© Dr Saravana Kumar
“ரொம்ப ஒல்லியா இருப்பான் சார், தினமும் எக்சர்சைஸ் செய்வான். ஆனால் அவனுக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னே தெரில சார்”ன்னு புலம்புறதை இப்போலாம் அதிகமா கேக்க முடியுது. அதுக்கு காரணம். ஒல்லியான, பிஸிக்கல் பிட்டான ஆட்களையும் காவு வாங்கும் “ஸ்ட்ரெஸ்” குறித்து நமக்கு அதிகமாக தெரிவதில்லை.
முதல்ல ஸ்ட்ரெஸ்ன்னா என்ன அது எப்படி உருவாகுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
“ஒரு பிரச்சனை நம்ம உடம்பு, எண்ணம், உணர்வு, செயல்ன்னு எல்லாத்தையும் பாதித்து, நம் நினைவுத் திறனை அழித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, எலும்பின் அடர்த்தி குறைதல், இரத்தக் கொதிப்பு, இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், இதய பிரச்சனைகள் என அத்தனையும் வரவழைக்கும் என்றால் அதை நாம எவ்ளோ சீரியசா பாரக்கணும்?
ஆனால், நாம் அதை கண்டுக்கறதே இல்லை!?
இவ்ளோ பிரச்சனைகளை கொண்டு வருவது நம்ம உடலில் உள்ள கார்டிசால் என்னும் ஹார்மோன்.
அவுத்து விட்டா ஊரையே துவம்சம் செய்யக்கூடிய அரக்கன் இவன். ஆனால் ஊர்க் காப்பானும் இவன் தான்.
நமக்கு ஆபத்து நேரும் காலங்களில் பலவாறு நம்ம உடம்பை காப்பாற்றுவதும் இதே ஹார்மோன் தான். அதனால தவிர்க்கவும் முடியாது. கார்ட்டிசோல் ஹார்மோனை அதிகப்படுத்தி நம்ம உடம்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எது தெரியுமா?
நம்ம என்னிக்கும் நல்லதுன்னு நினைச்சிட்டிருக்குற ‘உழைப்பு’. அதாவது அளவுக்கு அதிகமான உழைப்பு. அளவை மிஞ்சினால் அதை தான ஸ்ட்ரெஸ் என்கிறோம். அதாவது கூடுதல் பளு.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகளுக்கும் கூட அவர்களின் வேலைப் பளு கரணமா ஏற்படும் ஸ்ட்ரெஸ், அவர்களுக்கு பல்வேறு உடல் தளர்ச்சியை தருவதாக ஆராய்ச்சியாளார்கள் சொல்றாங்க.
1996’ல் பெல்ஜியமை சேர்ந்த Geys என்னும் சைக்கிள் வீரர் தன்னோட பயிற்சியின் போது அடிக்கடி மயக்கமடைய, போட்டிக்கு 2 வாரம் இருந்த நிலையில் அவரோட பயிற்றுனர் அவரை விடுப்பில் போக சொல்கிறார்.
தன்னோட கனவு தகர்ந்ததுன்னு நினைச்சுட்டு இருந்த Geys, குறிப்பிட்ட நாளில் அவரே எதிர்பார்க்காமல் அந்த போட்டியில் வென்றதை ஆச்சரியமாக தன்னுடைய ‘Fatique and Fitness’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
தொடர்ச்சியான பயிற்சியும், உடல் உழைப்புமே வெற்றி தரும் என்பது மாறி, போதுமான ஓய்வுடன் அளவான பயிற்சியே உடலுக்கு ஆரோக்கியம் அன்பதை உணர்ந்த Geys தற்போது பெல்ஜியமில் ஸ்போர்ட்ஸ் பிஸியோதெரபிஸ்ட்டாக அவருடைய ‘ஓய்வுடன் அளவான பயிற்சியே உடலுக்கு ஆரோக்கியம்’ என்ற கருத்தை வலுவாக பரப்பி வருகிறார்.
ஸ்ட்ரெஸ் குறித்து பேசும் போது சில அறிகுறிகளை கவனிப்பது ரொம்ப முக்கியம்ன்னு Geys சொல்றார்.
அதில் முக்கியமானது “மனது ஓய்வுக்கு விரும்புவது”. மனம் விரும்பும் போது அளிக்கப்படும் ஓய்வு, உடலை சரி செய்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும்.
ஒரு நாளின் முடிவில் வரும் அசதியானது எல்லோருக்கும் இருக்கிறது தான். அதுக்கெல்லாம் பயப்பட தேவையில்லை.
ஆனால், காலையில தூங்கி எழும் போது புத்துணர்ச்சி இருக்கிறதா என்பது தான் நாம், நம்மை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. பதில், இல்லை என்றால், நாம ஸ்ட்ரெஸில் இருக்கோம்ன்னு புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஆராய்ச்சியில் கிட்டதட்ட 70 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. இது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விசயம்.
Geys’ வார்த்தையில் சொன்னால், நம்ம எல்லோரும் உடம்பில் ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளுக்கு தகுந்தா மாதிரி மாத்திரை எடுத்துட்டு நம்ம அன்றாட வேலைகளை பார்க்கிறோம்.
ஆனால், வேலைப்பளுவினால உடல் அசதின்னு வரும் போது, ரெஸ்ட் எடுக்க தோன்றாமல் எதுவோ ஒன்றை செய்து அதை கண்டுக்காம தாண்டி போறோம். உடலுக்கு நியாயமா தேவையான ஓய்வை கொடுக்கலைன்னா அது அதிகமா ஓடின கார் டயரை போல ஒரு நாள் பஞ்சர் ஆகி நம்மை நடு ரோட்டில் நிறுத்தாமல் விடாது.
அசதியை உடல் அளவில், மன அளவில், செயல் அளவில், உடலின் வளர்சிதை மாற்றத்தில்ன்னு 4 நிலைகளில் கவனிக்க வேண்டும்.
அவர் நாம என்ன வகையான அசதியில் இருக்கோம்ன்னு வகைப்படுத்திக்க 4 வகையான அசதியை குறிப்பிடுகிறார்.
உடலில் அசதி உள்ளவர்கள், தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் தவித்து, தூங்க கூட சிரமப்படுகிறாகள்.
மனதில் அசதி உள்ளவர்கள், ஞாபக மறதி, பதட்டம், எதிலும் ஆர்வமின்மையால் அவதிப்படுகிறார்கள்.
உடலின் செயலில் அசதியுள்ளவர்கள், ஹார்மோன் பிரச்சனைகளாலும் கவனகுறைவாலும் சிரமப்படுகிறார்கள்.
உடலின் வளர்சிதை மாற்றத்தில் அசதி கொண்டவர்கள் செரிமானமின்மை, பசியின்மை, தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்,
இந்த அசதிகள் ஒரு மனிதனுக்கு தனிதனியாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்றினைந்தோ தொல்லை கொடுக்கலாம். பல்வேறு நோய்களுக்கு அச்சாரமே இந்த அசதி தான். இந்த அசதியை தருவது அதிக உழைப்பு, ஸ்ட்ரெஸ்.
தினமும் உடற்பயிற்சி செய்வதை கூட சிலர் வேலை பளுவுக்கிடையில் மற்றுமொரு ஸ்ட்ரெஸாக செய்கிறார்கள். ரிலாக்சாக வாக்கிங் போக வந்த இடத்தில் கூட மொபைலில் டென்சனுடன் பிஸினஸ் பேசிக் கொண்டு செல்பவர்களை நாம் பார்க்கிறோமே. இன்னும் சிலர் மெடிடேஷன், யோகாவை கூட ஸ்ட்ரெஸாக செய்கிறார்கள்.
எந்த ஒரு செயலிலும் பணியிலும் மனம் ஒன்றி, விருப்பத்துடன் செய்வது தான் மன அமைதிக்கான தியானமாகும். பாடல் கேட்பதோ, சினிமா பார்ப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ அல்லது கோயிலுக்கு செல்வதோ எது வேண்டுமானாலும் உங்களுக்கு நிம்மதியை அளிக்க முடியும் என்றால் அது தான் உங்கள் ஸ்ட்ரெஸை ஒழிக்கும் தியானம்.
உங்களுக்கு விருப்பமான செயல்களை மனம் விரும்பி செய்யுங்கள். மன அழுத்தத்தை தவிருங்கள். ஆரோக்கியமாக வாழ்வதற்கு அது தான் முதல் படி.