எழுத்தாளர்: நௌஷாத் கான் லி
டே…இர்பான் நமக்குள்ள இனிமே எதுவுமே செட்டாகாது ..விட்டிடலாம் எல்லாத்தையும் இன்னையோட விட்டிடலாம் .
PAST IS PAST .
நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கோ ,நான் என் வாழ்க்கைய பார்த்துக்கிறேன் .இனிமே என் வாழ்க்கைல வந்து குறுக்கிடாதே .
பாசம் பைத்தியக்காரத்தனத்தின் அடையாளம்ன்னு இன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன் ஜாஸ்மின் .இந்த உலகம் பணம் இல்லைன்னா எவ்வளவு கேவலமா பார்க்கும் ,ஒதுக்கும்னு இன்னைக்கு உன் மூலமா புரிஞ்சுக்கிட்டேன்
இங்க நல்ல குணம் ,நல்ல மனம் எவனும் -எவளும் பார்க்கிறது இல்லை .நல்ல வேலை ,நல்ல சம்பளம் அப்புறம் சொத்து இருந்தா தானே மதிப்பீங்க .இத்தனை நாளா எனக்குன்னு ஒரு ஜீவன் இருக்குன்னு ரொம்ப லூசுத்தனமா நம்பியிருக்கேன் .என் நம்பிக்கை எனக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்து இருக்கு உன்னையும் சேர்த்து !!
இங்க பாரு இர்பான் வாழ்க்கை சினிமாயெல்லாம் கிடையாது ..எந்த ஒரு விஷயத்தையும் பிராக்டிக்கலா பார்க்கணும் .உன்னை காலேஜ் படிக்கும் போது உண்மையா லவ் பண்ணேன் ஒத்துக்குறேன் ..நீ படிப்பை விட உன் சினிமா பேஷன் தான் முக்கியம்னு உங்க அப்பா -அம்மா சேர்த்து விட்ட இன்ஜினியர் படிப்பை தூக்கி போட்டிட்டு சினிமாவுல சாதிக்க போறேன்னு போனியே என்ன ஆச்சு ??
வருஷம் போனது தான் மிச்சம் ..உங்க வீட்ல கூத்தாடி பொழப்பு எல்லாம் எதுக்குடா ???மார்க்கத்துக்கு ஆகாத ஹராமான விஷயமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு எதுக்குடான்னு உன்னை காரி துப்பியும் கூட நீ திருந்தினியா ??
பிலிம் மேக்கிங் ,ரைட்டிங் ,டைரக்சன் மயிறு மட்டைன்னு பேசி ,நீ உப்புமா படத்துல கால்தூசி பெறாத பேட்டா வாங்கிட்டு எடுபுடி வேலை செஞ்சதை தவிர உன் வாழ்க்கைல என்ன புடுங்கி இருக்க ??
நம்ம ஜமாத் பசங்கள பாரு அதிகமா படிக்கலைன்னாலும் பத்தாம் கிளாஸ் படிச்சதுமே பாஸ்போர்ட் எடுத்திட்டு அரபுநாட்டுல போய் கூலி வேலை பார்த்தாவது குடும்பத்தை காப்பாத்துறானுங்க ..தடிமாடு வயசு ஆவுதே நீ உன் குடும்பத்துக்கு என்ன பண்ண ??
உன் அம்மாவுக்கு ஒரு முழம் பூவு வாங்கி கொடுத்து இருக்கியா ?ஐம்பது வயசு ஆகுதே உன் வாப்பாவின் உழைப்பு சுமையை குறைச்சு வச்சு இருக்கியா ??அடலீஸ்ட் உன் தங்கச்சிக்கு பீரியட் டைம்ல உன் சொந்த காசுல ஒரு நாப்கினாவது வாங்கி கொடுத்து இருக்கியாடா ??
இப்படி பட்ட உன்னை நம்பி என்னை காத்திருக்க சொல்றியாடா ??
இங்க பாரு ஜாஸ்மின் நீ சொல்லுறது எல்லாமே சரிதான் .ஆனா சினிமா என் குருதியில ஊறிப்போன ஒண்ணு பணத்துக்காக நான் சினிமாவை தேர்ந்தேடுக்கலை அது என்னோட பேஷன் ,உயிர் எல்லாமே சினிமா தான் .நிச்சயமா இந்த ஊரு உலகம் வியக்குற மாதிரி ஒரு நல்ல படத்தை எடுத்து ஜெயிப்பேன் ..எங்க அம்மா ,வாப்பா ,தங்கச்சி தேவைகளை எல்லாம் நிச்சயம் ஒருநாள் பூர்த்தி செய்வேன் ..என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஜாஸ்மின் ..
காலேஜ் படிக்கும் போது என் கதைகளை படிச்சிட்டு நீ பெரிய ஆளா வருவேன்னு நீ தானடி எனக்கு முதல் நம்பிக்கை கொடுத்த ??
இப்ப நீயே உதவாக்கரை ,ஒண்ணுத்துக்கும் உருப்படாதவன்னு சொன்னா நான் எங்கிட்டுடி முறையிடுவேன் ??
இந்த இக்கட்டான சூழ்நிலையில நீதானடி எனக்கு ஆதரவா இருக்கணும்,பேசணும் ??
இங்க பாரு இர்பான் ஏதோ காலேஜ் படிக்கும் போது காதல் மயக்கத்துல சினிமாத்தனமா பேசி உனக்கு நம்பிக்கை வளர்த்திட்டேன் ஆனா வெறும் கனவுகளும் ,ஆசைகளும் வாழ்க்கைக்கு உதவாது ..
உன்னை நம்பி இனிமே என்னாலே காத்துக்கிட்டு இருக்க முடியாது ..எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது .எனக்கு நல்ல வேலையில உள்ள மாப்பிள்ளையை வீட்ல பார்த்து இருக்காங்க ,நானும் அவரையே கட்டிக்க ஓகே சொல்லிட்டேன் ..பையனும் வீட்டுக்கு ஒரே பிள்ளை ,நல்லஅழகு ,சொத்து வேற நிறைய இருக்கு ..இந்த வர்ற வாய்ப்பை வேண்டாம்னு சொன்னேனா என்னை போல பைத்தியக்காரி இந்த உலகத்துல கிடையாது ..
காதல் வாழ்க்கையோட ஒரு பகுதி தான் அதுவே முழு வாழ்க்கையும் கிடையாது ..உன் வாழ்க்கைல நடந்த நம்ம காதல் அத்தியாயத்தை கனவு போல நினைச்சு மறந்திடு …
குட்பை …எல்லாத்துக்கும் சேர்த்து தான் …
பதில் பேச வார்த்தைகளிலிருந்தும் அவன் மௌனம் காத்தான் ..பேசாத மௌனங்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கு ..கண்ணீர் கடல் அவனையும் அறியாமல் பூமியை நனைத்தது ..கண்ணீர் நல்லது ,வலிகளை குறைக்கும் அவள் காலடி சுவடுகளை கண்ணீர் அறிந்த கண்கள் அந்த திசையை அவள் கடக்கும் வரை பார்த்து கொண்டே இருந்தது ..
சில வருடங்களுக்கு பிறகு …
யோவ் ….இர்பானு ..என்னமா கதை எழுதி இருக்கேயா ,WHAT A WRITING ??வேற லெவல் யா ??
ஏமாத்திட்டு போற ஹீரோயின் ,ஹீரோ அவளை அடிப்பானா ??கொல்வானான்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப ,அந்த காதலையும் ,காதலியையும் கடைசிவரைக்கும் மறக்காம எல்லாவற்றையும் கடந்து போய் தன்னுடைய லட்சியத்திலும் ஜெயிக்கிற மாதிரி கதையா செமயா இருக்கு ..இது மாதிரி பாசிட்டிவ் வைப்ரசன் உள்ள கதைதான் எனக்கு பிடிக்கும் ..இப்பவெல்லாம் தான் ஒருதலையா காதலிக்கிற பொண்ணு காதலிக்கலைன்னா ஆசிட் ஊத்துற கலிகாலம்யா ,பொம்பள புள்ளைய பெத்தவனெல்லாம் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு வாழுறான் ..இப்படிப்பட்ட சூழ்நிலையில இதுபோல தான் படம் எடுக்கணும்யா ..
ஒரு டைலாக் எழுதியிருக்க பாரு ??
உன்னை ஒருத்தங்க ஏமாத்திட்டா கோபப்படாதே ,கடந்து போ ..இந்த வாழுற வாழ்க்கை ஒவ்வொருத்தங்க மூலமா ஒவ்வொரு விஷயத்தையும் கற்று கொடுக்கும் .கற்றுக்கொடுத்தவனை குருவா பாரு ,விரோதியா பார்க்காத ..நல்லது செஞ்சா திருப்பி செஞ்சிடு ,கெட்டது செஞ்சா உன் துரோகிக்கு கூட அதை திரும்ப செய்யாதே, பாசம் பைத்தியக்காரத்தனத்தின் அடையாளம் வேஷம் போடும் மனிதர்கள் மேல அளவுக்கதிகமா வைக்காதேன்னு சொன்னியே அந்த ஒரு வார்த்தை தான்யா திருவாசகம் போல என் மனசுல ஒட்டிகிடுச்சு ..
இந்த கதையை நாம்ம பண்ணுறோம் ..நாளைக்கே நீ ஆபிஸ் போட்டிடு ..இந்தா அஞ்சு லட்சம் அட்வான்ஸ்னு இர்பான் கைகளில் அஞ்சு லட்சத்திற்க்கான காசோலையை வைத்தார் தயாரிப்பாளர் ராயப்பன் ..
ஆமா ராசா …ஒண்ணு கேட்க மறந்திட்டேன் ..
படத்துக்கு என்ன பேரு வச்சு இருக்கே ??
ஜாஸ்மின் !!
முற்றும்.