படித்ததில் பிடித்தது: அன்பு

by Nirmal
25 views

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.

அதில் ஒரு தம்பதியினரில்…

மனைவி ”அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க ” என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.

பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்…

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.

இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!