெரிதான சுவாரஸ்யங்கள் அற்ற ஒரே விதமான வாழ்வை தினமும் வாழ்பவள்.

அவளுக்கு பணிமாறுதல் கிடைக்கிறது. அவள் இடத்தில் இருந்து இரண்டு மணி நேர பிரயாண தொலைவில் இருக்கும் இடத்திற்கு அதுவும் உத்தியோக உயர்வுடன். வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறாள். ஒரு நாளுக்கு இருபத்திநான்கு மணி நேரமே அவளுக்குப் போதவில்லை, இதில் கூடுதலாக பயண நேரம் வேறு நேரத்தை அபகரிக்கும் என்கிற கவலை வேறு.

தினமும் நெரிசல் மிகுந்த ரயிலில் போய்வரவேண்டும். மாலையில் வீட்டுக்குத் திரும்பும் போதெல்லாம் சக்கையாகி விடுவாள், களைப்பு அவளை வாட்டி எடுத்துவிடும். ஒரு நாள் அப்படியான நெரிசல் மிகு பயணத்தில் அவளிலும் வயது மூத்த ஒரு வெள்ளைச் சட்டைக்காரர் அருகில் நெருக்கிப் பிடித்து அமர்ந்து கொள்கிறாள், அயர்ச்சி காரணமாக அவருடைய நெஞ்சில் சாய்ந்தவள் தன்னை மறந்து தூங்கியும் போகிறாள். விழிப்பு வந்ததும் அவளுக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. அச்சோ இப்படி ஒரு வேற்று ஆடவன் நெஞ்சில் சாய்ந்து கோட்டாணி வடிய தூங்கி விட்டோமே. அவர் என்ன நினைத்திருப்பார் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு அவரிடம் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டாள்.

மறுநாளும் அவர் அருகில் சென்று உட்காருகிறாள், அவர் நெஞ்சில் சாய்ந்து தூங்கி விடுகிறாள். இருவருக்குள்ளும் வேறெந்த சம்பாசனைகளும் கிடையாது. அவரும் இவளை ஒன்றும் சொல்வதில்லை. தினம் தினம் இது தொடர்கதையாகி ரயிலில் பயணிப்பவர்கள் அனைவர்க்கும் இவள் இவரின் நெஞ்சில் இப்படித் தூங்கிக் கொண்டு வருவது ஒரு அன்றாட செயலாக பதிந்துவிட்டது. அவர் ஒரு நாள் வரவில்லை என்றால் இவளிடம் விசாக்கிறார்கள், இவள் ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தால் அவரிடம் விசாரிக்கிறார்கள்.

இந்த மாலை ரயில் பயணத்திற்காகவே அவள் தினமும் தன்னை அழகுபடுத்தினாள், கூடுதல் பொலிவாகி விட்டது போல அவளுக்குத் தோன்றியது. வீட்டுக்கு அருகிலேயே பணிமாறுதலுக்கு வாய்ப்பு வந்தும் சில காரணங்கள் சொல்லி மறுத்தாள். ரயில் பயணமும் அவர் நெஞ்சில் சாய்ந்து உலகம் மறந்து தூங்குவதும் அவளுக்கு முக்கியம். இக்கொடும் வாழ்வின் குறைந்த நேர இளைப்பாறல் அது அவளுக்கு

பிறகொரு நாளில் இருந்து அவரைக் காணவில்லை, எங்கே சென்றார், அவரை எப்படித் தேடுவது? அவர் பெயர் என்ன? எதுவும் தெரியாது. அவள் தன் பொலிவை இழக்கத் தொடங்கினாள். ரயில் பயணம் அத்தனை சுவாரஸ்யம் இல்லாது போனது. வீட்டுக்குப் பக்கத்திலேயே பணிமாற்றம் வாங்கி முன்போல ஒரே விதமான வாழ்வை தினமும் வாழ ஆரம்பித்தாள்.

ஒருநாள் அலுவலக விசயமாக காவல்நிலையம் சென்றபோது, அங்கு ஒரு எண்பது வயது முதியவர் ஒரு காவலரிடம் தனது மகனை ஏன் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லை என்று முறையிட்டுக் கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருக்கும் கோப்புகளுக்குள் இருந்த புகைப்படம் இவளை அழைக்கவும், வேண்டுமென்ற அவரை இடிப்பது போல இடித்து கோப்புகளை கீழே தட்டிவிட்டு புகைப்படங்களை எடுக்க உதவி செய்வது போல அவற்றைப் பார்க்கிறாள். முழு புகைப்படத்தில் அவரது மார்பை மட்டும் பார்க்கிறாள். உலகிலேயே விலைமதிப்புள்ள ஒன்றைத் தொடுவது போல அந்த மார்பை தொடுகிறாள்…

காவலர் கத்திக் கொண்டிருக்கிறார், “என்ன சார் நீங்க… உங்க பையன் காணாம போயி நாலு வருஷம் ஆகிடுச்சே சார்…”

அவள் சொன்னாள்… “இல்ல..மூனு வருஷமும் 109 நாளும்”

எல்லோருக்கும் இது போல ஒரு தேடல் இருக்கிறது ..விரசமில்லாத மனம் தேடும் தேடல்…!!

You may also like

Leave a Comment

error: Content is protected !!