எழுத்தாளர்: பிரகதிநவநீதன்
அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்வதால் ஆறாம் வகுப்பு படிக்கும் தீபக்கை பார்த்துக் கொள்வதற்கு ராணி என்ற நடுத்தர வயது பெண் வீட்டில் இருந்தாள். அவள் தீபக்கை தன் மகன் போல ஆசையுடன் பார்த்துக் கொள்வதுடன் அவனுக்கு தனக்கு தெரிந்ததெல்லாம் சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல பணிப்பெண்ணாக இருந்ததால் தீபக்கின் பெற்றோர் கவலையின்றி வேலைக்கு சென்றனர். அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தீபக்கிற்கு ராணி சாப்பிட கொடுக்கும் போது அவன் சிரிப்பதை பார்த்து “தம்பி எதற்காக சிரிக்கிறாய்?” என்று கேட்டாள். “எங்க பள்ளியில் இருக்கும் ப்ளேடு வாத்தியார் இன்று தப்பு தப்பாக இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தார்” என்று சொன்னவுடன் “ப்ளேடு வாத்தியாரா? அது யார்? என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்டாள். “ஆமாம் நாங்கள் எங்கள் இங்கிலீஷ் வாத்தியாருக்கு ப்ளேடு வாத்தியார் என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறோம். அவர் சொல்லிக் கொடுப்பது எல்லாமே அறுவையாக இருக்கும்” என்று அவன் சொன்னவுடன் ராணி அவனை பார்த்து “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது உன்னை விட படித்தவர் உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு நல்ல ஆசிரியரை பள்ளியில் அமர்ந்திருக்கும் போது நீ இப்படி எல்லாம் அவருக்கு பட்ட பெயர் வைக்கலாமா?” என்று கேட்டவுடன் “வைத்தால் என்னமா?” என்று தீபக் பதில் கேள்வி கேட்டான். “அதே வாத்தியார் உனக்கு மக்கு பையன் என்று பட்டப்பெயர் வைத்தால் உனக்கு எப்படி இருக்கும்?” என்று சொன்னவுடன் தீபக்கிற்கு உண்மை புரிந்து “ஐயோ சாரி இனிமேல் நான் அவரை பட்டப்பெயர் எல்லாம் சொல்லி கூப்பிட மாட்டேன்” என்று சொன்னவுடன் ராணி “இதுதான் சரி” என்று அறிவுரை சொன்னாள்.
நன்றி