எழுதியவர்: குட்டிபாலா
பேரணியை கண்காணித்துக்கொண்டு நின்றிருந்த காவல் அதிகாரி ராஜராஜனின் அருகேயிருந்த எட்டு வயது சிறுவன் கனகன் .
திடீரென்று அவர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஓடவும் “டேய்” என்று துரத்தி அவனை தொடர்ந்து அந்த பங்களாவுக்குள் சென்றார்.
சோபாவில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் “எங்கே அந்தப்பயல்?” என்றார்.
“இங்கே பையன்கள் யாருமில்லையே” என்றவளை நம்பாமல் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு திரும்ப நினைத்தபோது “ஐயா எங்களை காப்பாற்றுங்கள்” என்ற தீனமான குரலைத் தொடர்ந்து கனகனும் அவன் சகோதரியும் தாயாரும் வெளியே வந்தனர்.
விசாரணையில் கனகன் பிறவி ஊமை என்பதும் அவளை படிக்க வைத்து ஆதரவளிப்பதாக ஆசைகாட்டி மூவரையும் கூட்டிவந்து ஐந்து ஆண்டுகளாக கொத்தடிமையாக வைத்திருப்பதையும் வெளியே நடைபெறும் “கொத்தடிமை ஒழிப்பு பேரணி”க்கு தலைமை தாங்குவதே அந்த வீட்டு உரிமையாளர் எம்எல்ஏ சட்டநாதன் என்பதையும் தெரிந்து கொண்டார். கனகனின் சமயோசிதத்தை பாராட்டிய ராஜராஜன் மூவரையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.
படிப்பறிவில்லாத ஊமைதானே என்று கனகனுக்கு சுதந்திரம் கொடுத்ததை நினைத்து சிறையில் வருந்துகின்றனர் சட்டநாதனும் அவர் மனைவியும்.
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.