எழுத்தாளர்: உஷாராணி
அடர்ந்து பெய்கிற பனியில் நடந்து தான் ஆக வேண்டும். அதுவும் இரண்டு மைல். அதிகாலை
நடுக்குகிற குளிரில் போய் முள் வெட்ட வேண்டும். அதற்குப்பிறகு வயலில் நடவுக்குப் போக
வேண்டும். முத்தம்மாவிடம் பனியும் குளிரும் தாங்குகிற உடை ஏது? உடலைச் சுற்றிக் கிழிந்த
போர்வை. முந்தானையை தலையைச் சுற்றி இழுத்துப் பல்லால் கடித்த படி நடந்தாள்.
ஆனாலும் அவளுக்குப் பனி பிடிக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனி நனைத்த புல்
நுனியிலெல்லாம் சூரியன் தெரிய ஆரம்பித்து விடுவான். ஒரு வண்டின் முதுகு பனித்துளி
சுமந்து ஓடிக்கொண்டிருந்தது. நின்று பார்த்து பனிச்சிரிப்பாய் சிரித்தவளை மறைந்து நின்று
புகைப்படம் எடுத்தான் லோகேஷ். அது அந்த ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படமாய்ப் பரிசைத்
தட்டிச்சென்றது. அதெல்லம் முத்தம்மாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை. அவள் இன்னமும்
பனியில் முள் வெட்டியபடிதான் இருக்கிறாள்.
முற்றும்.
